ஏன் இவர்களின் சாவு நமக்கு வலிப்பதில்லை? | துப்புரவு பணியாளர்களின் மரணம்

இவர்கள் தொடர்ச்சியாக அகால மரணம் அடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த தேசம், எதுவுமே நடக்காததுபோல் நகர்ந்துகொண்டிருக்கிறது.
துப்புரவு பணியாளர்கள்

 

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே “பாதாள சாக்கடை அல்லது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்திடும் போது இந்தியாவில் 1993 முதல் 620 பேர் இறந்துள்ளதாகவும், அதில் 88 பேர் கடந்த மூன்றாண்டுகளில் இறந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக 144 இறப்புகளோடு தமிழகம் முதலிடத்தையும் 131 இறப்புகளோடு குஜராத் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது ”  என தெரிவித்துள்ளார். இந்த கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதனால் இனி ஒரு அப்பாவி இறக்கமாட்டாரா? அது தடுக்கப்பட்டு விட்டதா? என எளிமையான கேள்வியை முன்வைத்தால் “இல்லை” என்பதே பதிலாக இருக்கும். 

 

இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தான். கணக்கில் வராத நபர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

 

மனித கழிவுகளை மனிதனே அகற்றலாமா?

 

சாலையில் நடந்து செல்லும்போது மிருகங்களின் கழிவுகளை எதிர்பாராமல் மிதித்துவிட்டால் நம் மனம் என்ன பாடுபடுகிறது? பெற்ற தாய் தந்தையினரின் கழிவுகளை நம்மால் சங்கடம் இல்லாமல் சுத்தம் செய்திட முடிகிறதா? ஆனால் பலநாட்கள் சேர்ந்த, யாரென்றே அறியாத மனிதர்களின் கழிவுகள் கொட்டிக்கிடக்கும் பாதாள சாக்கடை அல்லது கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி, மூழ்கி சுத்தம் செய்திடும் மனிதர்களை நினைத்துப்பாருங்கள், அவர்களுடைய மனதை நினைத்துப்பாருங்கள், இந்த வேலையை செய்துவிட்டுப்போனால் உணவினை நிம்மதியாக சாப்பிட முடியுமா என நினைத்துப்பாருங்கள். 

 

கொடுமையிலும் கொடுமையான விசயமிது நண்பர்களே, அனுபவித்தால் மட்டுமே அதன் கொடுமையை நம்மால் முழுவதுமாக அறிந்துகொள்ள முடியும்.இத்தனை கொடுமையான வேலையை ஒரு மனிதர் செய்கிறார் என்றால் அதற்கு வறுமை தான் மிக முக்கிய காரணமாக இருக்க முடியும். அப்படி வறுமையின் பிடியில் இந்த வேலைக்கு வரும் ஒருவர் திடீரென இறந்துபோனால் அந்த குடும்பத்தின் வறுமை நிலை இன்னும் மோசமாக அல்லவா மாறிப்போகும். ஏன் இதனை கண்டுகொள்ள மறுக்கிறோம்.

தடை இருக்கிறது ஆனாலும் நடக்கிறது

துப்புரவு பணியாளர்கள்

 

இந்தியாவில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனித கழிவுகளை மனிதர்களே தான் இன்றும் அகற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படும்போது மட்டும் அதனை பற்றி பேசிவிட்டு பின்னர் அதனை விட்டுவிடுகிறோம். லட்சம் கோடிகளில் பட்ஜெட் போடுகிறோம், ஆயிரம் கோடிகளில் விண்வெளிக்கு செயற்கைகோள்களை பறக்கவிடுகிறோம், போருக்காக பல்லாயிரம் கோடிகளில் ஆயுதங்களை வாங்கிக்குவிக்கிறோம், கடன் வாங்கி திருப்பி கட்டாதவர்களின் கடன்களை ரத்து செய்கிறோம். ஆனால் மலம் அள்ளும் மனிதர்களின் கரங்களுக்கு ஒரு மாற்று தேட மறுக்கிறோம்.

கழிவுகளை அகற்ற ரோபோ இருக்கிறது ஆனால்?

சாக்கடை சுத்தம் செய்யும் இயந்திரம்

 

அண்மையில் கூட கும்பகோணம் நகராட்சியில் சாக்கடையை சுத்தம் செய்வதற்கு ரோபோ பயன்படுத்தப்படுவதாக செய்தி வெளியானது, கேரளாவிலும் கூட பாதாள சாக்கடையை சுத்தம் செய்திட ரோபோக்கள் பயன்படுத்தப்படப்போவதாக செய்திகள் வந்தன. உண்மையிலேயே இந்த இடங்களில் முற்றிலுமாக ரோபோதான் பயன்படுத்தப்படுகிறதா என்பது சந்தேகமே. அத்தனையும் தாண்டி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் இவை ஏன் கொண்டுசெல்லப்படுவது இல்லை? நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் குறைந்தபட்சம் கையுறைகளை கூட போடாத நபர்கள் தானே கழிவுகளை அகற்றுகிறார்கள். இவை தடுக்கப்படுவது எப்போது?

ஏன் இவர்களின் சாவு நமக்கு வலிப்பதில்லை

 

நமது வீட்டில் தண்ணீர் ஊற்றும் போது அடைத்துக்கொள்ளாமல் சென்றால் போதுமானது, சாலையில் சாக்கடை நீர் கசியாமல் அது நம் மீது படாமல் இருந்தால் போதுமானது. மற்றபடி,  சக மனிதன் ஒருவன் தன்னுடைய உடல் முழுவதையும் சாக்கடைக்குள் நுழைத்து கழிவுகளை அகற்றுகிறானே என்ற கவலை நான் உட்பட மக்களுக்கு அவசியமில்லாததாகிவிட்டது.

 

ஆட்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க வேண்டும், மிகப்பெரிய விவாதமாக மாறுகின்ற பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், பேருந்து நிழற்குடை கட்ட வேண்டும், போட்ட சாலையை திரும்ப திரும்ப போட வேண்டும், மானியங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும், அனைத்தும் இருக்கும் மக்களுக்கு இலவசம் வாரி வழங்கிட வேண்டும். இவை தானே இப்போது நடக்கின்ற விசயங்கள். மற்றபடி, கழிவுகளை அகற்றுகிறவர்களுக்கு இயந்திரம் கொடுப்பது, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொடுப்பது அடிப்படையான விசயமென்பது புரிவதில்லையே ஏன்?

 

பகுத்தறிவு மாநிலம், கல்வி கற்றவர்கள் அதிகம் வாழுகிற மாநிலம், இந்தியாவிற்கு வருமானம் ஈட்டித்தரும் முன்னனி மாநிலங்களில் ஒரு மாநிலம் என பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் தமிழகம் சாக்கடை சுத்தம் செய்யும் பணியாளர்கள் இறப்பு பட்டியலில் முதலிடம் வகிப்பதென்பது மிகவும் கவலைப்படவேண்டிய விசயம். அரசு உடனடியாக செயல்பட்டு இந்த அவப்பெயரை நீக்குவதற்கான வேலைகளை துவங்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும்.

 

சமூகப்போராளிகள், சமூகவலைத்தளத்தில் இருக்கும் நண்பர்கள், பொதுமக்கள் இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். கொடுப்பீர்களா? ஆம் எனில் கமெண்டில் உங்களது ஆதரவுக்குரலை பதிவிடுங்கள்

 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

3 thoughts on “ஏன் இவர்களின் சாவு நமக்கு வலிப்பதில்லை? | துப்புரவு பணியாளர்களின் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *