“நேர மேலாண்மை” வெற்றிக்கு ஏன் அவசியம்?


இந்த உலகத்தில் அனைவருக்கும் பொதுவாய் கிடைத்திருப்பது “நேரம்” மட்டும் தான். அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் “நேர மேலாண்மை”. வெற்றி பெற்றவர்கள் தங்களது நேரத்தை சரியாகப் பயன்படுத்தியதால் தான் வெற்றி பெற்றுள்ளார்கள்.


“அந்த பாடத்தை ஏன் எழுதி வரவில்லை?”  என ஆசிரியர் வகுப்பறையில் கேட்கும் போது பெரும்பாலான மாணவ மாணவியரின் பதில் “நேரமில்லை சார்” என்பதாகத்தான் இருக்கும். அங்கே துவங்கிய அந்த “நேரமில்லை” என்ற பதில் கிட்டத்தட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால், சிலர் நேரத்தை திட்டமிட்டு பல செயல்களை வெற்றிகரமாக செய்து முடிக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து “அனைத்தையும் செய்வதற்கு உங்களுக்கு மட்டும் நேரம் எப்படி கிடைக்கிறது?” என்று ஆச்சர்யமாய் கேட்பவர்களும் உண்டு. இந்த இரண்டு பிரிவினர்க்குமே நேரம் என்பது சமமாக வழங்கப்பட்டது தான். யார் ஒருவர் அதனை சரியாக பயன்படுத்தி செய்ய வேண்டிய வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிகிறாரோ அவர் வெற்றிபெறுகிறார்.

நேர மேலாண்மை என்றால் என்ன?

குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிப்பதற்கு நேரத்தை ஒதுக்குவதும், ஒதுக்கிய நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையை செய்து முடிப்பதும் தான் “நேர மேலாண்மை” [Time Management]. 

போகிற போக்கில் வேலைகளை ஒவ்வொன்றாக செய்து முடித்துக்கொள்வோம் என நினைப்போர் கடைசி நேரத்தில் சில வேலைகளை செய்ய முடியாமல் போக வேண்டிய சூழலுக்கு உள்ளாகலாம். அதேபோல, நேரம் முடிவடையும் தருவாயில் அதிக வேலைகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டால் அதனால் அதிக மன அழுத்தத்தை [Pressure] சந்திக்க நேரலாம். முடிவில், எதையும் சரியாக செய்து முடிக்காத சூழல் தான் ஏற்படும். 


நீங்கள் இழந்த நேரத்தை உங்களால் மீண்டும் பெறவே முடியாது

— பெஞ்சமின் பிராங்க்ளின்


நீங்கள் நேர மேலாண்மை செய்திடும் போது பின்வரும் நல்ல மாற்றங்களை அடைய முடியும். 

>  சரியான நேரத்தில் வேலையை முடிக்க முடியும் 

> கடைசி நேரத்தில் உண்டாகும் மன அழுத்தத்தை தவிர்க்க முடியும்

> தவறுகளை தவிர்க்க முடியும் 

> பிற வேலைகளுக்கு நேரத்தை ஒதுக்க முடியும்

> நல்ல பெயரை நீங்கள் சம்பாதிக்க முடியும்

நேர மேலாண்மை செய்வது எப்படி?

பொதுவாக நேர மேலாண்மை என்பது அலுவலகங்களில் வேலை செய்வோருக்கு மட்டுமே  உகந்தது என பலர் நினைப்பது உண்டு. ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் நேர மேலாண்மை என்பது அவசியம். 

நேர மேலாண்மை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால் அடுத்தது நீங்கள் செய்திட வேண்டியது “குறிக்கோளை நிர்ணயிப்பது“. ஆங்கிலத்தில் இதனை Goal Setting என்று சொல்லுவார்கள். நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்தால் தானே எந்தப் பேருந்தில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்திட முடியும். அதுபோலவே தான், நாம் இவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டால் தான் எதனை முதலில் செய்து முடிக்க வேண்டும், எதற்கு அதிக நேரம் வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்திட முடியும். 

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் அடுத்தது செய்திட வேண்டிய செயல்கள் அனைத்தையும் எழுதி வைப்பது தான். நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக இருந்தால் காலை சென்ற உடனேயே அன்றைக்கு செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் பட்டியலிடுங்கள்.

முன்னுரிமை அளித்தல்

செய்ய வேண்டியவை அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது, எது முக்கியமானது, எதை முதலில் செய்ய வேண்டும், எதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை முடிவு செய்ய வேண்டியது தான். 

வேலை செய்கிற இடத்தில், உங்களது முதலாளி இன்று ஒரு வேலையை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அந்த வேலை எளிமையானது ஆகவே அதை மதியம் சாப்பிட்டுவிட்டு வந்தபிறகு செய்ய ஆரம்பிக்கலாம் என நினைத்துக்கொண்டு இன்னொரு வேலையை செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த வேலையை செய்யும் போது நீங்கள் எதிர்பார்த்தது போல அது எளிமையான வேலை இல்லை என்பது தெரிந்தால் என்னவாகும். வேலையை முடிக்க முடியாமல் போகும், அதிக மன அழுத்தம் உண்டாகும், தேவையில்லாத கெட்டப்பெயரை நீங்கள் உங்களது முதலாளியிடம் பெற வேண்டி வரும். 

வாழ்க்கையிலும் இப்படித்தான் நடக்கும். நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய வேண்டிய வேலைகளை அதற்குள் செய்து முடித்துவிட்டால் வாழ்க்கை நீங்கள் நினைத்தது போல நிம்மதியாக நகரும். இல்லையெனில் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். பிறர் உங்களைத்தாண்டி நகர்ந்துகொண்டு இருப்பார்கள்.

குறுக்கீடுகளை நிர்வகித்தல்

நாம் நினைத்தது போல அனைத்தும் நடந்துவிடுவது இல்லை. குறுக்கீடுகள் நிச்சயமாக இருக்கவே செய்யும். உதாரணத்திற்கு, நாம் முக்கியமானதொரு வேலையை செய்துகொண்டு இருக்கும்போது மேலதிகாரி ஒரு சிறிய வேலையை முடித்துத்தருமாறு சொல்லுவார். அவருக்கு நம்மால் மறுப்பு தெரிவிக்க முடியாது. அந்த தருணத்தில் நாம் ஏற்கனவே செய்து வைத்திருந்த நேர பட்டியலில் சற்று மாறுதல்களை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். தொடர்ந்து இது நடக்காது என்றாலும் கூட நாம் இதற்கெல்லாம் தயாராகவே இருக்க வேண்டும். 

அதுபோலவே தான் வாழ்க்கையிலும்.  நாம் ஒரு திட்டமிடலை செய்து வைத்திருந்தால் அதற்கு இடையூறாக சில நிகழ்வுகள் நடந்துவிடலாம். அதற்காக நமது குறிக்கோளை அடைய செய்துகொண்டிருக்கும் முயற்சியை நிறுத்தாமல் தொடர்ந்து நமது தடையைத் தாண்டி குறிக்கோளை அடைய முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.

தள்ளிப்போடுதல்

குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க கால அவகாசம் உள்ளது என்பதற்காக அதற்கு முன்பாகவே அதனை செய்து முடிக்க நேரம் இருந்தும் செய்து முடிக்காமல் “தள்ளிப்போடுவது” நேர மேலாண்மையில் நாம் செய்திடும் சறுக்கல் தான். அலுவலகங்களில் கடைசி நேரங்களில் பல வேலைகள் அரைகுறையாக செய்து முடிக்கப்படுவதற்குக் காரணம் “தள்ளிப்போடுதல்” தான். “தள்ளிப்போடுதல்” என்பது உங்களது வெற்றிக்கு நீங்கள் வைத்துக்கொள்ளும் பெரிய தடைக்கல் என்பதை நினைவிலே கொள்ளுங்கள். ஓரிரண்டு நாட்கள் இந்த தள்ளிப்போடுதலில் ஈடுபட்டால் அதுவே உங்களுக்கு பழக்கமாகி உங்களது திட்டமிடுதல் பண்பையே அது சிதைத்துவிடும்.

நேர மேலாண்மை கட்டுரைகள் பல இணையத்தில் கிடைக்கின்றன. நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்துவிட்டால் அதற்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பியுங்கள். திட்டமிடலோடு தொடர்ச்சியான உழைப்பும் சேர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்.


தொடர்ச்சியாக “சுய முன்னேற்றம்” என்ற தலைப்பில் உங்களை ஊக்குவிக்கக்கூடிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். உங்களுடைய கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள். பாமரன் கருத்து [ஸ்ரீதரன் பாஸ்கரன்]


2 thoughts on ““நேர மேலாண்மை” வெற்றிக்கு ஏன் அவசியம்?

  • October 24, 2021 at 9:20 pm
    Permalink

    அருமை நண்பா.

    Reply
    • November 11, 2021 at 8:14 pm
      Permalink

      nandri nanba

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *