தண்ணீர் பிரச்சனை – லாரி ஸ்ட்ரைக் – கண்ணை திறங்க மக்களே
நிலத்தடி நீர் எடுப்பதனை ஒழுங்குபடுத்திடவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நல்ல நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவாக இருந்தாலும் அதனை எதிர்த்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கமானது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தது . இதனால் சென்னையில் தண்ணீர் பிரச்சனை கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே இருந்தது . தற்போது அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது.
இன்னும் சில நாட்கள் போராட்டம் தொடர்ந்திருந்தால் சென்னையில் வணிக வளாகமோ , தனியார் நிறுவனங்களோ , உணவகங்களோ செயல்பட முடியாத சுழலுக்கு தள்ளப்பட்டு இருக்கும் .
நிலத்தடி நீர் – நீதிமன்ற உத்தரவு
நிலத்தடி நீர் மட்டம் அளவுக்கு அதிகமாக எடுக்கப்படுவதனால் எதிர்பார்த்ததற்கு முன்பாகவே தாழ்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது . நமக்கு முந்தைய தலைமுறையில் சிறிது சிறிதாக ஆரம்பித்த வாட்டர் கேன் கலாச்சாரம் இன்று ஏழையோ பணக்காரரோ ஏற்றுக்கொள்ளும் அன்றாட தேவையாக மாறிப்போய் இருக்கின்றது .
விளைவு , தண்ணீர் மிகச்சிறந்த விற்பனை பொருளாக மாற்றப்பட்டுவிட்டது
கடந்த ஜூலை மாதம் நிலத்தடி நீர் சம்பந்தபட்ட பிரச்சனையில் சில முக்கிய தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியிருந்தது .
அதன்படி நிலத்தடிநீர் எடுப்பதற்கான வழிமுறைகள்
நிலத்தடி நீர் எடுப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்
அனுமதி கேட்ட பகுதியில் நிலத்தடிநீர் போதிய அளவு இருந்தால் மட்டுமே அனுமதி
எவ்வளவு நீர் உறிஞ்சப்படுகின்றது என்பதற்கான அளவினை கணக்கிட மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியம் .
நிலத்தடி நீர் மட்டத்தினை கண்காணிக்க வேண்டும்.
இதுபோன்ற பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
தண்ணீர் லாரி ஸ்ட்ரைக்
இந்த உத்தரவின் முதன்மையான தாக்கம் தண்ணீர் லாரி ஸ்ட்ரைக். இதற்கு முதன்மையான காரணம் நிலத்தடி நீர் மட்டம் ஏற்கனவே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட சென்னையிலும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் இனி நிலத்தடி நீர் எடுக்க முடியாது என்பதே . ஆகையினால் தான் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர் .
தண்ணீர் லாரியை நம்பியிருக்கும் சென்னை
தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டதிற்கு மிக முக்கிய காரணம் , சென்னை முற்றிலுமாக அவர்களை சார்ந்தே இருக்கின்றது என்கின்ற இருமாப்பு தான் . போராட்டம் பற்றி கேட்டபோது “நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் எடுக்காமல் இருக்கின்றோம்” என்ற பதிலை கேட்டாலே புரியும் .
லாரி உரிமையாளர்கள் நினைத்ததை போலவே சென்னையும் ஸ்தம்பித்து நின்றது . அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது , பணிந்தது . என்ன உறுதிமொழி கொடுத்தார்களோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது .
அலட்சியமாக நடந்துகொள்ளும் அரசு
நீதிமன்ற உத்தரவு வந்தது ஜூலையில் , இந்த உத்தரவை செயல்படுத்தும்போது கண்டிப்பாக லாரி ஸ்ட்ரைக் போன்றவை நடக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று . அதனால் மிகப்பெரிய பாதிப்பு சென்னைக்கு தான் என்பதும் தெரிந்திருக்கும் . மிக முக்கியத்துவம் வாய்ந்த , எதிர்கால சந்ததிகளை காக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை செயல்படுத்திட வேண்டிய அரசு , அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் லாரி உரிமையாளர்களுக்கு பணிந்து நடப்பது மிகப்பெரிய அலட்சிய நடவடிக்கை .
பெயரளவிற்கு மெட்ரோ வாட்டர் லாரிகளை பயன்படுத்திட மட்டுமே ஏற்பாடு செய்திருந்தது அரசு
மக்களும் அரசும் விழித்துக்கொள்ள வேண்டும்
தண்ணீர் அடிப்படை உரிமை , அதனை மக்களுக்கு இலவசமாக கொடுக்கவேண்டியது அரசின் கடமை . இதனை அரசும் மக்களும் உணர வேண்டும் . அரசு உணராத பட்சத்தில் மக்கள் அதற்காக போராட வேண்டும் . வெறுமனே ஓட்டை செலுத்திவிட்டு ஒதுங்கி போவது நல்ல குடிமகனுக்கான அடையாளம் .