சென்டினல் பழங்குடியின மக்கள் | ஆலன் கொலை | அவர்கள் போக்கில் அவர்களை வாழவிடுங்கள்
சமீபத்தில் சமூகவலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு பகிரப்பட்டதில், சென்டினல் மக்களும் அடங்குவார்கள். கடவுள் பற்றிய கிருபையை போதிப்பதற்காக, அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் என்பவர் அந்தமானில் உள்ள செண்டினல் தீவிற்கு சென்றுள்ளார். ஆனால், சென்டினெல்ஸ் பகுதியில் வாழும் பழங்குடி மக்களால் ஆலன் அவர்கள் கொல்லப்பட்டது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு : இந்த கட்டுரையை எழுதியிருப்பவர் க. வினோத்குமார். உங்களது கட்டுரையும் இங்கு இடம்பெற வேண்டுமென விருப்பமா? உடனே எழுதி அனுப்புங்கள்
Email : admin@pamarankaruthu.com
யார் இந்த பழங்குடி மக்கள்?
அந்தமான் தீவில் கிரேட் அந்தமானிஸ் , சென்டினெல்ஸ் , ஒன்ஹே மற்றும் ஜாராவா என்னும் நான்கு வகையான பழங்குடி மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே வெளியுலகுடன் தொடர்பில் இல்லாதவர்கள். காடுகளில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வேட்டையாடுதலினால் கிடைக்கும் மாமிச உணவுப்பொருட்களை கொண்டு வாழ்ந்துவருகின்றனர். இவர்களை பாதுகாக்கும் வகையில் இந்திய அரசு, 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘தொல் பழங்குடியினர் பாதுகாப்பு’ சட்டத்தின்படி, அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் வெளியுலகத்தினர் செல்ல தடை விதித்தது.
அழியும் நிலையில் ஜாராவா மக்கள்?
1970 களில் மத்திய மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளை இணைப்பதற்காக டிரங்க் பாலம் அமைக்கபட்டது. இந்த பாலமானது, ஜராவா பகுதி மக்கள் வசிக்கும் இருப்பிடம் வரை சென்றது. அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட சில சுற்றுலா நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களிடம் பழங்குடி மக்களின் வாழ்வியல்முறைகளை காட்டுகிறோம் எனக்கூறி பணம் வசூலிப்பதாக கூறப்படுகின்றது. மேலும் சுற்றுலா செல்லும் மக்கள், தாங்கள் கொண்டு சொல்லும் உணவுப்பொருட்களை அவர்களுக்கு வீசுகின்றனர். அதை உட்கொள்ளும்போது, முறையற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் மாசுக்களால் நோய்த்தொற்று ஏற்பட்டு அவர்களின் மக்கள் தொகையானது வெகுவாக குறைந்துள்ளது.
கடத்தல்காரர்கள் மற்றும் வெளியுலக வேட்டைக்காரர்களின் படையெடுப்பால் எண்ணற்ற ஜாறாவா பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இதன் காரணமாக, 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அந்த சாலையை மூட உத்தரவிட்டது ஆனால் அந்த சாலையானது இன்றளவும் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஜவாராவில் வாழும் மக்களின் எண்ணிக்கை 380 மட்டுமே.
ஜான் ஆலனும் சென்டினல் தீவும்
சில நாட்களுக்கு முன்பு , அமெரிக்காவின் மதபோதகர் ஜான் ஆலன் என்பவர் தன் மதத்தின் தன்மையை போதிப்பதற்காக அந்தமானின் சென்டினல் தீவிற்கு சென்றுள்ளார் (சென்டினல் தீவில் நுழைய வெளியுலகத்தினர் செல்ல அனுமதியில்லை என்பதை அறிந்தும்). இதனை அவர் சென்டினல் தீவுக்குள் நுழையும் முன்னர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் , சென்டினல் மக்களால் அம்பெய்தி ஆலன் கொல்லப்பட்டார். உண்மையில் , சென்டினல் மக்கள் ஆலனை திட்டமிட்டு கொன்றதாக தெரியவில்லை மாறாக தன் இனத்திற்கும் இருப்பிடத்திற்க்கும் ஆலனால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் கொன்றிருக்கலாம்.
தடை செய்யப்பட்ட பகுதி என்றறிந்தும் , ஆலன் அவர்கள் உள்ளே செல்ல காரணம் என்ன?
தங்களின் மதபோதனைகளை அவர்களின் மீது திணிப்பதால் அவர் அடையும் இலாபம் என்ன?
நவநாகரீக வாழ்க்கை அவர்களுக்கு வேண்டாம்
இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும் அவர்களுக்குள் மதத்தை பரப்பி , பிரிவுகளை உண்டாக்கி , சாதியை வளர்த்து , சாதிக்கொரு தலைவனை உருவாக்கி, அவன் வாழ அவர்களை அடிமையாக்கி , அவர்களிடமிருந்தே வரி என்ற பெயரில் பணம் வசூல் செய்து, பதவிக்காகவும் பகட்டுக்காகவும் பிரச்சனையை ஏற்படுத்தி தமக்குள்ளே ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு, தம்மைத்தாமே அழித்துக்கொண்டு வாழும் நவநாகரீக வாழ்க்கை அவர்களுக்குள் வேண்டாமே?
அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்யவேண்டுமென்று நினைத்தால் , அவர்கள் போக்கில்
அவர்களை வாழவிடுங்கள். அதுவே அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி.
க. வினோத்குமார் [வாசகர் கட்டுரை]