அதென்ன “மகிழ்ச்சி பாடத்திட்டம்” – டெல்லி அரசுப்பள்ளிகளில் நடத்தப்படும் புதுவித பாடத்திட்டம்
மகிழ்ச்சி பாடத்திட்டம், மக்கள் மனதில் இருக்கும் வெறுமை, எதிர்மறை எண்ணங்களை போக்கும். இந்தியா போன்ற நாடுகளால் மட்டுமே பழமை மற்றும் புதுமையினை ஒன்றிணைத்து செயல்படுத்த முடியும்” – மகிழ்ச்சி பாடத்திட்டம் குறித்து தலாய் லாமா கூறிய வார்த்தைகள் இவை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இந்தியாவிற்கு வருகை தந்தனர். அப்போது மெலானியா டெல்லி அரசுப்பள்ளிகளில் செயல்படும் மகிழ்ச்சி பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளும் விதமான நிகழ்ச்சிக்கு அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. மெலானியா கலந்துகொண்டதற்கு பிறகு மகிழ்ச்சி பாடத்திட்டம் கவனம் பெறத்துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அரங்க மேடையில் மாணவிகள் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது மெலானியா போன்ற மிகப்பெரிய நபர் விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சி, பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்திருக்கும் நிகழ்ச்சி என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கீழே ஆட்டம் போட்டுகொண்டு இருந்தான். ஒருகட்டத்தில் மெலானியாவே அந்த சிறுவனின் ஆட்டத்தை ரசித்துப்பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார். இதுதான் மகிழ்ச்சி பாடத்திட்டம் கொடுத்திருக்கும் மாற்றமாக இருக்காலாம்.
சரி வாங்க மகிழ்ச்சி பாடத்திட்டம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்
மகிழ்ச்சி பாடத்திட்டம் [Happiness curriculum of Delhi Government]
ஒருவர் கல்வி கற்கிறார் எனில் அந்தக்கல்வியானது அவருக்கு மகிழ்ச்சி, விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்திற்கு அவசியமான மனிதனாக எப்படி நடந்துகொள்வது போன்றவற்றை தர வேண்டும். இதுதான் கல்வியின் தார்மீக நோக்கமாக இருக்க வேண்டும். ஒரு மனிதன் எதைச்செய்தாலும் அவனுடைய மகிழ்ச்சிக்காகவே செய்கிறான். அவனுடைய ஒவ்வொரு முயற்சியுமே மகிழ்ச்சியை நோக்கியதாகவே இருக்கிறது. ஆகவே தான் உலகில் இருக்கக்கூடிய கல்வியாளர்கள் மகிழ்ச்சியை போதிக்கக்கூடிய கல்விமுறையை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.
இதனை அடிப்படையாகக்கொண்டுதான் டெல்லி அரசாங்கம் “மகிழ்ச்சி பாடத்திட்டம்”ஒன்றினை வடிவமைக்க துவங்கியது. ஜூலை,2018 இல் சில டெல்லி அரசுப்பள்ளிகளில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட “மகிழ்ச்சி பாடத்திட்டம்” தற்போது கிட்டத்தட்ட 1000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது. தினசரி 45 நிமிட கால அளவுள்ள இந்த வகுப்பானது நர்சரி முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது.
மகிழ்ச்சி பாடத்திட்டம் : அம்சங்கள்
மகிழ்ச்சி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சமூகத்திற்கு நல்ல சிந்தனையுள்ள மகிழ்ச்சியான மனிதரை தருவது தான். ஆகவே மகிழ்ச்சி பாடத்திட்டமானது யோகா, மதிப்பு கல்வி, மனவள பயிற்சிகள் உள்ளிட்ட பல பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கும். முற்றிலும் செயல்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட இந்த கல்விமுறையில் தேர்வுகள் என்பதே இருக்காது. அதற்கு மாறாக, மாணவர்களின் நிலை மட்டும் கண்காணிக்கப்படும்.
>> மகிழ்ச்சி பாடத்திட்டம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்
>> மகிழ்ச்சி பாடத்திட்டம் மாணவர்களுக்கு சிறந்த மன நிலை, சிந்தனை, நடத்தை உள்ளிட்டவற்றை பெறுவதற்கு வழிநடத்தி செல்லும்
>> மகிழ்ச்சி பாடத்திட்டம் மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த உதவும்
>> மகிழ்ச்சி பாடத்திட்டம் மாணவர்களுக்கு சோர்வு, நம்பிக்கையற்ற தன்மை, விரோத மனப்பான்மை உள்ளிட்டவற்றை குறைக்க உதவும்
>> மகிழ்ச்சி பாடத்திட்டம் மாணவர்களை இந்த சமூகத்தில் இருக்கும் சவால்களை சமாளித்து வாழ நம்பிக்கை அளிக்கும்
உலக நாடுகளை ஈர்க்கும் மகிழ்ச்சி பாடத்திட்டம்
ஆப்கானிஸ்தான் நாடு தங்களது பள்ளிகளில் மகிழ்ச்சி பாடத்திட்டத்தை அமல்படுத்த விருப்பம் தெரிவித்து அதற்காக டெல்லி அரசுடன் இணைந்து செயல்பட துவங்கிவிட்டது. அதேபோல ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஜார்கண்ட் போன்ற மாநில அரசுகளும் கூட டெல்லி பள்ளிகளில் பார்வையிட்டு சென்றுள்ளன. ஆகவே இந்த மாநிலங்களும் விரைவில் மகிழ்ச்சி பாடத்திட்டத்தை அமல்படுத்தும் என தெரிகிறது.
இந்த பாடத்திட்ட அறிமுகவிழாவில் பேசிய தலாய் லாமா “மகிழ்ச்சி பாடத்திட்டம், மக்கள் மனதில் இருக்கும் வெறுமை, எதிர்மறை எண்ணங்களை போக்கும். இந்தியா போன்ற நாடுகளால் மட்டுமே பழமை மற்றும் புதுமையினை ஒன்றிணைத்து செயல்படுத்த முடியும்” என குறிப்பிட்டார். அவரது வார்த்தைகள் மேய்ப்பட்டதைப்போலவே இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டபின்பு மாணவர்கள் நடத்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்றிருப்பதாக மகிழ்ச்சி பாடத்திட்ட கமிட்டி [Happiness Curriculum committee] சேர்மனாக இருக்கும் டாக்டர் ராஜேஷ் குமார் தெரிவித்திருக்கிறார். இந்தப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நடத்தை அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வைத்துக்கொள்ளும் பிணைப்பு உள்ளிட்டவற்றில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடும் இவர் இடைநிற்றலும் பெரிய அளவில் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சி பாடத்திட்டம் உருவானதில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருப்பவர்கள் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் தான். இதற்கு பின்னால் பல்வேறு நிபுணர்களின் பங்களிப்பும் இருக்கிறது.
பெற்றோர் கவனம் பெற வேண்டும்
இன்று கல்வி என்பது அதிக சம்பளம் தருகிற மிகப்பெரிய நிறுவனத்தில் வேலைபார்க்க தங்களது பிள்ளையை தயார்படுத்தி அனுப்புகிற ஒரு கருவி என்றுதான் பெற்றோர்கள் கருதுகிறார்கள். பிள்ளைகளின் மகிழ்ச்சியோ அல்லது அவர்களின் குண நலன்கள் பற்றியோ பெரிய அக்கறை இல்லை. அப்படி இந்த சமூகம் அவர்களை எண்ணிட வைத்திருக்கிறது. ஆகையினால் தான் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு உயர்ந்தாலும் கூட ஒரு மனிதனால் நல்ல கணவனாக, நல்ல மனைவியாக, நல்ல பிள்ளையாக, நல்ல மனிதாக இருக்க முடிவதில்லை.
வாழ்க்கை என்பது மகிழ்ச்சியை தேடிய ஒரு பயணம் தான் என்பதனை பெற்றோர்கள், அரசுகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இன்று குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் மன அழுத்தத்தை தரக்கூடிய கல்வி மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு கருவியாக மாற்றம் பெற வேண்டும். அதற்க்கு அனைவரும் மகிழ்ச்சி பாடத்திட்டம் போன்ற ஒன்றினை கவனிக்க வேண்டும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!