காந்தி கொலை வழக்கு விசாரணை எப்படி நடைபெற்றது?
அவன் காந்தியை கொன்றதை மறுக்கவும் இல்லை. கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் 4 குண்டுகள் இருந்தன. மீதமிருந்த மூன்று குண்டுகள் காந்தியின் உடலுக்குள் பாய்ந்து இருந்தன. காந்தியை சுட்ட துப்பாக்கியின் எண் 606824.
இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் ஜனவரி 30,1948 ஆம் ஆண்டு கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக கோட்சே வழக்கு பார்க்கப்படுகிறது. இந்திய வரலாற்றை படிக்கும் எவரும் காந்தி கொலை வழக்கை படிக்காமல் முடிவை எட்டமாட்டார்கள். அப்படிப்பட்ட காந்தி கொலை வழக்கு விசாரணை நடைபெற்ற விதத்தை எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய எனது இந்தியா புத்தகத்தில் எதார்த்த நடையில் எழுதி இருக்கிறார்.
எப்படி நேரு அவர்களின் கண்டறிந்த இந்தியா [Discovery Of India Tamil ]புத்தகம் ஒரு வரலாற்று பெட்டகமோ அதைப்போலவே எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எனது இந்தியா புத்தகமும் வரலாற்று பெட்டகம் தான். இந்த இரண்டு புத்தகங்களும் தற்போது அமேசான் தளத்தில் கிடைக்கின்றன நீங்கள் வேண்டுமானால் வாங்கி படித்துக்கொள்ளலாம்.
வாருங்கள் வரலாற்றை அறிவோம்….
வாசகர்கள் படிப்பதற்கு எளிமையாக சுருக்கி இந்தக் கட்டுரையை தந்திருக்கிறேன் – பாமரன் கருத்து மகாத்மா காந்தி அவர்கள் ஜனவரி 30,1948 ஆம் நாள் கோட்ஸே எனும் நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியாவில் முதல் பெரும் வழக்கு விசாரணை காந்தி கொலை வழக்கு. காந்தியை கொன்றவனுக்கு எப்படிப்பட்ட தண்டனையை வழங்கப்போகிறார்கள், அப்படி ஒருவனுக்கு தண்டனை வழங்குவதை காந்தியம் ஏற்றுக்கொள்ளுமா? என்பது போன்ற பல கேள்விகள் மக்கள் முன்னால் இருந்தன.
1948, மே 27 ஆம் நாள் வழக்கு விசாரணை துவங்கியது. 1948-ம் வருடம் பை 27-ம் பததி வழக்கு விசாரறண துவங்கியது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலேயே கோட்சே கைது செய்யப்பட்டுவிட்டான். அவன் காந்தியை கொன்றதை மறுக்கவும் இல்லை. கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் 4 குண்டுகள் இருந்தன. மீதமிருந்த மூன்று குண்டுகள் காந்தியின் உடலுக்குள் பாய்ந்து இருந்தன. காந்தியை சுட்ட துப்பாக்கியின் எண் 606824.
வழக்கு விசாரணையானது செங்கோட்டையில் மொகலாய மன்னர் ஷாஜகான் நீதி வழங்கிய இடத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது. வழக்கினை நீதிபதி ஆத்மசரண் விசாரித்தார். இவர் கான்பூரின் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றியவர்.
ஒன்பது குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் மூன்று வரிசையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். சாவர்க்கர் மட்டுமே அதில் மிகுந்த சோர்வாக காணப்பட்டார். மற்றவர்கள் தங்களுக்குள்ளாக சிரித்துப்பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஜூன் 24 ஆம் தேதி விரிவான விசாரணை ஆரம்பமாகி நவம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. அரசுத்தரப்பில் 140 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். 720 பக்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கிற்கு துணை சேர்க்கும் படியாக 404 ஆவணங்களும் 80 தடய பொருள்களும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டன. 160 பக்கம் குற்றவாளிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 297 பக்க எழுத்துபூர்வமான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஏழு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வழக்கில் பங்கேற்றனர்.
குற்றவாளிகளுக்காக 15 முக்கிய வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள்.. கோட்சே தனது அறிக்கையை நீதிமன்றத்தில் வாசித்தான். 93 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையில் 35 ஆயிரம் வார்த்தைகள் இருந்தன. அந்த அறிக்கையில் தன்னை ஒரு வீரப் புருசனைப் போல அவர் காட்டிக்கொண்டான்.
