ஆயுதங்களை விட புத்தகமே வலிமையானது நண்பர்களே

வாழ்க்கையை தீர்மானிப்பது கல்லூரிப்பருவம் தான், வீணாக்கிவிடாதீர்கள்
பொது இடத்தில் தாக்கிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்

பெயர் அறியா ஊரில் இருந்தும் ஏழைக்குடும்பங்களில் இருந்தும், படித்தால் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பிழைத்துக்கொள்ளலாம், நம் நிலையில் இருந்து முன்னேறிவிடலாம் என நினைத்து தான் பலர் படிக்க வருகிறார்கள். அப்படி பிழைத்துக்கொள்ளலாம் என படிக்க வருகிறவர்களை “நீ முயன்றால் பெரிய சாதனையாளனாகவே கூட உயரலாம்” என்ற புதிய சிகரத்தை காட்டி நீ அதை நோக்கி பயணி என கூறுவது தான் கல்லூரிப்பருவம். கல்லூரிகளில் அப்படி இப்படி என இருந்த பலர் பின்னாட்களில் அதுகுறித்து வருத்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

அண்மையில் தலைநகரம் சென்னையில் நடக்கின்ற நிகழ்வுகள் நமது மனதுக்கு சங்கடத்தை தருகிறது. மிகவும் சந்தோசமாக நண்பர்களுடன் கலந்து பேசி தனது எதிர்காலத்துக்கான அடித்தளத்தை போட வேண்டியவர்களின் கரங்களில் கத்திகளும் ஆயுதங்களும் இருப்பதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. எதிர்கால இந்தியாவை கட்டமைக்க வேண்டிய பொறுப்புள்ள இளைஞர்களான இவர்கள் அதனை உணராமல் இப்படி நடந்துகொள்கிறார்களே என்ற வருத்தத்தில் தான் இந்தப்பதிவு.

நண்பர்களே இதைக்கேளுங்கள்

தமிழக பள்ளி மாணவர்கள்

நண்பர்களே நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறோம். இன்று கஷ்டப்பட்டு நமது பிள்ளையை படிக்கவைத்துவிட்டால் நாளை அவன் கஷ்டப்படமாட்டானே என்ற சிந்தனையில் தான் ஒவ்வொரு பெற்றோரும் கடன் வாங்கியாவது பிள்ளைகளை படிக்க அனுப்புகிறார்கள். ஆனால் நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள், அவர்களின் ஆசையை முறியடித்துவிட்டு மீண்டும் அதே பள்ளத்திற்குள் இருக்கத்தான் இப்படி நடந்துகொள்கிறீர்கள்.

உங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டி இந்த பதிவு இல்லை, மாறாக சற்று சிந்தித்து பாருங்கள் என ஒரு கைகாட்டியாக இருப்பதற்காகத்தான் இந்தப்பதிவு. லஞ்சம். ஊழல், குற்றம், கொள்ளை, ஏமாற்றுதல் என எத்தனையோ கொடுமைகள் இந்த தேசத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றை பார்க்கும் போது உங்களுக்கு வராத கோபம் உங்கள் வகுப்பில் உங்களது சகோதரனாக இருக்கும் ஒருவன் ஏதோ செய்துவிட்டான் என்பதற்க்காக வருவது நியாயமா? இன்னும் பத்து வருடம் கழித்து நீங்கள் அந்த நண்பரை பார்த்தால் உங்களது கோபம் நிலைக்குமா? அன்று நாம் பெரிய தவறு செய்துவிட்டோமே என எண்ணத்தோன்றாதா? ஆகவே சற்று சிந்தித்துப்பாருங்கள்.

கைது செய்வதை விட காரணத்தை கண்டறியுங்கள்

இளமைப்பருவம் என்பது துடிப்பான பருவம், முடிவுகளை விரைவாக எடுக்கக்கூடியபருவம். அப்படிப்பட்ட பருவத்தினரை கொண்டிருக்கின்ற கல்லூரிகளில் அவர்களுக்கு வெறும் பாடங்களை மட்டுமே நடந்திடாமல் அவர்களது பண்பு நலன்களை சிறந்ததாக மாற்றி அமைக்கக்கூடிய விதங்களிலான வகுப்புகளையும் நடத்திடவேண்டியது அவசியம். இப்படிப்பட்ட தவறுகளில் ஈடுபடும் மாணவர்களை கைது செய்வதனை காட்டிலும் அவர்கள் ஏன் இப்படி நடந்துகொண்டார்கள்?

ஏன் அவர்களுக்கு எதிர்காலம் குறித்த அக்கறை இல்லாமல் போனது? நாம் இப்படி செய்தால் நமது எதிர்காலம் பாதிக்கப்படுமே என ஏன் அவர்கள் எண்ணவில்லை? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை ஆராய்ந்து அவர்களை நல்ல வழியில் கொண்டு செல்வதே நல்ல சமுதாயத்தை கட்டமைக்க உதவும், அவர்களுடைய வாழ்வும் சிறக்க உதவும். சென்னையை ஒட்டுமொத்த தமிழகமும் கவனித்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் இங்கு செய்வதை பின்பற்றி நாளை இன்னொரு இடத்தில் செய்வார்கள். ஆகவே நீங்கள் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டும் கல்லூரி நண்பர்களே! செய்வீர்கள் என நம்புகிறேன்.


இதுபோன்ற பதிவுகளை படிக்க Subscribe செய்திடுங்கள். உங்களது Whatsapp இல் பெற இந்த லிங்கை கிளிக் செய்திடுங்கள்




எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *