மலர்விழி – வனிதாவின் வாழ்வை மாற்றிய கதை
பாத்திரத்தை கழுவிக்கொண்டே மலர்விழி “ஏண்டி இன்னுமா தூங்குற எழுந்து படி ,வந்தேன்னா பூசை வாங்குவ ” என மகள் வனிதாவை படிக்க சொன்னாள் . “ஏன் தான் அம்மா படி படினு படுத்துதோ ” என முணுமுணுத்தாள் வனிதா .
ஐந்து நிமிடம் இருக்கும் மலர்விழி கழுவிய பாத்திரங்களை கட்டையின் மேலே காய வைத்துவிட்டு வேலியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக்கொண்டு வனிதாவை “எவ்வளவு சொன்னாலும் கேக்குறாளா , படிக்க சொன்னா வலிக்குது ” திட்டிக்கொண்டே நெருங்கினாள் .
காலைத்தூக்கத்தில் மயங்கியிருந்த வனிதாவின் காதுகளில் அம்மாவின் இந்த கூப்பாடு கேட்கவில்லைபோலும் அவள் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருந்தால் . அதைக்கண்ட மலர்விழியோ கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள் “வீட்டு வேலை வயல்வேலை எதுவுமே பாக்கவிடாம படி படினு சொன்னா சொகமா துங்கிக்கிட்டு இருக்கியா ” என கொண்டுவந்த குச்சியால் நாலஞ்சு அடி அடித்துவிட்டாள் .
முதல் அடியிலேயே வனிதாவுக்கு மொத்த தூக்கமும் கலைந்துவிட்டது மலர்விழிக்கு தெரிந்தாலும் வந்த வேகத்தில் நாலஞ்சு அடி அடித்தபிறகே கோபம் தீர்ந்தது . வனிதா “படிக்கிறேன்மா படிக்கிறேன்மா ” என அலறிகொண்டே ஓடினாள் . இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு பரிமளாவோ ” ஏன்தான் இவ அந்த புள்ளைய படி படினு தெனமும் வெளுக்கிறாளோ ” என முணுமுணுத்தாள் .
மலர்விழி அடித்துவிட்டதால் வனிதா அவளிடம் கோவமாக பேசவில்லை . “வனிதா சாப்பாடு கட்டி வச்சுருக்கேன் , எடுத்துட்டு போடினு ” மலர்விழி கூறியது கேட்டதும் கோவத்தில் வேண்டுமென்றே வனிதா சாப்பாட்டை வைத்துவிட்டு பின்வாசல் வழியாக பள்ளிக்கு ஓடிவிட்டாள் . வனிதா இப்படி செய்வது முதல் முறையல்ல ,அடிக்கடி வனிதா இப்படி செய்வது வழக்கம் தான் .
சாப்பாட்டு கூடையை எடுத்துக்கொண்டு “பரிமளா அக்கா , விக்கி போயிட்டானா ,வனிதா சாப்பாட்டு கூடையை வச்சுட்டு போயிருச்சு குடுக்க சொல்லணும் , பள்ளிக்கூட சாப்பாடு புடிக்காது அவளுக்கு ” என்றாள் மலர்விழி . ” இவ்வளவு பாசமா இருக்க அப்பறம் ஏண்டி அவள படி படினு அடிச்சுக்கிட்டே இருக்க ” என்றார் பரிமளாக்கா .
“எனக்கு மட்டும் அவ மேல பாசம் இல்லையா என்ன , கட்டிகிட்ட குடிகாரன் பாதிலேயே விட்டுட்டு போன அப்பறம் இவளுக்காக தான நான் வாழுறேன் இல்லைனா எப்பவே அரளி கொட்டைய அரச்சு தின்னுபுட்டு போயிருப்பேன் . நான் தான் ஒழுங்கா படிக்காம இப்படி கஷ்டப்படுறேன் , இவளும் என்னைய மாதிரி ஆகிற கூடாதுன்னு தான் படி படினு அடிக்கிறேன் . அவங்க டீச்சர் இவ இன்னும் நல்லா படிச்சா அடுத்த வருஷமெல்லாம் உதவி பணம் வருமாம் அத்தவச்சு மேல படிக்கலாம்னு சொன்னாங்க . அடிச்சாவாவது படிப்பானு தான் அடிக்கிறேன் …என்ன பண்ண போறாளோ” னு கண்களை கசக்கிக்கொண்டு இந்தா விக்கி இத வனிதா கிட்ட குடுத்து சாப்பிட சொல்லுன்னு சொல்லிவிட்டு வந்தால் மலர்விழி .
ஜாமென்ட்ரி பாக்ஸை மறந்துட்டு போன வனிதா திடீரென்று வீட்டுக்குள்ளே ஓடிவந்த வனிதா விளக்கு பக்கத்தில் இருந்த ஜாமென்ட்ரி பாக்ஸை எடுத்துக்கொண்டு ஓடினாள் . மலர்விழி “ஏய் விக்கிகிட்ட சாப்பாடு குடுத்துருக்கேன் சாப்புடு என்றாள் . “பரிமளா அத்தைகிட்ட சொன்னதை என்கிட்ட சொல்லிருக்கலாம்ல நானே படிச்சுருப்பேனம்மா .ஏம்மா சொல்லல ..புரியாதுனா ” என்றால் வனிதா திரும்பி .
மலர்விழி கண்களில் கண்ணீருடன் வனிதாவை பார்த்தால் …அம்மா அழுகிறாள் என தெரிந்தவுடன் ஓடிவந்து அணைத்துக்கொண்டு “படிக்கிறேன்மா நான் படிக்கிறேன்மா ” என்றாள் வனிதா . “நான் படுற கஷ்டத்தை உன்கிட்ட எப்புடிடி சொல்லுவேன் .நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போயி சந்தோசமா இருக்கணும் அதுதாண்டி என் ஆச ” என வனிதாவை முத்தமிட்டாள் மலர்விழி .
பெரும்பாலான அம்மாக்கள் தங்கள் கஷ்டங்களை பிள்ளைகளிடம் சொல்வது இல்லை . பிள்ளைகளும் பெற்றோரின் கஷ்டங்களை உணருவதில்லை …ஆனால் உணரப்படும்போது அங்கே உணர்ச்சியோடு உத்வேகம் பிறந்து முன்னேற்றம் குடி கொள்ளும் .
வனிதா இன்று பொறியியல் பயின்று மாதம் 40 ஆயிரம் சம்பாதிக்கிறாள் .வரன் பார்த்துக்கொண்டிருக்கிறாள் அவளது அம்மா மலர்விழி . முதல் தகுதியே குடிப்பழக்கம் இருக்க கூடாதாம் .
நன்றி
ஸ்ரீ