இப்போ இல்லைனா எப்போவும் இல்லை ரஜினி சார்
சில பத்தாண்டு காலமாக அரசியலுக்கு ஒருவர் வரவேண்டும் என ரசிகர்களால் விரும்பப்பட்டவர் நடிகர் திரு ரஜினிகாந்த். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி அவர்களின் கட்சி அரசியலில் பங்கேற்கும் என கூறப்பட்டிருக்கிறது.
ரஜினி வெறுமனே திரைப்படங்களில் மட்டுமே செல்வாக்கு மிக்க நடிகர் அல்ல, நிஜத்திலும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கவே செய்கிறது. இதனை மறுத்துவிட்டு நம்மால் போக முடியாது. இன்றளவும் அவரை அரசியலுக்குள் இழுத்துவிட வேண்டும் என துடிக்கும் கட்சிகளின் முயற்சியே அதற்கு மிகப்பெரிய சான்று. கடந்த காலங்களில் – நேரடியாக ஆதரவு தெரிவிப்பது, மறைமுகமாக ஆதரவு கொடுப்பது, அமைதியாகவே இருந்துவிடுவது என பல விதங்களில் அவர் அரசியலில் பங்கேற்று இருக்கிறார்.
அரசியலுக்கு வருவேனா? எப்போது அரசியலுக்கு வருவேன்? என்பது பற்றி எப்போதும் கொஞ்சம் மழுப்பலாகவே [புத்திசாலித்தனமாகவே] கடந்த காலங்களில் பதில் அளித்து வந்திருக்கிறார் ரஜினி. ஆனால் தற்போது அவரால் அப்படி செய்திட முடியவில்லை. கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட இரண்டு ஆளுமைகள் மறைவு, அரசியல் கட்சிகளின் வரவேற்பு, ரசிகர்களின் எதிர்பார்ப்பு என பலமுனை தாக்குதலில் அவர் நின்றுகொண்டு இருக்கிறார். எத்தனை அழுத்தம் வந்தாலும் ரஜினி அவர்கள் அரசியலின் கோர முகத்தை உணர்ந்தவராகவே இருக்கிறார். இதுவரைக்கும் சினிமாவில் நல்ல மதிப்போடு வெற்றிகரமான மனிதராக அறியப்பட்ட அவர் அரசியலுக்குள் நுழைந்து அதனால் தன்னுடைய புகழ் ஓய்ந்துபோகுமோ என எண்ணுவதில் அர்த்தம் இல்லாமலும் இல்லை.
மக்கள் எப்படி தேர்தலை அணுகுவார்கள், எந்த விசயத்திற்கு தேர்தலில் முக்கியத்துவம் அளிப்பார்கள், இதுவரைக்கும் முதல் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தவர்கள் இனி நம்மை எப்படி விமர்சனம் செய்வார்கள் என்பது போன்ற பல மனக்கணக்குகளை அவர் ஒவ்வொரு தினமும் போட்டுக்கொண்டு தான் இருப்பார். எம்ஜிஆர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வெறுமனே அவருடைய திரைப்பிரபலம் மட்டுமே காரணம் அல்ல, அவர் திராவிட இயக்கத்தில் அண்ணாவோடு பயணித்து அரசியல் கற்றவர். ஆகவே தான் அவரால் அரசியலில் நிற்க முடிந்தது. மறுபக்கம், சிவாஜி அவர்களை எடுத்துக்கொண்டால் அவர் அரசியலில் பின்னடைவை சந்தித்தவராகவே இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் வியூகங்களை அமைக்கத்துவங்கி விட்டன அரசியல் கட்சிகள். ஆனால் அமைப்பாளர்களிடமும் அவ்வப்போது ரசிகர்களிடமும் மட்டுமே பேசி வருகிறார் ரஜினி. தான் அரசியலுக்கு வர வேண்டும் என மக்களிடத்தில் ஒரு எதிர்பார்ப்பு அலை உண்டானால் தான் அரசியலுக்கு வருவதாக மேசையை தட்டிக்கூற்றினார் ரஜினி, ஆனால் அப்படி ஒரு அலை உருவாகி இருக்கிறதா என்பதனை தெரிந்துகொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.
ரஜினி அவர்களின் வருகை தமிழக அரசியலில் ஒருவித தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்பது உண்மை தான் என்றாலும் கூட உடனே வெற்றி பெற்று முதல்வர் இருக்கை வரை ரஜினியின் கட்சி செல்வது என்பது சாத்தியமற்ற ஒன்று. ஒருவேளை கூட்டணி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் கூட தான் நினைத்தது மாதிரியான மாற்றங்களை ஆட்சியில் அவ்வளவு எளிதில் கொண்டுவந்துவிட முடியாது என்பதும் அவர் அறிந்தது தான். மேலும் ரஜினி அவர்களுக்கு வயது தற்போது 69.
இத்தனை நாள்கள் அரசியலுக்கு வந்தாலும் வருவேன், அதனை சூழல் தான் தீர்மானிக்கும் என்று சொன்ன ரஜினிக்கு தற்போது இரண்டு வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று அவர் அரசியலுக்கு வர வேண்டும், இரண்டாவது அரசியலுக்கு வரவில்லை என அறிவிக்க வேண்டும். ஆனால் இதில் எதை தேர்ந்தெடுத்தாலும் மிகப்பெரிய சவால் என்பது ரஜினி அவர்களுக்கு இருக்கவே செய்கிறது. அரசியலுக்குள் வாங்க வாங்கனு இப்போது அழைப்பவர்கள் தன்னுடைய வெற்றிக்காக கடைசி வரை நின்று போராடுவார்களா? யாராலும் கணிக்க முடியாத வகையிலே சிந்திக்ககூடிய மக்கள் என்ன முடிவெடுப்பார்கள்? என்பது போன்ற பல கேள்விகள் தற்போது ரஜினி அவர்களின் முன்னே ஓடிக்கொண்டு இருக்கும் என்பது எதார்த்தமான உண்மை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் “இப்போ இல்லைனா எப்போவும் இல்லை ரஜினி சார்”
Read more : ரஜினி – கமல் : அரசியல் ஒப்பீடுகமலா ? ரஜினியா ? யாரை ஆதரிப்பது என குழப்பமா ?
Get Updates in WhatsApp
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!