1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. விரிவான 204 பக்க தீர்ப்பு அது. அந்தத் தீர்ப்பில் காந்தி போன்ற அகிம்சாவாதியைக்கூட ஒருவர் கொன்றுவிட்டுத் தண்டனையில் இருந்து தப்பித்துவிடக்கூடாது என்பதற்காகவே கோட்சேவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
நீதியின் செயல்பாடு, இந்திய சமூகத்தில் அறத்தின் முக்கியத்துவம் என்று நீதியரசர் ஆத்மசரன் முன்னுதாரணமான தீர்ப்பை எழுதினார். அந்தத் தீர்ப்பில் இந்திய பிரிவினையில் இருந்து எப்படி காந்தியைக் கொல்லும் சதிச் செயல் விதை ஊன்றப்பட்டது என்பதில் துவங்கி, காந்தியைக் கொன்றவர்களின் அரசியல் பின்புலம் வரை அத்தனையும் கவனமாக விவரிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையில் அரசு குறுக்கிடவே இல்லை. குற்றவாளிகளுக்கும் முறையான சட்ட உதவிகள் கிடைத்தன. இந்த வழக்கின் மேல் முறையீடு கிழக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதிபதி ஹர்னாம் சிங் அதை விசாரித்தார். கோட்சே தானே கோர்ட்டில் வாதாட முன்வந்தான். சொந்தக் செலவில் வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு அரசே வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தந்தது.
நீதிபதிகள் குழுவில் நீதிபதி பண்டாரி, நீதிபதி அச்சுருராம் நீதிபதி கோஷ்லா இருந்தனர். இந்த அமரவும் மறுமுறையீட்டினை நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்தனர்.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளின் முந்தைய இரவில் கோட்சே இருந்த சிறை வளாகத்தில் இரண்டு பேர் ரகசியமாக சுவர் ஏறி குதித்தனர். காவலாளி பார்த்துக் கூச்சலிட அவர்கள் பிடிபட்டார்கள். விசாரிக்கப்பட்டதில் அவர்கள் பத்திரிகையாளர்கள் என்பது தெரிய வந்தது. தங்களது உயிரை பணையம் வைத்து குற்றவாளியை பெற்று காண அவர்கள் வந்திருந்தனர்.
கோட்சே தூக்கிலிடப்பட்டான். அவனது உடல் வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. சிறைக்குள்ளேயே எரிக்கப்பட்டு சாம்பல் காகர் என்ற சிறிய ஆற்றில் கரைக்கப்பட்டது. காந்தி கொலை வழக்கு அதோடு முடிந்துபோனது.
கொலை – அரசியல் : பாமரன் கருத்து
காந்தி கொலை வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு அறவே இல்லை என்கிறார்கள். சுதந்திரமாக நேர்மையாக நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையானது இன்றும் முன்னுதாரணமாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றனவா என்பது கேள்விக்குறியே.
காந்தியை கொலை செய்தவர்கள் ஒரு அரசியலை கொண்டிருந்தார்கள். அதற்காகவே அவர்கள் காந்தியை கொலை செய்திட திட்டம் தீட்டினார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள். தாங்கள் கொண்ட அரசியலுக்காக ஒரு மாபெரும் தலைவரை கொலை செய்யத்துணிந்தது என்பது மூடத்தனத்தின் உச்சம். இந்த தவறான அரசியல் போக்கு வரலாற்றை எப்போது படிப்பவருக்கும் கசப்பாகவே இருக்கும்.
காந்தியைக் கொன்றவர்கள் மற்றும் அதற்கு உடன் இருந்தவர்கள் இன்றளவும் சிலரால் கொண்டாடப்படுவது எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இன்றும் சில அரசியல்வாதிகள் அப்படிதான் மோதலில் ஈடுபடுகிறார்கள். எப்போதும் எதிரெதிர் கொள்கைகள் இருக்கவே செய்யும். அது எதார்த்தம். அப்படிப்பட்ட கொள்கைகளுக்குள் மோதல் நிகழ வேண்டுமே தவிர கொள்கைகளை கடைபிடிப்பவர்களை தாக்குவது கொல்வது என்பது அர்த்தமற்றது.
காந்தியின் கொலை மற்றும் அதன் வழக்கு விசாரணை இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல படிப்பினைகளை இன்றளவும் சமூகத்திற்கு வழங்கிக்கொண்டு இருக்கிறது.
Read More :