நினைப்பதைவிடவும் நாம் வலிமையானவர்கள்
இருப்பவர்களுக்கு தான் இழந்துவிடுவோம் என்ற கவலை இருக்க வேண்டும். அனைத்தையும் இழந்துவிட்ட பிறகு நாம் ஏன் வாழ தயங்க வேண்டும்? துணிந்து இறங்குவோம். நாம் வலிமையானவர்கள்.
பல நாள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு நாம் எதிர்பார்த்தது கிடைக்காவிடில், நமக்கு பக்கபலமாக இதுவரைக்கும் இருந்தவொருவர் நம்மை விட்டு திடீரென அகலும் போது, நீண்ட நாள் பணியிலிருந்த நம்மை பணியிலிருந்து நீக்கும் போது – “நாம் உடைந்து போவோம்”. பாழடைந்த இருட்டு அறையில் நம்மை யாரோ தள்ளிவிட்டு பூட்டிவிட்டதைப்போல திக்கற்று திணறிப்போவோம். ஏனென்றால் நாம் அதுவரைக்கும் அப்படியொரு இழப்பை சந்தித்து இருக்கவே மாட்டோம். ஆனால் வாழ்க்கை என்பது நல்லதையும் கெட்டதையும் உள்ளடக்கியே தானே நகருகிறது.
ஒருவர் நம்மை இருட்டு அறையில் தள்ளி பூட்டிவிட்டால் நாம் முடங்கிப்போய் அங்கேயே தங்கிவிடுவதில்லை. அந்த அறையில் இருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என ஆராய்ந்து இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் முயற்சி செய்து பார்த்துவிடுவோம். இறுதிவரை நாம் அந்த இருட்டு அறையிலேயே இருந்து விட ஒப்புக்கொள்வதே இல்லை. வாழ்க்கையில் நமக்கு நடக்கும் சில சம்பவங்களை நாம் அப்படித்தான் எடுத்துக்கொண்டாக வேண்டும். அதிலிருந்து மீண்டு வர முயற்சிகள் செய்திட வேண்டும்.
பலர் சொல்ல கேட்டதுண்டு “எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ” என்ற புலம்பல்களை. ஆனால் உங்களைப்போன்றே தான் இங்கு பலருக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் பலர் அதனை மறந்து முயற்சித்து வெளியே வந்துவிடுகிறார்கள். சிலர் அதில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை நரகமானதாக சித்தரித்துக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்கள் தங்களுக்கு இதையெல்லாம் தாண்டிச்செல்ல சக்தியில்லை என நம்பிக்கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல, நினைப்பதைவிடவும் நாம் வலிமையானவர்கள். இதனை உணரச்செய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.
இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்
எல்லாம் இருப்பவருக்கு தான் இழப்பதை பற்றிய கவலை வேண்டும். ஆனால் அனைத்தையும் இழந்துவிட்டோம் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என நினைக்கும் நாம் எதற்காக கவலைப்பட வேண்டும். ஆனால் நம்மிடம் விலைமதிப்பற்ற உயிர் இருக்கிறது. ஆமாம், நாம் உயிரோடு தான் இருக்கிறோம். உயிருள்ள எந்த ஒரு மனிதனாலும் வரலாற்றை மாற்றி அமைக்க முடியும். ஆமாம், எத்தனையோ தொழிலதிபர்கள் தங்களது ஆரம்பகால வாழ்க்கையை பணம் எதுவும் இன்றி துவங்கியவர்கள் தான். விரும்பியவர்களை இழந்த எத்தனையோ பேர் அதனை மறந்து வாழ்க்கையில் ஜெயித்து நிற்கிறார்கள்.
இவன் ஒன்றுக்கும் ஆக மாட்டான் என ஆசிரியரால் புறக்கணிக்கப்பட்ட எடிசன் மாபெரும் முயற்சியினாலேயே உலகில் அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் என்ற பெருமையை பெற முடிந்ததே எப்படி. முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும். வாழ்க்கை என்பது இப்படிப்பட்டது தான் என்கிற எதார்த்தத்தை உணர்ந்து நாம் முன்னேறிச்செல்ல வேண்டும்.
நாம் ஒவ்வொருவருமே தனித்துவமானவர்கள்
வாழ்வின் பெரும்பான்மையான நேரங்களில் நாம் யார் பின்னாடியோ ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். அதுதான் பல சமயங்களில் நமக்கு ஏமாற்றத்தை தந்துவிடுகிறது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். ஆகவே பிறரை நோக்கி செல்வதை விட்டுவிட்டு உங்களை தேடி கண்டுபிடிக்க முயலுங்கள். நீங்கள் இதுவரை நினைத்துக்கொண்டிருப்பதை விடவும் சிறப்பானவர்கள். அதனை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். உங்களிடம் உள்ள சிறப்பான விசயத்தை மேலும் மெருகேற்றிக்கொள்ள நீங்கள் உங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். அதை நீங்கள் செய்ய பயணித்தால் வழிகளில் உங்களது வாழ்க்கைக்கு தேவையான விசயங்கள் அனைத்தும் தானாகவே கிடைக்கும்.
கற்றுக்கொள்ள தயாராக இருங்கள்
இங்கே எவரும் கற்றுத்தேர்ந்தவராக பிறப்பது கிடையாது. சம்பாதிக்கும் ஒரே கணவனும் இறந்துபோக எத்தனையோ மனைவிமார்கள் தையல் தொழில் செய்து, பால் வியாபாரம் செய்து, விவசாய வேலை செய்து வெற்றிகரமாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். காரணம், அவர்களுக்கு தெரியும் வாழ்க்கை இப்படிப்பட்டதுதான் என்று. ஆகவே தான் அவர்கள் துக்கத்தை அனுசரித்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திச்செல்ல துணிகிறார்கள்.
இங்கே கோழையாக சுற்றுகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் மெத்த படித்தவர்களாகவும் பணம் பல பார்த்தவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ஒன்றுமே இல்லாதவர்கள், படிப்பறிவு அற்றவர்கள் கூட வாழ முடியும், வாய்ப்பு இருக்கிறது என துணிந்து பயணிக்கும் போது உங்களுக்கு என்ன குறை.
ஒரேயொரு விசயத்தை மட்டும் மனதில் கொள்ளுங்கள். எவன் ஒருவன் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறானோ அவனை எக்காலத்திலும் வீழ்த்தவே முடியாது. அவன் எதையேனும் ஒன்றை பிடித்துக்கொண்டு கரை சேர்ந்துவிடுவான்.
நினைப்பதை விடவும் நாம் வலிமையானவர்கள் – எப்போதும் அதை மறந்துவிடாதீர்கள்.
இதுபோன்ற பல சுய முன்னேற்ற கட்டுரைகள் இங்கே இருக்கின்றன. கிளிக் செய்து படியுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!