ஏன் இந்தி திணிப்பை எதிர்க்கின்றோம் | We are only against Hindi imposition
இந்தி மொழியினை ஏன் கற்க வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களே இல்லை
இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையானது வரைவு அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வரவேற்பிற்கு உரியது. மக்களின் உணர்வினை புரிந்துகொண்ட மத்திய அரசுக்கு நன்றி.
“அதோ அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய ரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால், அவருடைய முகத்தையே பாருங்கள். தன்னுடைய கலாச்சாரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடி அப்போரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்? பல்லாயிரக் கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதிமொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா?”
இந்த வரிகள் மொழிப்போரில் முதன் முதலாக உயிரை இழந்த நடராசனின் இறுதி ஊர்வலத்தில் அண்ணா ஆற்றிய உரையின் ஓர் பகுதி. மொழிப்போர் இன்றோ நேற்றோ துவங்கிய போராட்டம் அல்ல, நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே ஆரம்பித்த போராட்டம். மொழிப்போரின் வரலாற்றினை எழுதவேண்டும் எனில் 1937 ஆம் ஆண்டிலிருந்து துவங்க வேண்டும் என கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சுதந்திரத்திற்கு முன்னதாக ராஜகோபாலாச்சாரி தலைமையிலான மகாண அரசும் சுதந்திரத்திற்கு பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான மகாண அரசும் முயன்றன. அவை கடும் போராட்டங்களினால் தடைபட்டன.
ஹிந்தி கற்கலாமா?
நிச்சயமாக கற்கலாம். ஹிந்தி மட்டுமல்ல, விரும்பினால் எந்த மொழியையும் அனைவரும் கற்கலாம். ஆனால் அதனை ஒருவர் விரும்பி செய்யவேண்டும். நீ கற்றுத்தான் தீர வேண்டும் என வலியுறுத்தக்கூடாது. குறிப்பாக இந்தியா போன்றதொரு பல்வேறு இன மத மொழி கலாச்சாரங்களை கொண்ட நாட்டில் திணிக்கக்கூடாது. நாம் சுதந்திரம் அடைந்தபிறகு மொழிவாரியாக மாநிலங்களை பிரித்ததற்கு மிக முக்கிய காரணமே அந்த மொழியையும் கலாச்சாரச்சாரத்தையும் காப்பதற்காகத்தான். இப்போது ஒரு மொழி ஒரு தேசம் என்ற கொள்கையை கொண்டுவந்தால் நம்முடைய அடிப்படையையே உடைப்பதற்கு ஒப்பானதாக அது அமைந்துவிடும்.
ஹிந்திக்கான தேவை என்ன?
ஹிந்தியை அனைவரும் கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக பேசுபவர்களிடம் “நான் ஏன் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைத்தால் நாம் ஏற்றுக்கொள்கிற மாதிரியான ஒரு காரணத்தையும் கூறுவதே இல்லை. மாறாக ஆட்சி செய்பவர்களின் பிள்ளைகள், பணக்காரர்களின் பிள்ளைகள் கற்கிறார்கள், ஏழைகள் ஏன் கற்க கூடாது என்கிறார்கள். இது எப்படி நாம் கேட்கிற கேள்விக்கு பதிலாக எப்படி அமையும். நிச்சயமாக அமையாது.
இந்தி திணிப்பை நான் இந்த உதாரணத்தின் மூலமாக உங்களுக்கு புரியவைக்க முயலுகிறேன். ஆட்சியாளர்களின் குழந்தை விண்வெளி குறித்த பாடங்களை படிக்கிறான் நான் கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து அவர்கள் படிப்பதை இனி ஏழை குழந்தைகளும் படிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. அதனை அறிமுகம் செய்திட கட்சிக்காரர்களோ மக்களோ எதிர்ப்பு தெரிவித்தால் அதனை தவறு என கூறலாம். ஆனால் இந்தி என்பது மொழி மட்டுமே, அறிவு அல்ல. இதனை நாம் உணர வேண்டும்.
இருமொழிக்கொள்கையே போதுமானது
தற்போது நாம் பின்பற்றி வருகிற இருமொழிக்கொள்கையே போதுமானதாக இருக்கிறது என்பதே எனது கருத்து. அரசியல் காரணங்கள் இன்றி இதனை வலியுறுத்திக்கூற என்னிடம் வலிமையான காரணங்கள் இருக்கின்றன.
தமிழ் மொழி நம்முடைய கலாச்சாரம் சார்ந்தது அதனை எந்த வகையிலும் நம்மால் இழந்துவிட முடியாது. ஆனால் இன்றைய உலகம் கைக்குள் அடங்கிவிட்டது. நம்முடைய கருத்துக்களை பிறருடனும் பிறருடைய கருத்துக்களை நம்முடனும் பகிர்ந்துகொள்வது இன்றியமையாத ஒன்று. அதற்காக பிறரை தமிழ் மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என வலியுறுத்திட முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் ஏற்கனவே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் ஆங்கிலம் என்ற ஒரு மொழியினை நாம் கற்றுக்கொண்டால் நிச்சயமாக உலகம் முழுமைக்கும் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ள முடியும். அதேபோல கேரளாவில் உள்ள ஒருவர் மலையாளத்தோடு ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் நம்முடனும் உலகத்துடனும் தொடர்புகொள்ள முடியும். ஏற்கனவே இந்தி அறிந்தவர்கள் அதோடு ஆங்கிலத்தை கற்றுக்கொண்டாலே நம்மோடு தொடர்புகொள்ள முடியும்.
சிலர் கேட்கலாம் , இந்தி நம் நாட்டினுடைய மொழி ஆங்கிலம் என்பது அந்நிய மொழியாயிற்றே அதற்க்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்று. நல்ல கேள்வி தான், உலகில் ஒவ்வொருவருக்குமே ஒரு மொழி தான் தாய்மொழியாக இருக்கும். அதற்க்கு அடுத்தபடியாக கற்றுக்கொள்ளுகிற மொழிகள் அனைத்துமே வேலைக்காகவோ அல்லது அதன் மீதான ஈர்ப்பினாலோ தான் இருக்கும். நம்மை பொறுத்தவரையில் இந்தியும் கூட அந்நிய மொழி போன்றது தான். நாம் ஒருவேளை இந்தி கற்றால் கூட மீண்டும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ளவேண்டி வரும் அப்போது தான் உலகின் பிற பகுதிகளில் வாழ்வோரோடு கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட முடியும். இதற்காகத்தான் இந்தி தேவை இல்லை என்கிறோம்.
மீண்டும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன், இந்தி உட்பட எந்த மொழியையும் கற்றுக்கொள்ள ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் அது அவரது விருப்பத்தின்பெயரில் நடக்க வேண்டும்.
உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!