பாரதியார் ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா? அதிர்ச்சி தரும் ஒரு உண்மை
பாரதியார் பற்றி நாம் பெருமைமிகு வரலாற்று விசயங்களை படித்து கொண்டாடி இருப்போம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அவரது முழக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் இந்தியர்களை எழுச்சி அடையச் செய்தது என்றால் மிகையாகாது. ஆனால், நாம் இந்தப்பதிவில் படிக்கப்போகும், ஆங்கிலேய காலத்திய சென்னை மகாண கவர்னருக்கு பாரதியார் எழுதிய கடிதம் அவர் மீது நாம் கொண்டிருந்த கருத்தில் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம். எழுச்சிமிகு எழுத்தாளர் பாரதியாரா இப்படியொரு கடிதத்தை எழுதினார் என நம்மை நினைக்க வைக்கலாம், எத்துனை மன உறுதி கொண்டவரையும் ஆங்கிலேயே அடக்குமுறை எவ்வாறு முடக்கி போட்டுள்ளது என்பதையும் உணர வைக்கலாம்.
பின்வரும் பதிவுகள் ‘காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை சீனி.விஸ்வநாதன் எழுதியுள்ளார்.
1912ஆம் ஆண்டு முதற் கொண்டே பாரதிச்குத் தமிழகம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது. அதனால், பிரிட்டிஷ் அரசின் கருத்தை அறிந்துகொள்ளச் சென்னை மாகாணக் கவர்னருக்குக் கடிதங்கள் எழுதினார். அரசுத்தரப்பில் பாரதிக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. அரசின் போக்கால், அதுசமயம் தமிழகம் திரும்பும் எண்ணத்தைப் பாரதி கைவிட்டார்.
ஆனால், 1914ஆம் ஆண்டில் அவர் மீது வழக்குத்தொடரப்படும் என்று சட்டசபையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமக்கு நீதி கிடைக்கு வேண்டும் என்று பல வசைகளில் பாரதி முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இதனிடையில், எதிர்பாராத விதமாக 1914ஆம் ஆண்டிலே, இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கம் இடையே போர் மூண்டுவிட்டது..
போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இங்கிலாந்தும் பிரான்ஸும் நேச நாடுளாக புதிய உறவைக் கொண்டுவிட்டன. இந்தப் புதிய உறவைப் பயன்படுத்திக்கொண்டு, இங்கிலாந்து பிரான்ஸுடன் உடன்படிக்சைகளைச் செய்துகொண்டது.
புதிய உடன்படிக்கை ஒப்பந்த ஏற்பாட்டால், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் எனச் சந்தேகப்படும் எவரையும் பிடித்துக் கொள்கிற அதிகாரத்தைப் பிரிட்டிஷ் அரசு பெற்றது.
புதுச்சேரியை அடைக்கலம்கொண்டிருந்த பாரதி உள்ளிட்ட தேச பக்தர்களுக்கு நெருக்கடி. ஏற்பட்டது. எந்த நேரத்திலும் தாங்கள் நாடு கடத்தப்படலாம் என்ற நிலை உருவானதால், தாங்களே வெளியேறி விடலாம் என்ற யோசனையும் தோன்றிவிட்டது.
தொடர்ந்து புதுச்சேரியில் இருக்க முடியாது என்ற எண்ணம் பாரதிக்குத் தோன்றிவிடவே, தமிழகம் திரும்ப முடிவு செய்து விட்டார். 1918 நவம்பர் 20ஆம் தேதி பாரதி புதுச்சேரியை விட்டுக் கிளம்பி விட்டார்; பிரிட்டிஷ் எல்லைக்குள் காலடி. எடுத்து வைத்து, கடலூரை வந்தடைந்தபோது பாரதி கைது செய்யப்பட்டார்; அவருடைய ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பாரதியின் விடுதலைக்காகச் ‘சுதேச மித்திரன்’ ஏ. ரெங்கசாமி அய்யங்கார், மணி ஐயர், சிபி. இராமசாமி அய்யர், துரைசாமி அய்யர், அன்னிபெஸண்ட் அம்மையார் – ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலைமையில், பாரதியைப் போலீஸ் அதிகாரி ஹானிங்டன் ஜெயிலில் சந்தித்துப் பேசினார். இதனால், பாரதி விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பாரதி விடுதலைக்கான அறிகுறி தென்படவில்லை. இந்தச் குழ்நிலையில்தான் பாரதி சென்னைக் கவர்னருக்கு மனு செய்துகொண்டார்.
