370, 35A காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விசயங்கள்
இதுவரை சிறப்பு சலுகைகளுடன் இருந்த காஷ்மீர் இன்றுமுதல் இந்தியாவின் பிற பகுதிகளை போல மாறிவிட்டது
மிகவும் நுட்பமான காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்த எனது பார்வையை தெரிவிப்பதற்கு போதுமான அனுபவமோ அது சார்ந்த விசயங்களோ தெரியவில்லை என்றே கருதுகிறேன். இருந்தாலும் 370, 35A காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்த தவறான விசயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை அடுத்து அது சார்ந்த விசயங்களை உங்களுக்கு விளக்கிடவே இந்தப்பதிவு. இதனை படித்துவிட்டு நீங்களே காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா சரியா தவறா என்ற முடிவிற்கு வரலாம்.
காஷ்மீர்
இந்தியா பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது காஷ்மீர் தனி மாகாணமாக இருந்தது. இந்தியாவிற்கு பிரிட்டிஷ் சுதந்திரம் கொடுக்கும் போது காஷ்மீர் மாகாணம் இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என எந்த நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை. அது அவர்களின் விருப்பம் சார்ந்ததாக விடப்பட்டது. அப்போது காஷ்மீர் மன்னராக ஹரி சிங் என்ற இந்து இருந்தார், அதே சமயம் காஷ்மீர் அதிக முஸ்லீம் மக்கள் வாழுகின்ற பகுதியாக இருந்தது. எனவே அப்போது மன்னர் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது இல்லை என்ற முடிவை எடுத்தார்.
ஜம்மு மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். அதேவேளையில் காஷ்மீரின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர். ஆனால் இருபெரும் நாடுகளுக்கு மத்தியில் தனியாக செயல்படுவதென்பது சாதாரமானதா என்ன? பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவில் ஒரு பழங்குடியினப்படை காஷ்மீர் பகுதியை ஆக்கிரமித்தது. அதுதான் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி என அழைக்கப்படுகிறது.
இதிலிருந்து தப்பிக்க இந்தியாவிடம் மன்னர் ஹரி சிங் உதவி கோர இந்தியாவுடன் இணைந்தால் நாங்கள் காஷ்மீர் பாதுகாப்புக்கு முழு பொறுப்பு ஏற்கிறோம் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் இந்தியா களமிறங்கியது.
ஏற்கனவே 1948 ஆம் ஆண்டு செய்துகொண்டுள்ள ஒப்பந்தப்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 370 [ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து] பின்னர் 35A வை அப்போதைய குடியரசுத்தலைவர் திரு ராஜேந்திர பிரசாத் அனுமதியின் பேரில் 370 இன் இணைப்பாக ஏற்கப்பட்டது. 35A ஆனது காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது
370, 35-A வழங்கும் சிறப்பு சலுகைகள் என்ன?
>> காஷ்மீர் மக்கள் தான் அதன் குடிமக்கள்
>> வேறு மாநிலத்தை சேர்ந்த எவரும் காஷ்மீரின் குடிமக்கள் ஆக முடியாது
>> மே 14, 1954 முதல் வாழ்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும்
>> மேற்கூறிய தேதியிலிருந்து 10 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தவர்கள் காஷ்மீரின் நிரந்தர குடிகள்
>> அரசுப் பணி பெறும் உரிமை, நிலம், வீடு போன்ற சொத்து வாங்கும் உரிமை, அரசு ஊக்கத்தொகை மற்றும் பிற சலுகைகளைப் பெறும் உரிமைகள் அனைத்தையும் நிரந்தர குடிமக்களே பெறலாம்
>> வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது. ஆனால் காஷ்மீர் மக்களால் வெளி மாநிலங்களில் சொத்துகளை வாங்க முடியும்.
>> ஜம்மு- காஷ்மீரில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாது.
