பட்டாசு தடை…. காலத்தின் கட்டாயமா?

பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரிய கேள்விகளையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பக்கூடிய மிக முக்கியமான கேள்வி : பட்டாசு மட்டும் தான் காற்று மாசுக்கு காரணமாக இருக்கிறதா? தொழிற்சாலைகள், வாகனங்கள் நாள்தோறும் காற்று மாசினை உண்டாக்கும் போது பட்டாசுக்கு மட்டும் தடை ஏன்?

தமிழகத்தில் இருந்து பட்டாசு தடைக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்கு முக்கியக்காரணம் அது சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சுமார் 8 லட்சம் பேரின் வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் பாதிக்கும் என்ற அக்கரையால் தான் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் நாம் ஒரு பிரச்சனையை நடுநிலமையில் இருந்து பார்த்தால்தான் உண்மையை புரிந்துகொள்ள முடியும். உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவில் பட்டாசு உற்பத்திக்கோ அல்லது வெடிப்பதற்கோ முழு தடை ஏதும் விதிக்கவில்லை என்பதே உண்மை. சரவெடிகள் வெடிக்கக்கூடாது, போரியம் நைட்ரேட் வேதிப்பொருள் கொண்ட பட்டாசுகளை வெடிக்க, தயாரிக்க கூடாது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதில் சில விசயங்களை நாம் கவனிக்க வேண்டும். வாகனங்களுக்கு விதிக்க முடியாத தடையை ஏன் பட்டாசுக்கு மட்டும் நீதிமன்றம் விதிக்கிறது என்ற கேள்வி உள்ளவர்கள் ஓர் அடிப்படை விசயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த உலகமே புவிவெப்பமயமாதல் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடும் இதனை சரி செய்திட கடுமையாக போராடி வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையினை குறைக்க அரசு பல நடவெடிக்கைகளை எடுத்து வருவது உண்மை தான். அதிலே ஒரு பகுதிதான் பட்டாசு தடை என்பது.

ஆனாலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்க எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இவ்வளவு நாட்கள் அதைத்தானே வெடித்தோம் என கேட்கலாம் ஆனால் இவ்வளவு நாட்கள் ஒரு தவறு செய்தோம் என்பதற்காக அதை இனியும் தொடர்வது சரியாகாது அல்லவா. ஆகவே கெடுதல் விளைவிக்கும் வெடிபொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு பசுமை பட்டாசு பக்கம் நாம் நகர வேண்டும்.

ஆனால் பட்டாசு தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் பசுமை பட்டாசு தயாரிக்கும் பார்முலா அவர்களுக்கு சரிவர கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஒருவேளை இது உண்மையாக இருந்தால் தாமதத்திற்கு முழு பொறுப்பேற்று அரசு அவர்களுக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும். பார்முலா கிடைப்பதை வேகப்படுத்த வேண்டும்.

ஆட்சியாளர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவது அவசியமானது தான். அதேசமயம், தொழிலாளர்களின் பிரச்சனையை நீதிமன்றத்தில் கூறி அவர்களுக்கு பலன் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *