மெரினாவை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் – ஏன் ? எதற்காக ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்

 

தூத்துக்குடியோடு சேர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் சமூக வலைத்தளங்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் . கிட்டதட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து நடத்திய அறவழிப்போராட்டம் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது .

சரி இந்த ஸ்டெர்லைட் ஆலையால் நடந்த கொடுமை என்ன ? எதற்காக இந்த போராட்டம் இப்போது என தெரிந்துகொள்ளவே இப்பதிவு .

 

ஸ்டெர்லைட் (Sterlite) ஆலையின் பாதிப்பு ?

தூத்துக்குடியில் சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான காப்பர் உருக்காலை செயல்பட்டுவருகிறது . இந்த உருக்காலையில் இருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் இதர துகள்கள் காற்றில் கலந்துவிடுகிறது . நிலத்தடி நீரையும் இந்த ஆலை மாசுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது .

கேன்சரை உண்டாக்கும் ஸ்டெர்லைட் ஆலைகள்

 

இதனால் அப்பகுதி மக்கள் பல நோய்கள் பாதிப்புக்கு உள்ளாயினர் . அதிகபட்சமாக கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டனர் . இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அருகில் அமைந்திருந்த ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒருவராவது கேன்சரால் பாதிக்கப்பட்டனர் .இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது குழந்தைகள் தான் .

இதற்கு ஆதாரமாக , 2013 ஆண்டு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உச்சநீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது . காற்று மாசு மற்றும் நிலத்தடிநீர் மாசு போன்றவற்றை ஏற்படுத்தியதற்க்காக இந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது .

உரிய ஒப்புதல்களை வாங்காமல் செயல்பட்டதற்காக இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் கிழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளது .

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் ஏன் ?(Sterlite Protest in Tuticorin)

ஏற்கனவே பல பாதிப்புகளை உண்டாக்கிக்கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை அகற்றிட வேண்டும் என அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன .

சிலர் கூறும்போது , ஏற்கனவே செயல்பட்டுவந்த காப்பர் உற்பத்தி ஆலைக்கு வழங்கப்பட்டுவந்த உரிமங்கள் முடிவடையும் தருவாயில் அதனை புதுப்பித்து தந்தால் பிரச்சனைகள் வெடிக்கலாம் என்கிற அச்சத்தில் அரசு “விரிவாக்கம்” என்கிற பெயரில் புதிய ஆலையை கட்டமைக்க அனுமதி அளித்திருப்பதாக தெரிகின்றது .

இதுதான் மக்கள் கிளர்ந்தெழ காரணம் .

தொடங்கிய மாபெரும் அறப்போராட்டம் ( Sterlite Protest )

சில கவன ஈர்ப்பு போராட்டங்களும் உண்ணாவிரத போராட்டங்களும் ஏற்கனவே நடந்துவந்த சூழ்நிலையில் கடையடைப்பு போரட்டத்தை நேற்று (மார்ச் 24 ) முன்னெடுத்தனர் .

அதனை தொடர்ந்து இன்று நடந்த அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் நடந்த பேரணியும் அதனை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது .

சற்றேறக்குறைய 50 ஆயிரம் மக்கள் இதில் கலந்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது . ஏற்கனவே ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல லட்சம் இளைஞர் கூட்டம் மெரினாவில் அமைதிப்போராட்டம் நடத்தியதோடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் ஓப்பிடப்பட்டு பேசப்படுகிறது .

பாமரனின் கருத்து :

நாட்டின் வளர்ச்சிக்கு ஆலைகளும் தொழிற்சாலைகளும் அவசியம்தான் . ஆனால் எந்த மக்களுக்காக நாம் இவ்வளவையும் செய்கின்றோமோ அந்த மக்களை பலிகொடுத்துவிட்டு தொழிற்சாலைகளை உண்டாக்குவது என்பது அபத்தம் .

விதிகளை மீறி ஒவ்வொன்றினையும் செய்துவிட்டு , மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் போக்கு தற்போது அதிகரித்து வருகின்றது . இவை அனைத்துமே ஒரு சில பண முதலைகளின் வயிற்றை நிரப்ப அப்பாவி பொதுமக்களையும் அவர்களுக்கு இயற்கை வழங்கியுள்ள வளங்களையும் இரையாக்கிவிடும் கொடுமையே .

மக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சி எந்த பண முதலையையும் , அரசையும் ஒடுக்கிவிடும் என்பதே வரலாற்று உண்மை . அந்த வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தோழர்களே !

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *