ஷிவ் நாடார்: HCL நிறுவனரின் சாதனைக் கதை

HCL என்ற மாபெரும் தொழில்நுட்ப ஸ்தாபனத்தின் வாயிலாக இந்தியா இந்த தொழில்நுட்ப யுகத்தில் முக்கிய இடத்தில் இருப்பதற்கு முக்கியக்காரணம் ஷிவ் நாடார் (Shiv Nadar) என்றால் மிகையாகாது. நீங்கள் வெற்றிபெற உத்வேகமிக்க வெற்றிக்கதையை தேடினால் இந்தக்கதை நிச்சயம் உங்களுக்கானது தான்.

ஷிவ் நாடார் 1945 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் சிவசுப்ரமணிய நாடார் மற்றும் வாமசுந்தரி தேவிக்கு மகனாகப் பிறந்தார். அவர் குழந்தைப் பருவத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தார். ஆகவே அவர் மாகஸ் என்ற செல்லபெயரால் அழைக்கப்பெற்றார். அதற்கு பாரசீக மொழியில் ‘மந்திரவாதி’ என்று பொருள்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள PSG தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர், ஷிவ் நாடார் 1967 இல் புனேவில் உள்ள வால்சந்த் குழுமத்தின் பொறியியல் கல்லூரியில் (COEP) தனது பணியைத் தொடங்கினார். பின்னர் அவர் டெல்லி துணி ஆலையின் டிஜிட்டல் தயாரிப்புப் பிரிவில் பணியில் சேர்ந்தார்.



தொடர்ந்து ஒரு பணியாளராக வேலை செய்திட அவருக்கு விருப்பம் இல்லை. அவரைப்போலவே ஆர்வம் இல்லாமல் வேலை பார்த்து வந்த பிறருடன் தனது கருத்தை பகிருந்து கொண்டார். பின்னர் அவர்களுடன் இணைந்து பணியில் இருந்து விலகி சொந்த நிறுவனத்தைத் துவங்க முடிவு செய்தார்.

ஷிவ் நாடார் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து நிறுவிய முதல் நிறுவனம் MicroComp Limited ஆகும். இந்த நிறுவனம் டெலிடிஜிட்டல் கால்குலேட்டர்களை தயாரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இது அவர்களுடைய இலக்கு அல்ல. அவர்கள் மிகப்பெரியதாக இலக்கை கொண்டிருந்தார்கள். MicroComp Limited முதல்படி.

ஒரு நல்ல வெற்றியாளர் என்பவர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்டவராக இருப்பார். ஷிவ் நாடாரும் அப்படியானவராகவே இருந்தார். அப்போது, அரசியல் காரணங்களால் IBM இந்தியாவை விட்டு வெளியேறியது. இந்தியாவில் கணினிகள் போதுமான அளவு இல்லாத சூழலில் இந்த வெளியேற்றம் இந்தியாவிற்கு மேலும் சிக்கலாக இருந்தது. இந்த வாய்ப்பினை ஷிவ் நாடார் சரியாக பயன்படுத்திக் கொண்டார். HCL இன் துவக்க காலம் அது தான்.



1976 ஆம் ஆண்டில் அவர் ரூ 1,87,000 ஆரம்ப முதலீட்டில் HCL நிறுவனத்துடன் இணைத்துக்கொண்டார். உத்திரபிரதேச அரசாங்கம், நாடார் அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, 20 லட்சம் மதிப்பிலான நிறுவனத்தின் 26% பங்குகளை அவருக்கு கூடுதலாக வழங்கியது. இந்தப்பங்குகள் மூலமாக அவரால் நிறுவனத்திற்கு “ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்” என்று பெயரிட முடிந்தது.

அந்த நிறுவனத்தில் 1978 இல் முதல் உள்நாட்டு கணினியை தயாரித்தனர், இது HCL 8C என்று அழைக்கப்பட்டது. 1985 இல், Unix இன் முதல் Multi Processor பதிப்பு, ‘HCL BusyBee’ வெளியிடப்பட்டது.

இந்திய பங்குச் சந்தையை உருவாக்க HCL உதவியது, இது இந்தியாவின் பங்குச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, HCL ஓவர்சீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தொழில்நுட்ப மேம்பாட்டு சேவைகளை வழங்குபவராக இணைக்கப்பட்டது. இது இறுதியில் HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டது .


1979 இல், நிறுவனத்திற்கு சிங்கப்பூரில் ஒரு பணி வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து Far East Computers என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் மூலமாக 10 லட்சம் வருவாய் ஈட்ட முடிந்தது. நாடார் 1989 இல் அமெரிக்க கணினி ஹார்டுவேர் சந்தையில் நுழைய முயன்றார், ஆனால் அது அவ்வளவாக கைகொடுக்கவில்லை. பின்னர் HP நிறுவனத்துடன் இணைந்து HCL HP லிமிடெட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எரிக்சன் மற்றும் நோக்கியா போன்ற பிற உலகளாவிய நிறுவனங்களுடனும் HCL கைகோர்த்தது.

HCL இன் தற்போதைய நிலை
நவீன கம்ப்யூட்டிங்கின் யுகத்தின் முன்னோடியாகக் கருதப்படும் HCL. இப்போது 50 நாடுகளில் இருந்து 169,000 வல்லுநர்களைக் கொண்டு $10.1 பில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர வருவாயை ஈட்டுகிறது, மாபெரும் ஸ்தாபனம் HCL.

HCL ஆனது விண்வெளி, பாதுகாப்பு, வங்கி, மூலதனச் சந்தைகள், வாகனம், நுகர்வோர் பொருட்கள், காப்பீடு, உற்பத்தி, சுரங்கம், போக்குவரத்து, தளவாடங்கள் போன்ற பல்வேறு துறைகளில் செயல்படுகிறது. இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

2011 இல் HCL நிறுவனமானது HCL Foundation ஐ துவங்கியது. சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றம் மற்றும் பேரழிவு தடுப்பு உள்ளிட்ட விசயங்களில் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள ஆரம்பித்தது. அதேபோல, வறுமையை ஒழிக்கவும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உண்டாக்கவும் அக்கறை காட்டியது.



ஜூலை 2020 இல், ஷிவ் நாடார் HCL இன் தலைவர் பதவியில் இருந்து விலகினார். செயல் இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்த அவரது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா அந்தப் பதவியை ஏற்றார். அவர் இப்போது நிர்வாக இயக்குநராகத் தொடர்கிறார்.

கல்வியே முக்கியம்

பல முன்னணி தொழில் அதிபர்களை போலவே ஷிவ் நாடார் அவர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவம் புரிந்து இருந்தது. அதனாலேயே அவர் செய்த நிதி உதவியுடன் 1981 இல் NIIT உருவாக்கப்பட்டது. 1996 இல் தனது தந்தையின் பெயரில் SSN பொறியியல் கல்லூரியை அவர் நிறுவினார்.

அதுமட்டுமல்லாமல், உலகின் பல்வேறு இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் இவர் நிதி உதவி செய்து வருகிறார். 2008 இல் SSN டிரஸ்ட் சார்பில் இரண்டு பள்ளிகளை உத்திர பிரதேசத்தில் திறந்தார். இதன்மூலமாக கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு கிடைத்தது.

ஷிவ் நாடார் 2014 வரை காரக்பூரில் உள்ள ஐஐடி கவர்னர்கள் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டில் கல்வித்துறைக்கு சுமார் 630 கோடி நிதியினை கொடையாக வழங்கியமைக்கு “மிகவும் தாராளமான இந்தியர் (Most Generous Indian) என்ற பெருமையுடன் Hurun India Philanthropy பட்டியலில் இடம் பெற்றார். 2011 இல் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை நொய்டாவில் திறந்தார்.

ஷிவ் நாடாரின் பார்முலா

இதுவரைக்கும் பல நிறுவனங்கள் கடைபிடிக்கும் “வாடிக்கையாளர் முதன்மையானவர்” என்ற பார்முலாவை தகர்த்து “பணியாட்கள் முதன்மையானவர்கள், அடுத்தது வாடிக்கையாளர்கள்” என்ற புதிய பார்முலாவை உருவாக்கியவர் தான் ஷிவ் நாடார். இதன் மூலமாக நிறுவனத்திற்கு நம்பிக்கையான பணியாட்கள் உருவாக்கிட முடியும் என அவர் நம்பினார்.

2008-2009 காலகட்டங்களில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடந்தபோது தனது நிறுவனத்தில் இருந்து ஒருவர் கூட பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார் என்று வெளிப்படையாகவே கூறினார்.

பட்டங்களைக் காட்டிலும் கடுமையான உழைப்பும் திறமையும் தான் ஒருவரை உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ஷிவ் நாடார்.

IT துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு 2008 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.



இந்தியாவை உயர்த்திய ஒரு சாதனையாளரின் வெற்றிக்கதையை நீங்கள் இன்று தெரிந்து கொண்டுள்ளீர்கள். பிடித்து இருந்தால் பகிருங்கள்.

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *