பழைய சைக்கிள், ஷூ இல்லை – வைரலாகும் சிறுவனின் கதை கேளுங்கள்

என்னிடம் அது இல்லை, இது இல்லை ஆகவே தான் நான் அதைச் செய்திட முயற்சி செய்திடவில்லை, வெட்கமாயிருக்கிறது என தாழ்வு மனப்பான்மையால் மூழ்கிக்கிடப்போருக்கு இந்த சிறுவனின் கதை செவிலில் அறைந்து ஒரு சேதியைச் சொல்லும்.

கம்போடியாவின் தலைநகர் புனோம் பென்னில் சிறுவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெறுகிறது. அதில் பிச் தியாரா எனும் சிறுவன் வேகமாக சைக்கிள் ஓட்டினான். இதனால் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றான். ஆனால் போட்டியை கண்டவர்களில் பலர் கவனிக்கத்தவறிய அல்லது கவனித்தும் அப்படியே விடப்பட்ட ஒரு விசயம் சமூக வலைத்தளத்தில் பரவிய ஒரு புகைப்படத்தின் மூலமாக அந்த சிறுவனின் புகழை ஊரறிய செய்தது.

ஆமாம், அந்த சிறுவன் ஒரு பழைய சைக்கிளில் ஷூ எதுவும் அணியாமல் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டிருந்தான். ஹெல்மெட்,  ஷூ, புதிய சைக்கிள் என சகலமும் கொண்டு போட்டியில் பங்கேற்ற பல சிறுவர்களுக்கு முன்னால் தனது வேகத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தான் இச்சிறுவன்.  அந்தப்புகைப்படம் தான் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பிறகென்ன, சிறுவனைத்தேடி உதவிகள் வரத்துவங்கின. கம்போடியா இளைஞர் சங்கத்தின் தலைவர் இந்தச் சிறுவனுக்கு ஒரு புதிய சைக்கிளை பரிசளித்து அசத்தினார்.

தாழ்வு மனப்பான்மை அறவே இல்லை

பிச் தியாராவின் அப்பா ஒரு கட்டுமானதொழிலாளி. உடல்நலன் சரியில்லாத அம்மா. ஐந்து பிள்ளைகள் கொண்ட இக்குடும்பத்தில் தியாரா தான் கடைக்குட்டி. வறுமையும் ஏழ்மையும் தியாராவின் கனவுக்கு தடை போடவில்லை. சைக்கிள் இல்லையே ல், ஷூ இல்லையே, ஹெல்மெட் இல்லையே என எந்தவிதக் கவலையும் தயக்கமும் இன்றி போட்டியில் கலந்துகொண்டான். காலம் அவனை அடையாளப்படுத்தியது. அவனுக்கான உதவிகள் அவனை சேருகின்றன.

நினைத்துப்பாருங்கள், தன்னிடம் புதிய சைக்கிள் இல்லை ,ஷூ இல்லையென வீட்டிலேயே இருந்திருந்தால் அவனை உலகிற்கு தெரிந்திருக்குமா? உதவிகள் தான் கிடைத்திருக்குமா? இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பதைக்கொண்டு கனவுகளை அடைய புறப்படத் தயாராக வேண்டும். தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிய வேண்டும்.

செய்வோமா?

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *