கடினமான சூழ்நிலையை மகிழ்ச்சிகரமாக மாற்றுவது ஓர் “கலை”, அதை செய்வது எப்படி?
சுய முன்னேற்றம்
கடினமான சூழ்நிலையை மகிழ்ச்சிகரமாக மாற்றுவது ஓர் “கலை”
உங்களுக்கு கிடைக்காத ஒன்றுக்காக நீங்கள் வருத்தப்படும் கடினமான சூழ்நிலையை உங்களால் மகிழ்ச்சிகரமாக மாற்றிட முடியும். அதற்கு, கிடைத்தவைகளை எண்ணி மகிழ்ச்சியுறும் மனது உங்களுக்கு இருக்க வேண்டும். இது ஒரு கலை.
துன்பம் என்ற ஒன்று இல்லாமலே போனால் இன்பம் என்பதற்கு உண்மையான அர்த்தம் இருக்காது. இன்பத்தின் சுகத்தை நாம் அனுபவிக்க வேண்டுமெனில் துன்பம் என்ற ஒன்றும் இருக்க வேண்டும். ஒரு சாதாரண மனிதனுக்கு இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல இருக்கின்றன. ஆகவே தான் பெரும்பாலானவர்களை துன்பம் எளிதில் வாட்டி வதைத்துவிடுகிறது. ஆனால் வெகுசிலர் துன்பத்தையும் இழப்புகளையும் தோல்விகளையும் வெகு சுலபமாக கடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு மன தைரியம் மிக அதிகம் என்று ஒட்டுமொத்தமாக சொன்னாலும் கூட, அவர்கள் தங்களுக்கு கடினமான சூழ்நிலை ஏற்படும் காலத்தில் தங்களுக்கு கிடைத்தவைகளை எண்ணி மகிழ்ச்சியுறும் பக்குவம் கொண்டவர்களாக இருப்பதே சரியான காரணமாக இருக்க முடியும்.
உதாரணத்திற்கு, அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் தோல்வி அடைந்தது. உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரைக்கும் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது இல்லை என்ற வரலாறு அன்றைய தினம் உடைக்கப்பட்டது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரிய கவலையை கொடுத்தது. ரசிகர்களுக்கே இவ்வளவு சோகம் என்றால் அங்கே விளையாடிய இந்திய அணியினருக்கு எவ்வளவு கவலை ஏற்பட்டிருக்கும் என நினைத்துப்பாருங்கள். ஆனால், அந்த தோல்விக்காக அறைக்குள் அழுது புலம்பி மன அழுத்தத்திற்கு உள்ளானால் எப்படி அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல முடியும்?
ஆக, ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கு வெற்றியையும் தோல்வியையும் கடந்துபோகும் மனநிலை இருந்தால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கு இயல்பாக நகர்ந்து செல்ல முடியும். வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். இதே மனநிலை தான் வாழ்க்கையிலும் நமக்கு இருக்க வேண்டும். இன்று நமக்கு இக்கட்டான சூழ்நிலை இருக்கிறது என்பதற்காக உலகிலேயே மிகப்பெரிய பிரச்சனையில் நாம் மாட்டிக்கொண்டது போல வருந்தக்கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும் போது அந்த தருணத்தில் நமக்கு கிடைத்திருக்கும் சில வெற்றிகளை நினைத்துப்பார்த்து அந்த சூழ்நிலையை மாற்றிட வேண்டும்.
உதாரணத்திற்கு, நீங்கள் படித்து முடித்துவிட்டு ஓரிரு ஆண்டுகளாக வேலை தேடியும் வேலை கிடைக்காத சூழ்நிலையில் இருக்கிறீர்கள். இது பெரும்பான்மையான இளைஞர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை. இதனை நீங்கள் எப்படி சிந்தித்து உங்களது கவலையை மாற்ற வேண்டும் தெரியுமா?
> நம்மை படிக்க வைக்கும் அளவிற்கு பெற்றோர்கள் கிடைத்தது நாம் செய்த பாக்கியம்
> கடினமான படிப்பை பலரைப்போல அரியர் வைக்காமல் தேர்ச்சி அடைந்தது பெரிய விசயம்
> இந்தப்பிரச்சனை நமக்கு மட்டும் இல்லை. பலருக்கும் இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
> இத்தனை ஆண்டுகளாக வேலை கிடைக்காவிட்டாலும் சாப்பாட்டிற்க்காக நாம் கையேந்தும் நிலையில் இல்லை.
இதுபோன்று உங்களுக்கு கிடைத்தவைகளை உங்களுக்கு சவாலான நேரங்களில் நினைத்து நன்றியோடு இருப்பீர்களே ஆனால் உங்களுக்கு பெரிய அளவில் கவலைகள் ஏற்படாது. உங்களை விடவும் பலர் இக்கட்டான கவலைகளை அனுபவித்து வருகிறார்கள் என்பதை நினைவிலே கொண்டால் கவலையே உங்களை அண்டாது.
தங்களைப்பற்றியோ அல்லது தங்களிடம் இருப்பவைகளைப் பற்றியோ அல்லது தங்களிடம் இருக்கும் திறமைகள் பற்றியோ பலர் பெருமை கொள்வதே இல்லை. பார்ப்போரை அப்படியே ஓவியமாக வரையும் ஒரு நண்பரிடம் இருந்தது. ஆனால் அவருக்கு தனக்கு இருக்கும் திறமையின் மீது பெரிய மகிழ்ச்சியே இல்லை. அவர் மற்றவர்களை பார்த்து அவர்களிடம் உள்ளது தன்னிடம் இல்லையே என கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
நீங்கள் உங்களைப்பற்றி பெருமை கொள்ளாவிடில் உங்களுக்கு உங்கள் மீதான வெறுப்பு தான் வந்து சேரும். நீங்கள் இந்தக்கட்டுரையை படிக்கும் இந்த நேரத்தில் உங்களிடம் இருக்கும் சிறப்பான விசயங்களை இரண்டு நிமிடங்கள் நினைவு கூர்ந்து பட்டியலிடுங்கள். உங்களுக்கு கவலை உண்டாகும் நேரங்களில் அந்தப்பட்டியலில் உள்ளவற்றை நினைத்துக்கொள்ளுங்கள், உங்களது கவலைகள் காணாமல் போய்விடும்.
என்னுடைய அனுபவத்தில் நான் சந்தித்த சிலருக்கு அவர்கள் பார்க்கும் வேலை குறித்தும் அலுவலகம் குறித்தும் பெரிய அளவில் மகிழ்ச்சியே இல்லாததது போல பேசுகிறார்கள். ஆனால் அதே நண்பர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் வேலை கிடைக்காதா என நேர்காணலை பல இளைஞர்கள் தினமும் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். பலர் தங்களுக்கு கிடைக்காதா என எங்கும் ஒன்று நம்மிடம் இருந்தும் நாம் அதுகுறித்து மகிழ்ச்சிகொள்ளவில்லை எனில் நமக்கு எப்படி வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்கும்?
யோசியுங்கள். உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
“நேர மேலாண்மை” வெற்றிக்கு ஏன் அவசியம்?
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!