நேர்மையாக இருந்து பாருங்க – அதோட சுகமே தனி
நேர்மையாக இருந்தால் கண்களைப் பார்த்து பேச முடியும். கண்களைப்பார்த்து பேசுகிறவர்களை அடிக்கடி பார்க்க முடிவதில்லை. காரணம், நேர்மை தூரமாகிவிட்டது
நன்றாக அயர்ன் செய்யப்பட்ட சட்டை, பேண்ட் போட்ட ஒரு இளைஞன், தோற்றத்தை பார்க்கும் போது நன்றாக படித்த தற்போது ஐடி நிறுவனம் அல்லது அரசு அலுவலகத்தில் பணியாற்றுவதைப்போல இருந்தார். நான் பார்த்த போது ஒரு காவல்துறை அதிகாரியிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தார். ஏன் தெரியுமா நண்பர்களே? சிக்னலில் நிற்காமல் வந்துவிட்டது தான் அவர் செய்த தவறு. அந்த சிக்னல் 90 நொடிகள் மட்டுமே இருக்கின்ற சிக்னல். அதில் நிற்காமல் வந்ததனால் கிட்டத்தட்ட 15 நிடங்களுக்கும் மேலாக நின்றுகொண்டு இருக்கிறார்.
15 நிமிடங்கள் நிற்பதனை விட்டுவிடுங்கள். அந்த காவல் துறை அதிகாரியிடம் கூனிக்குறுகி நின்றுகொண்டு இருந்தார் அந்த இளைஞர். அப்பா அம்மா ஏதாவது சொன்னாலே கோவம் பொத்துக்கொண்டு வருகின்ற எத்தனை இளைஞர்கள் இப்படி யாரென்றே தெரியாதா காவல் துறை அதிகாரிகளின் முன்னால் மிகச்சிறிய தவறுகளை செய்துவிட்டு பதில் சொல்ல முடியாமல் கூனிக்குறுகி நிற்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அசிங்கம். இது தேவையா? ஒருவேளை நீங்கள் தவறு செய்யாத பட்சத்தில் உங்களிடம் காவல் துறை அதிகாரிகள் மரியாதையாக நடந்துகொள்வார்கள். அவர்கள் அப்படி நடக்காவிட்டாலும் நீங்கள் அஞ்சி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்று நாம் அரசியல்வாதிகளை பிறருக்கு அடிமையாகி நடந்துகொள்கிறீர்கள் என்றும் கைப்பாவையாக செயல்படுகிறீர்கள் என்றும் சொல்கிறோம். காரணம் என்ன? அரசியல்வாதி எப்போதோ செய்த ஊழலை தூசுதட்டி இப்போது மிரட்டுவார்கள். எங்கே வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடுமோ தண்டனை கிடைத்துவிடுமோ என்று தானே கைப்பாவையாக செயல்படவேண்டிய நிலை ஏற்படுகிறது. நேர்மையாக இருந்திருந்தால் எவராலும் மிரட்ட முடியுமா? முடியாது. இவை சில உதாரணம் தான். வாழ்க்கையில் பலர் இப்படித்தான் தவறுகளை செய்துவிட்டு தலைகுனிந்து நிற்கின்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.
நிச்சயமாக நான் சொல்லவருவதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் இவை மிகப்பெரிய தத்துவங்கள் அல்ல. நாம் அன்றாடம் சந்திக்கின்ற விசயங்கள் தான்.
நேர்மையாக நடந்துகொண்டால் உங்களுக்கு கிடைப்பவை தாமதமாக கிடைக்கலாம், ஆனால் உங்களை எவராலும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. உங்களை யாராலும் கட்டுப்படுத்திடமுடியாது. அப்படி அடுத்தவர்களை எதிர்த்து நீங்கள் நிற்கும் போது உண்மை உங்களுக்கு துணையாக இருக்கும்போது நீங்கள் அனுபவிக்கும் சுகம் அந்த சுகமே தனி சுகம் தான். அதனை வாழ்க்கையில் அனுபவியுங்கள். நன்றி!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!