எனக்கு கிடைக்காததை கிடைக்கச் செய்த கொரோனா | உங்களுக்கு?
பிள்ளைகளாக பிறந்தால் படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், திருமணம் பிள்ளைகளை பெற்றுக்கொண்டு மீண்டும் நாம் செய்ததை மீண்டும் அவர்களை செய்ய பழக்க வேண்டும். இதனை உடைத்தெறிந்து பலருக்கு ஓய்வளித்து உதவியது கொரோனா.
புவிவெப்பமயமாதல் என்றால் என்ன என்பது குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நாம் வாழுகிற பூமிக்கு புவிவெப்பமயமாதல் காரணமாக பேரழிவு ஏற்படும் என பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கும் பல நாடுகள் ஒப்புக்கொண்டாலும் கூட அதற்காக சிறு துரும்பைக்கூட அந்த நாடுகள் செய்வது இல்லை. காரணம், பொருளாதாரம் என்ற ஒரே காரணம் தான். எங்கே தாங்கள் நடவெடிக்கை எடுக்கப்போய் அதனால் தங்களது பொருளாதாரம் வீழ்ந்து பிற நாடுகள் அதைப்பயன்படுத்தி வளர்ந்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் தான் எந்த நாடும் பெரிதாக எதையும் செய்யாததற்குக் காரணம்.
இது நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதருக்கும் கூட இதே எண்ணம் தான் இருக்கிறது. ஒரு பிள்ளை பிறந்தவுடன் முன்பாவது 5 வயது வரைக்கும் கவலை அறியாது சந்தோசமாக வாழ்ந்தது. ஆனால் இப்போது மூன்று வயதிலேயே அது முடிந்து போகிறது. 3 வயது ஆன உடனேயே ஏதாவது ஒரு பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். அப்போது தொடங்கும் “ஓட்டம்” என்பது இறுதியாக இறக்கும் போது தான் முடிகிறது.
படிக்க வேண்டும், நல்ல வேலையைத் தேட வேண்டும், நல்ல சம்பளம் கிடைக்கும்வரை புதிய வேலையைத் தேட வேண்டும், நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்திட வேண்டும், பிள்ளைகள் இரண்டை பெற்றுக்கொள்ள வேண்டும், அந்தக்குழந்தைகளை மீண்டும் நாம் செய்தது போல செய்திட பழக்கப்படுத்த வேண்டும். இதற்கிடையே ஓய்வு என்பதெல்லாம் கிடையவே கிடையாது.
அனைவருக்குமே ஓய்வெடுக்க ஆசைதான். ஆனால் நாம் ஓய்வெடுக்கும் அந்த நேரத்தில் மற்றவர்கள் முன்னேறிவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் தான் பலர் ஓய்வில்லாமல் ஓடுவதற்கு முக்கியக்காரணமே.
ஆனால் இந்தக் கொரோனா தீமையிலும் பல நன்மைகள் சிலவற்றை செய்திருக்கிறது. இதற்கு நானே சிறந்த உதாரணம் என நினைக்கிறேன். பொறியியல் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நான் கடந்த 7 ஆண்டுகளில் இத்தனை நாட்கள் சொந்த ஊரில் பெற்றோர் உட்பட சொந்தங்களோடு செலவிட்டதே கிடையாது. அதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. ஆனால் கொரோனா பிரச்சனை ஆரம்பித்தவுடன் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் அலுவலகங்கள் திறக்கப்பட இருக்கும் சூழலில் மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்குமா என தெரியவே இல்லை.
கொரோனவால் பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது வருத்தத்திற்கு உரிய செய்திதான், அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை துன்பம் என நினைத்தால் துன்பம் தான். ஆனால் நினைத்துப்பாருங்கள் இவ்வளவு நாட்கள் குடும்பத்தோடு செலவிட்ட நாட்கள் உண்டா என்பதை, நிச்சயமாக இருக்காது. ஆகவே தான் கொரோனா ஒருவிதத்தில் நன்மை செய்திருக்கிறது என கூறுகிறேன்.
கொரோனா உங்களுடைய நடைமுறை வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன? என்னோடு பகிர்ந்துகொள்ள கமெண்ட் செய்திடுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!