பாரதியார் கவிதைகள் : பாரத தேசம் – உரை விளக்கம்

பாரதியார் வாழ்ந்த நாட்கள் என்பது அவ்வளவு சுகமான நாட்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு தான் பாரதியாரின் கவிதைகளை வாசித்தால் அன்றைய இந்தியாவின் சூழல், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள், அவருடைய தேசப்பற்று, தன் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்கிற விசாலமான பார்வை நமக்கு எளிதில் புலப்படும். பாரதியார் கவிதைகளுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு வை.ஏ. மூர்த்தி அவர்கள் சிறப்பான உரை விளக்கம் எழுதி இருக்கிறார். பாரதி பாடல்கள் உரை விளக்கம் என்ற அந்த புத்தகம் மிகவும் பழமையான புத்தகம். அதை நான் படித்து மகிழ்ந்தது போல நீங்களும் படித்து மகிழ்வுற வேண்டும் என்ற நோக்கில் உங்களுக்கு அதை இங்கே தருகிறேன். 

தேடி சோறு நிதம் தின்று – பாரதி பிறந்தநாள் பகிர்வு

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.


1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.


2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.


3. வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.


4. முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.


5. சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.


6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.


7. காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.


8. பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்.


9. ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.


10. குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்


11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.


12. காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.

பொருள் :

அடி-மேலைக்கடல் : தென்பாலுள்ளதும் மேற்கே கிழக்கே உள்ளதுமான கடல்கள்
பள்ளித்தலம் : சமணப்பள்ளி, புத்தப்பள்ளி,முகமதிப்பள்ளி முதலாகிய பல கோவில்கள்
சேது : மன்னாருக்கு எதிரிலுள்ள இந்திய நாட்டின் தரைப்பகுதி
வீதி சமைத்தல் : தெரு அமைத்தல்
மையத்து நாடுகள் : இந்திய உபகாண்டத்தில் நடுவில் உள்ள நாடுகள்
கனி : சுரங்கம்
நந்தி : விரும்பி
மாறு கொள்ளல் : பண்டமாற்று செய்தல்
ராசபுதனம் : ராஜபுத்திரம், வாடா இந்திய நாடுகளுள் ஒன்று
கன்னடம் : மைசூர் ராஜ்ஜியம்
தலை சாயுதல் : சோம்பி இருத்தல்
வண்மை : வேண்டியார்க்கு வேண்டியன கொடுத்தல்
நடையும் பறப்பும் : தரையில் இயங்குவன, ஆகாயத்தில் சஞ்சரிப்பன
மந்திரம் : அரசியலமைப்பு முறை
தந்திரம் : படை வாய்மை
அமிழ்தம் : தேவாமிருதம், தேவைகள் உண்ணும் சாகா மருந்து

பாரத தேசம் பழம்பெருமை வாய்ந்தது. தெய்வ பக்தியால் கல்வியால் தொழிலால் பண்பாட்டினால் உயந்தது. இப்படியான தேசம் அந்நியர்களுக்கு அடிமையாகி சீர்கேடுற்ற காலத்திலே தான் பாரதி வாழ்ந்தார். பண்டிருந்த பாரதத்தை தம் புலமைக் கண்களால் கண்டார். அதனை மீண்டும் காண வேண்டும் என்று விழைந்தார். தாம் மட்டும் விழைந்ததோடு நின்றுவிடாமல் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அந்தத்துடிப்பை தூண்டிவிட்டார்.


வறுமைப் பேயினால் ஏற்படும் பயத்தையும் மனிதன் தனக்குள்ளேயே வளர்த்து வரும் துயரமாகிய பகையையும் வெல்ல வேண்டுமானால் பாரத தேசத்தின் புகழையும் பெருமையையும் நினைத்துக்கொள்ள வேண்டும். பாரத தேசமென்று பெயர் சொன்னாலே வறுமையும் போய்த் துயரமும் மறைந்து விடும் என்பது கவிஞரின் கருத்து. இக்கருத்தை அமைத்துப் பல்லவியாக எடுக்கிறார்.
நாட்டிலே வடக்குத் தெற்கு என்ற பாகுபாட்டுக்குக் கவியின் உள்ளத்திலே இடமில்லை வெள்ளி போலப் பளபளக்கும் பனி மூடிய வட இமயச் சிகரங்களும் மேல்திசை தென்திசை கடலும் நமக்குச் சொந்தம். அங்கே உலாவி அவ்விடத்து எழில் கண்டு இன்புறுவோம். இங்கே கப்பல்களை விட்டுப் பல நாடுகளுடன் தொடர்பு கொள்ளுவோம். நாட்டில் பலவித சமயங்கள் உண்டு. எல்லாமே பாரத தேசத்தின் தெய்வ நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.


பல சமயப் பள்ளிகள் எல்லாமே பாரத தேசத்துக் கோவில்கள். இவற்றை எண்ணும்போதே எம் தோல்கள் பூரித்துப்போகின்றன.
சிங்களத் தீவாகிய ஈழத் திருநாட்டையும் தாய் நாட்டுடன் சேர்த்தே கவிஞர் எண்ணுகிறார். தாய் வேறு சேய் வேறு என்ற மனோபாவம் புலவனுக்கில்லை.இடையில் உள்ள சிறு கடலை மேடாக்கிப் பாலம் அமைத்து இணைத்துப் பாடுகிறது கவியுள்ளம். வங்க நாட்டில் பாய்ந்துவரும் கங்கையாற்று நீர் வீணே கடலில் பாய்வதை பாரதியார் விரும்பவில்லை. அதனைத் திருப்பி மத்தியிலுள்ள நாடுகளில் பாயவிட்டுப் பயிர் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். இக்காலத்து நீர்பாசனத் திட்டங்களையும் ஆற்றுப் பாய்ச்சலைப் பொறியியலறிவு கொண்டு திருப்பி வளமற்ற பிரதேசங்களையும் வளப்படுத்த வேண்டுமென்ற கருத்தை இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கவி வெளியிட்டுள்ளார்.


நிலக்கரி, நிலநெய் போன்றஎரி பொருள்களையும் கண்டெடுப்பதற்கு வேண்டிய முயற்சிகள் நடைபெறுவதை நாம் உணர வேண்டும்.


நமது நாட்டு முத்துக்காக நம் தென் கடலை நோக்கி வருபவர் பல்வேறு நாட்டின் வணிகர். அவர்கள் நமக்கு வேண்டியவற்றைக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு நம்மிடத்துள்ளவற்றை வாங்கிச்செல்ல மேல்கரைத் துறைகளுக்கு ஆசையோடு வருவார்கள்.


சிந்துநதி நம்முடையது. அதில் வீடும் நிலவொளி நமக்கு இன்பம் தருவது. சேரநாடு நம்முடையது. அந்நாட்டு அழகுக் கன்னியர் நம்மவர். இனிய தெலுங்கு நமது மொழி. அதில் ஒலிக்கும் தீஞ்சுவைப் பாடல் நமது இசை. பாரத நாடு முழுவதும் நமது நாடு. ஆங்காங்கு காணும் சிறப்புகள் எல்லாம் அந்தப் பகுதிகளுக்கு மட்டும் உரியன அல்ல. அவையெல்லாம் எல்லார்க்கும் உரியன. பாரதியாரின் பரந்த மனப்பான்மை இப்பாடற் பகுதி முழுவதிலும் வியாபித்திருப்பதை நாம் நன்கு உணர வேண்டும். குறுகிய மனப்பான்மை. உடையவர்களுக்கு நாட்டில் இடமில்லை என்பதை பாரதி சொல்லாமல் சொல்கிறார்.


கங்கைக் கரையிலே கோதுமையானால் காவிரிக் கரையிலே வெற்றிலை. இதற்கு அது பண்டமாற்று. வீரமுள்ள மராட்டியருடைய மொழியில் யாத்த கவிதைகளுக்குப் பரிசு சேர நாட்டு ஆனைத் தந்தம். இப்படியாக நாடு முழுவதையும் ஒன்றாக நோக்குகிறது புலமை உள்ளம்.


இன்னும் விஞ்ஞானத்துறையில் “நம் நாடு முன்னேற வேண்டுமென்ற அவா பாரதியின் உள்ளத்தில் தேங்கி வழிந்ததைப் பின்வரும் பாடல்கள் நன்கு தெரிவிக்கும். காசியிலே அறிஞர்கள் பேசும் விரிவுரைகளை தெற்கேயுள்ள காஞ்சியில் இருந்தபடியே கேட்கும் கருவியை நாம் செய்வோம் என்கிறார். ராஜ புத்திர வீரர்களுக்கு கன்னட தேசத்துத் தங்கத்தைப் பரிசளிக்கிறார் புலவர்.