>> இதுபோன்ற பெண்கள் சொத்திலும் உரிமை கொண்டாட முடியாது. [ பின்னர் அந்த பெண்கள் காஷ்மீர் குடிமக்களாக கருதப்படலாம் என ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது ]
>> 370 வழங்கும் சிறப்பு சலுகைகள் படி, காஷ்மீருக்கென தனி அரசமைப்பு, தனி கொடி வைத்துக்கொள்ளலாம்
>> தகவல்தொடர்பு, வெளியுறவு தவிர வேறு அனைத்திலும் அவர்கள் சுதந்திரமாக செயல்படலாம்
>> இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது
>> உச்சநீதிமன்ற உத்தரவுகளும் நேரடியாக காஷ்மீரில் நடைமுறைக்கு வராது
>> சட்டமன்ற ஆயுட்காலம் 6 ஆண்டுகள்
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவினால் ஏற்படப்போகும் மாற்றங்கள்
எளிமையாக கூற வேண்டுமானால் இனி காஷ்மீர் தமிழகத்தை போன்ற ஒரு பகுதி, காஷ்மீர் மக்கள் நம்மை போன்றவர்கள். இனி அவர்களுக்கு என சிறப்பு சலுகைகளோ உரிமைகளோ இனி கிடையாது.
இந்திய குடியுரிமை உள்ள யார் வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம்.
ஜம்மு காஷ்மீர் அரசுப் பணிகளில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.
முன்பு அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் உரிமை மாநில முதல்வரின் ஆளுகைக்கு கீழ் இருந்தது. இப்போது அது ஆளுநர் வழியே நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்ற சட்டங்கள் அனைத்தும் இனி காஷ்மீருக்கும் பொருந்தும்
உச்சநீதிமன்ற உத்தரவுகளும் நேரடியாக காஷ்மீரில் நடைமுறைக்கு வரும்.
காஷ்மீர் மாநிலத்திற்கு என்றே உள்ள கொடி முக்கியத்துவத்தை இழக்கும்.
சட்டப்பேரவையின் ஆயுள் காலம் ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக மாறும்.
பெண்கள் தொடர்பான உள்ளூர் தனிநபர் வழக்காறு சட்டங்கள் இந்த சட்டத்திருத்தங்கள் நிறைவேறினால் இனி இருக்காது.
இதுநாள் வரை காஷ்மீரில் இந்திய தண்டனைச் சட்டம் அமலில் இல்லை. இனி அங்கு இந்திய தண்டனை சட்டம் அமலில் இருக்குமா அல்லது உள்ளூர் ரன்பீர் தண்டனை சட்டம் அமலில் இருக்குமா என்பதை மத்திய அரசோ அல்லது நாடாளுமன்றமோ முடிவு செய்யும்.
முன்னதாக இருந்த உள்ளூர் பஞ்சாயத்து சட்டங்கள் நீடிக்குமா அல்லது மாற்றம் செய்யப்படுமா என்று இனிதான் முடிவு செய்யப்படும்.
பாமரன் கருத்து
நான் ஏற்கனவே கூறியது போலவே மிகவும் நுட்பமான இந்த விசயத்தில் கருத்து தெரிவிக்க மிகவும் ஆழ்ந்த அறிவு அவசியமாகிறது. ஆனால் இந்த விசயத்தை கவனிக்கும் போது இருவேறு கோணங்களில் பார்க்கவேண்டி இருக்கிறது.
ஒருபுறம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கக்கூடிய காஷ்மீருக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தனித்தனி சட்டம், உரிமைகள் தேவையா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பெறப்படுகின்ற நிதியினை கொண்டுதான் அங்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. ஏன் அவர்களையும் நம்மை போன்றே சராசரி இந்தியராகவும், காஷ்மீர் பகுதியினை இந்தியாவின் பிற பகுதிகளை போன்றும் பார்க்க கூடாது? இதுவொரு கோணம்.
இன்னொரு கோணம், நம்மோடு அவர்கள் இணைந்திடும் போது இந்த இந்த சிறப்பு உரிமைகளை தருகிறோம் என ஒப்பந்தம் செய்துகொண்டு தான் அவர்களை இணைத்துக்கொண்டோம். இப்போது அவர்களுடைய விருப்பம் இல்லாமல் நாம் உறுதியளித்த சிறப்பு உரிமைகளை திரும்ப எடுத்துக்கொள்வது என்பது சரியானதாக தெரியவில்லை. இப்படி ஒவ்வொரு அரசும் தனது நிலைப்பாடுகளில் மாறி மாறி முடிவுகளை எடுக்கும் போது வெளியுறவில் நம்பகத்தன்மையை அது பாதிக்கும் என பார்க்கப்படுகிறது.
முழுமையாக இக்கட்டுரையை படியுங்கள். உங்களது கோணத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!
Good information
Pingback:இன்டர்நெட் - இனி இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை – பாமரன் கருத்து