பாரதியார் சென்னை மகாண கவர்னருக்கு பின்வரும் மனுவை எழுதினார். அதன் தமிழாக்கம் தான் இங்கே தரப்பட்டுள்ளது.
பெறுநர்,
மாட்சிமைதாங்கிய பெண்ட்லன்ட் பிரபு,
கவர்னர்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சி.சுப்ரமணிய பாரதியின் பணிவான விண்ணப்பம்.
மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு இது இனிதாக இருக்கட்டும்.
புதுச்சேரியில் இருந்து என் சொந்த மாவட்டமான திருநெல்வேலி செல்லும் வழியில் கடலூரில் நான் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.
எனது விஸ்வாசத்தைத் தெரிவித்து பல வாக்குறுதிகள் அளித்த பிறகு என்னை நேரில் சந்தித்து உரையாட மாட்சிமை தாங்கிய பிரபுவின் அரசு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்-டி.ஜ.ஜி. (சி.ஐ.டி.) அவர்களை புதுவைக்கு அனுப்பியது மாட்சிமைதாங்கிய தங்களுக்கு நினைவிருக்கும்.
அந்த உரையாடலின்போது அரசாங்கம் தொடர்பான எனது அணுகுமுறையில் முழுவதும் திருப்தி அடைந்த டி.ஐ.ஜி. அவர்கள், முற்றிலும் போர்க்காலத்தைக் கணக்கில் கொண்டு, மெட்ராஸ் மாகாணத்தின் ஏதாவது இரண்டு மாவட்டத்தில் காவலில் இருக்க விருப்பமா என்று என்னிடம் கேட்டார். அந்த யோசனைக்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.
ஏனெனில், அரசியலை முற்றிலும் விட்டொழிப்பதாக நான் அறிவித்த பிறகு, போர் நடந்துகொண்டிருக்கும்போதுகூட, என் நகர்வுகளைத் தடுப்பதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இப்போதோ போர் முடிந்துவிட்டது. அதிலும் நேச அணியினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் அமைதியான ஒரு குடிமகனாக பிரிட்டிஷ் இந்தியாவில் குடியமர்ந்து வாழ்வதற்கு எனக்கு எந்த சங்கடங்களும் நேராது என்று முழுவதும் நம்பி புதுச்சேரியில் இருந்து கிளம்பி வந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நான் கைது செய்யப்பட்டு கடலூர் மாவட்டச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளேன். இந்தச் சிறை நிலைமையை நீளமாக விவரித்து மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு சோர்வை ஏற்படுத்த விரும்பவில்லை.
ஆனால், இந்தச் சிறை நிலைமைகள் என்னைப் போன்ற பிறப்பும், அந்தஸ்தும் உடைய ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல, என் உடல் நலனுக்கு அபாயத்தை விளைவிக்கும் சாத்தியங்களையும் கொண்டுள்ளவையும்கூட.
மாட்சிமைதாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகிவிட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும்.
மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்கவேண்டுமென யாசிக்கிறேன்.
-சி.சுப்ரமணிய பாரதி
பாமரன் கருத்து
பாரதியாரைப் பற்றி குறைத்து மதிப்பிட வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்தக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதை இங்கே வலியுறுத்திக்கூற விரும்புகிறேன். பாரதியாரின் ஒவ்வொரு எழுத்தும் அன்றும் இன்றும் தேசப்பற்றினை, சமூகப்பற்றினை வளர்த்தெடுக்க உதவுகிறது என்றால் மிகையாகாது. பாரதியார் எப்படிப்பட்ட மன உறுதி கொண்டவர் என்பதை அவரது வரலாற்றை வாசிக்கும் போது நம்மால் அறிய முடிகிறது. ஆனாலும், பாரதியார் தனது இறுதிக்காலத்தில் சிறைவாச கொடுமையை அனுபவிக்க முடியாமல் மன்னிப்பு கடிதத்தை ஆங்கிலேயே கவர்னருக்கு எழுதி இருக்கிறார் என்பதை அறியும் போது நம்மால் அதை நம்பவே இயலவில்லை. ஆனால், அது உண்மை என்பதையும் நம்மால் மறுக்க முடியாது. ஒருவரது வரலாற்றை அறியும் போது முழுவதுமாக அறிந்துகொள்ளல் வேண்டும் என்பதற்காகவே இந்தக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.ஆங்கிலேயே அடக்குமுறை எப்பேர்பட்டவரையும் ஒடுக்கிவிடும் என்பதற்கு பாரதியின் கடிதம் ஓர் உதாரணம்.