சம்பளத்தில் 20% ஐ பிறருக்கு உதவி செய்யும் ஒரு தலைமை காவல் அதிகாரி
உதவி செய்வது அனைவருக்கும் பிடித்தமானது தான். ஆனால் தொடர்ச்சியாக செய்வதென்பது சவாலான காரியம். ஆந்திராவை சேர்ந்த தலைமைக் காவல் அதிகாரி கடந்த 3 ஆண்டுகளாக தனது சம்பளத்தில் 20% தொகையை உதவி செய்வதற்காகவே ஒதுக்கி உதவி செய்கிறார். யார் அவர் ஏன் அப்படி செய்கிறார்? வாருங்கள் மாமனிதரை அறிவோம்.
அந்த மாமனிதர் திரு கிருஷ்ணமூர்த்தி, ஆந்திராவில் இருக்கும் பார்வதிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருகிறார். இவர் தற்போது மாத சம்பளமாக 45,000 ரூபாய் பெறுகிறார். இதில் 10,000 ஐ உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதற்காகவே ஒதுக்கிவிடுகிறார். உதவி செய்ய ஆள் இல்லாத வயது முதியவர்களுக்கு உணவு வாங்கி கொடுப்பது, மருந்து வாங்கி கொடுப்பது, உடல்நலன் சரியில்லாத நேரங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என சகல உதவிகளும் செய்துவருகிறார் திரு கிருஷ்ணமூர்த்தி.
எப்படி உதவி செய்கிற எண்ணம் தோன்றியது என்ற கேள்விக்கு “காவல் நிலையத்திற்கு பல்வேறு பிரச்சனைகளுடன் மக்கள் வருவார்கள். அவற்றில் திருட்டு, குடும்ப பிரச்சனை உள்ளிட்டவற்றை ஒரு காவல்துறை அதிகாரியாக சரி செய்துகொடுப்போம். ஆனால் உணவு இல்லை, மருத்துவ உதவி செய்ய ஆள் இல்லை என்ற பிரச்சனைகளை ஏழை எளிய மக்கள் எப்படி சரி செய்வார்கள்? – இந்தக்கேள்வி தான் கடந்த 3 ஆண்டுகளாக தனது சம்பளத்தில் 20% பணத்தை உதவி செய்வதற்காகவே ஒதுக்கி வைத்து உதவி செய்ய தூண்டுகோளாக அமைந்தது” என்று கூறுகிறார்.
மேலும் தனது இளம் பருவத்தில் தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் தாத்தா உதவி செய்வதை பார்த்து தன்னுள் இந்த மனப்பான்மை இயல்பாக வந்திருக்கலாம் என நினைவு கூறும் கிருஷ்ணமூர்த்தி, தனது அப்பா சொன்னதாக இதை சொல்கிறார் ‘உதவி செய்ய வேண்டும் என ஒருவர் மனதார நினைத்துவிட்டால் வேலை இல்லாமல் சம்பளம் கிடைக்காமல் போனால் கூட தேவைப்படும் பணத்தை அடைய அந்த எண்ணம் சாத்தியமான பாதைகளை காட்டும்’ என்று கூறியதாகக் கூறுகிறார்.
ஒரு மாதத்தில் குறைந்தது 30 பேருக்கேனும் உதவி செய்திட வேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தி வயதானவர்களுக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, உடை, மருந்து, மருத்துவ உதவி என செய்துவருகிறார். இதுதவிர, முக்கியமான நாட்கள் மற்றும் முக்கியமான நபர்களின் பிறந்த தினங்களின் போது தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார். பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதன் மூலமாக சிறுவர்கள் தாங்களும் அவர்களைப்போல வர வேண்டும் என எண்ணுவார்கள் என்பது கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நம்பிக்கை.
இவருடன் பணியாற்றும் சக காவல்துறை அதிகாரிகள் ‘கிருஷ்ணமூர்த்தி ஒரு மகத்தான, உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மனிதர். காவல்துறை அதிகாரிகள் முரட்டுத்தனமானவர்கள் என்ற எண்ணம் மக்களிடத்தில் பொதுவாக இருக்கக்கூடிய இவரால் அந்த எண்ணம் இங்கே மாற்றமடைந்து வருகிறது. இவருடன் பணியாற்றுவதில் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது’ என உயர் அதிகாரிகளே பாராட்டுகிறார்கள்.
இதயத்தில் இருந்து பாராட்டுக்கள் கிருஷ்ணமூர்த்தி அவர்களே.
இந்தக்கட்டுரையை எழுதுவதற்கு மிக முக்கியக்காரணம், நம் ஒவ்வொருவரின் மனதிலும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மட்டுமே இந்த இடத்தில் பாராட்டுக்குரியவர் இல்லை, அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் கூட இந்த பாராட்டிற்கு உரியவர்கள் தான். பலர் இங்கே உதவி செய்திட தயாராக இருக்கிறார்கள் ஆனால் சக குடும்ப உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் முடங்கிப்போகிறார்கள். கணவர் உதவி செய்தால் மனைவி அனுமதிக்க வேண்டும், மனைவி உதவி செய்தால் கணவர் அனுமதிக்க வேண்டும். இங்கே உதவிகள் தேவைப்படுவோர் ஏராளமாக இருக்கிறார்கள். வாருங்கள் நம் மனதை திறப்போம்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!