பட்டாடை பருத்தி உடை எல்லாம் செய்து மலை மலையாகக் குவித்துப் பல தேசத்திலிருந்தும் பணம் கொண்டு வருகிறவர்களுக்கு விற்று நம் நாட்டுப் பொருளாதாரத்தை விருத்தி பண்ணுவோம் என்பதை விளக்கக் கட்டித் திரவியங்கள் கொண்டு வரும் காசினி வணிகர் என்கிறார்.


ஆயுதங்களும் காகிதங்களும் நாமே செய்ய வேண்டும். இதற்காக ஆலைகளும், தொழில் வளர்வதற்கேற்ற கல்விச்சாலைகளும் நம் நாட்டிலேயே உண்டாக்க வேண்டும். அவற்றிலே ஓயாது உழைத்தல் வேண்டும்.நமக்குச் சோம்பல் ஆகாது. நாம் சத்தியத்தையே உயிராகக் கொண்டு நடக்கவேண்டும். இல்லாதவர்க்கு உள்ளவர் கொடுத்து இல்லை என்ற சொல் இல்லையாகும்படி வாழ்வோம்.


குடைகள் செய்வோம் என்றவர் உழுபடைகள் செய்வோம் என்கிறார். கோணிச்சாக்குகள் செய்வதும் இரும்பாணிகள் செய்வதும் பாரதியாருடைய கண்களில் மதிப்பிற்குரிய தொழில்களேயாம். விண்ணிலும் மண்ணிலும் உலாவும் கடுகதி வாகனங்கள் எல்லாம் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். கப்பல்கள் ஒன்றிரண்டல்ல, பலப் பலவாகச் செய்து கடல்களில் மிதக்கவிடுவதால் கடல் நீரே பொங்கித்துறைகளை நெருக்கி ஞாலத்தை நடுங்கவைக்க வேண்டும் என்றல்லவா கவியுள்ளம் கனவு காண்கிறது?


நாம் மந்திரங்களைக் கற்பதுபோலக் கைவினை தந்திரங்களையும் கற்போம். ஆகாயத்தை அளப்போம். கடலை அளப்போம் என்று சொல்வதோடு அவர் நின்றுவிடவில்லை. நாட்டிலே சாலைகளும் வீதிகளும் சந்திளும் பெருக்குவதோடு அமையாது. சந்திர மண்டலத்துக்கும் போய் அதன் இயல்புகளைத் தெரிந்து மீள்வோம் என்று பாரதியார் இற்றைக்கு அறுபது வருஷங்களுக்கு முன்பே சொல்லிவிட்டார் என்றால் அவருடைய தீர்க்க தரிசனத்தை நாம் என்னென்போம்.


காவியங்கள், கலைகள், ஓவியங்கள் மட்டும்தான் பாரத நாட்டின் கைவண்ணமல்ல. காடு வளர்த்து நாட்டின் செல்வம் பெருக்க நம்மால் முடியும். கொல்லர் உலைகளை வளர்த்து ஊசிகள் செய்வதுடன் இன்றுவிடாமல் அந்த உலைகளை அணு உலைகளாக்கி உலகத் தொழில் அனைத்தும் நம்மால் செய்யவும் முடியும் என்று பாரத நாட்டின் பெருமையை எண்ணி இறும்பூரத் தெய்கிறார் கவி.


இப்படியெல்லாம் செய்தாலும் தமிழ் மூதாட்டியான ஒளவை சொன்னதை நாம் அமிழ்தென மதிப்போம். அதன்படியே நடப்போம். சாதிகள் இரண்டேதாம்! வேறில்லை. நீதி நெறியின்படியொழுகிப் பிறற்குதவும் நேரிய வாழ்வுடையவர் மேலவர். மற்றவர் கீழ் வகுப்பார். இதுவே நம் பாரத பண்பு.ஆதலால், பாரத தேசமென்று பெயர் சொல்பவர் வறுமைப் பயத்தைக் கொள்பவராவார். அவர் துயரமென்னும் உட்பகையை வெல்பவராவர் என்று கூறுகிறார் பாரதியார்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *