அமேசான் காட்டுத்தீ | நாம் ஏன் கவலைப்பட வேண்டும் | Amazon Forest Fire
தற்போது காடுகளின் அழிவு எந்த அளவுக்கு இருக்கிறதெனில் ஒரு நிமிடத்திற்கு 5 கால்பந்தாட்ட மைதான அளவிற்கான காடுகள் அழிகின்றனவாம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஆண்டில் தான் 10,000 sq km அளவிலான காடுகள் அழிந்திருக்கின்றன
பூமியின் நுரையீரல் அதாவது காற்று சுத்திகரிப்பான் என கருதப்படுகிற அமேசான் காடுகள் காட்டுத்தீயினால் அழிந்துகொண்டு இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு நாடுகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்து வருகிறார்கள். பிரேசில் பக்கத்தில் இருக்கும் அமேசான் காடுகள் அழிந்தால் நமக்கென்ன, அதனால் நமக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது என நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கு ஏன் கவலைப்பட வேண்டும்? என்பதனை புரிய வைப்பதற்கான விளக்கமே இந்த கட்டுரை.
அமேசான் காடுகள்
மிகப்பரந்த அளவிலான காடுகளை கொண்டிருப்பதனால் தான் அமேசான் காடுகளை பூமியின் நுரையீரல் என அழைக்கிறோம். 7,000,000 km2 பரப்பளவினை கொண்ட அமேசான் காடுகளில் 60 சதவிகிதம் பிரேசில் நாட்டிலும் மீதமுள்ள காடுகள் பெரு, கொலம்பியா , வெனிசுலா போன்ற நாடுகளிலும் இருக்கிறது. நாம் இங்கு வெட்டப்படும் ஒவ்வொரு மரத்தையும் கணக்கிட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் அமேசான் காடுகள் ஒட்டுமொத்த உலகிற்குமான மரங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆகையினால் தான் அவற்றிற்க்காக உலகம் கண்ணீர் வடிக்கிறது.
ஏன் அமேசான் காட்டில் தீ?
அமேசான் காடுகளில் தீ அவ்வப்போது ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அங்கு இருக்கும் விவசாயிகள் வைக்கோல் போன்ற தேவையற்ற கழிவுகளுக்கு தீ வைப்பார்கள், அங்கு ஆக்கிரமித்து இருப்பவர்கள் வைப்பார்கள். இவை தொடர்ச்சியாகவே நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் அண்மையில் ஏற்பட்டுள்ள தீ விபத்துகள் மின்னல் போன்றவற்றினால் ஏற்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.
தற்போது காடுகளின் அழிவு எந்த அளவுக்கு இருக்கிறதெனில் ஒரு நிமிடத்திற்கு 5 கால்பந்தாட்ட மைதான அளவிற்கான காடுகள் அழிகின்றனவாம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த ஆண்டில் தான் 10,000 sq km அளவிலான காடுகள் அழிந்திருக்கின்றன.
நாம் கவலைப்பட வேண்டுமா?
நிச்சயமாக. அமேசான் காடுகளில் ஏற்படும் தீ விபத்துகளில் பெரும்பாலானவை திட்டமிட்டு அரங்கேறுபவையாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அமேசான் காடுகள் தான் உலகின் ஒவ்வொரு மூலையிலும் நாம் வெளியிடுகின்ற கார்பன் கழிவுகளை ஜீரணிப்பவை. அவை அழிந்துவிட்டால் எப்படி நுரையீரல் பாதிக்கப்பட்ட மனிதன் சுவாசக்கோளாறினால் விரைவில் இறந்துபோவானோ அதைப்போலவே இந்த உலகம் விரைவில் அழிந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது.
நம்மால் என்ன செய்ய முடியும்?
பிரேசில் நாட்டில் புதிதாக அதிபராக பதவியேற்றுள்ள போல்ஸ்னாரோ அவர்களின் வருகைக்கு பிறகு காடுகள் அழிப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. எங்கோ ஒரு நாட்டில் இருக்கும் காடு அழிக்கிறது அல்லது அழிக்கப்படுகிறது. அதற்க்கு தனிமனிதனால் என்ன செய்ய முடியும் என பலர் கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது. நிச்சயமாக நம் ஒவ்வொருவராலும் முடியும். ஒவ்வொரு மனிதரும் தனது வருத்தத்தை அக்கறையை பதிவு செய்வதன் மூலமாகவும் சிறு சிறு குழுக்களாக இணைந்து அந்தந்த நாடுகளின் அரசாங்கத்திற்கு கவனத்தை ஏற்படுத்துவதன் மூலமாகவும் உலக அரங்கில் பிரேசில் நாடு போன்றவைகளுக்கு அழுத்தத்தை கொடுக்க முடியும்.
அமேசான் காடுகள் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. அவை ஒட்டுமொத்த உலகத்திற்குமானவை. அவற்றை காக்க வேண்டிய கடமை அனைவருக்குமே உண்டு. அதற்காக உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!