ஜெய் ஸ்ரீராம் வன்முறைகள் | மதங்களின் பெயரால் நடக்கும் வன்முறைகள் ஒழியட்டும்
கடவுள் மனிதர்களை காப்பாற்றுவார் என்ற காலம் போய் இப்போது மனிதர்கள் கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற துவங்கி விட்டதனால் ஏற்படுகிற விளைவுகள் தான் இவை
மதத்தின் பெயரால் வன்முறைகளும் படுகொலைகளும் பன்நெடுங்காலமாகவே நடந்து வருகின்றவைதான் . போதிய கல்வி அறிவு , விழிப்புணர்வு இல்லாத காலங்களில் ஏற்பட்ட வன்முறைகளை காட்டிலும் படித்தவர்களால் விவரம் அறிந்தவர்களால் திட்டமிட்டு நடத்தப்படுகின்ற வன்முறைகள் மிகவும் ஆபத்தானவை . உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டியவை . குறிப்பாக சிறும்பான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில் மிக முக்கியமானவை பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த வன்முறை , குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை , மதங்களின் பெயரால் நடக்கும் வன்முறை . இவற்றை உடனடியாக தடுக்கவில்லையெனில் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்பதே உண்மை .
ஜெய் ஸ்ரீராம் வன்முறைகள்
குறிப்பாக முஸ்லீம் மதத்தினரை குறிவைத்து, அவர்களை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி அவர்களின் மீது தாக்குதல்களை நடத்துவதாக குற்றசாட்டு எழுந்திருக்கிறது. கடந்த மே மாதம் டெல்லியில் முகமது பரக்கத் , மேற்குவங்கத்தில் முகமது ஷாருக் , ஜுன் 18 அன்று ஜார்கண்டில் அன்சாரி இவர்கள் அனைவரையுமே ஜெய் ஸ்ரீராம் என சொல்லுமாறு வற்புறுத்தி தாக்குகிறது ஒரு கும்பல் . பல மணிநேர தாக்குதலுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்சாரி உயிரிழந்துபோகிறார் . பின்னர் தான் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது [அன்சாரி ஒரு திருடர் ஆகையினால் தான் பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்தார் எனவும் சமூகவலைத்தளங்களில் சிலர் பேசுகிறார்கள் ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை]
தவறுக்கு தவறு சரியாகாது
ஒரு முஸ்லீம் குழந்தை கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என வைத்துக்கொள்வோம் . அதற்கு வருத்தம் தெரிவித்தோ அல்லது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணை கொடுக்கவேண்டும் என குரல் கொடுத்தாலோ இன்னொரு பக்கம் ஒரு முஸ்லீம் நபரால் ஒரு குழந்தை கற்பழிக்கபட்டு கொல்லப்பட்டார் இதற்கு ஏன் யாரும் குரல் எழுப்பவில்லை என்கிறார்கள் பலர் .
யார் பாதிக்கப்பட்டாலும் தவறுதான் , யார் குற்றம் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் . இதில் மதங்களுக்கு என்ன வேலை என்பது ஆச்சர்யமானதாகவும் நாமெல்லாம் மனிதர்கள்தானா எனவும் சந்தேகிக்க வைக்கிறது .
ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
இதுபோன்ற குழுக்கள் எந்தவித பயமும் இன்றி செயல்படுவது எப்படி? வெளிப்படையாக ஆட்சியாளர்கள் இதனை ஆதரிக்காவிட்டாலும் மறைமுகமாக இதனை அவர்கள் ஆதரிக்கிறார்களா என்ற சந்தேகத்தை நமக்கு இவை தருகின்றன. இந்தியாவின் பிரதமர் திரு மோடி அவர்களும் மற்ற அரசியல் தலைவர்களும் உடனடியாக தங்களது கடுமையான கண்டனத்தை இந்த விசயத்தில் தெரிவிக்க வேண்டும். குடியரசுத்தலைவர் தன் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதனை உறுதிப்படுத்திட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். இனி எவரும் இதுபோன்றதொரு செயலில் ஈட்டப்படக்கூடாது என்ற வகையில் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும்.
கடவுளை காப்பாற்றிட முயலாதே
ஜெய் ஸ்ரீராம் கோஷமும் அதனால் நடைபெறுகின்ற வன்முறைகளை பற்றி பேசுகிற அதே நேரத்தில் , கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து மதமாற்றம் செய்ய முயலும் கிறிஸ்துவ மிஷினரிகள் குறித்தும் , மூளைச்சலவை செய்து தங்களது மார்க்கத்திற்கு அழைக்கும் முஸ்லீம் நபர்கள் குறித்தும் பேசித்தான் ஆகவேண்டி இருக்கின்றது . இவை அனைத்துமே தவறான செயல்கள் தான்.
ஒவ்வொரு மதமும் அன்பை விதைக்கவும் சக மனிதர்களை மதிக்கவும் சொல்வதாகத்தான் சொல்கிறார்கள் . ஆனால் மதத்தின் மீது தீவிர பற்றாக இருப்பவர்கள் தான் பிறரிடம் தங்களது மதத்தை திணிக்க முயலுகிறார்கள் , வன்முறையை நிகழ்த்துகிறார்கள் .
இப்படி இவர்கள் நடந்துகொள்ள முக்கிய எண்ணம் எங்கிருந்து பிறக்கிறது “கடவுளை மதத்தை நாம்தான் காப்பாற்றிட வேண்டும்” என்ற எண்ணத்தில்தான் பிறக்கிறது . ஆனால் கடவுளை காப்பாற்றிட முயலும்போது வன்முறைகள்தான் நடைபெறுகின்றது .
இவற்றை பார்க்கும்போது எனக்கு ஒரே ஒரு கேள்விதான் , “உன்னை படைத்த கடவுளை காப்பாற்றிட முயலுவது சரியா? நீ காப்பாற்றிடும் நிலையிலா கடவுள் இருக்கிறார்” என்பதுதான் .
அன்பை விதையுங்கள் !
மகிழ்ச்சியை அறுவடை செய்திடுங்கள் !
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!