தேர்தலில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் – விழிப்புணர்வு தேவை

 


 

முந்தைய தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு “பிரச்சார வியூகம்” காரணம் மிக முக்கியமான விசயம் என கருதப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் சரி இதற்க்கு பின்னர் வரப்போகிற தேர்தலிலும் சரி வெற்றி பெறுவதற்கு “சமூக வலைதளதளம்” முக்கியமான காரணமாக அமையும்.

 

Read this also : கட்சிகளால் முடக்கப்படும் சராசரி மனிதனின் கருத்துக்கள்

 

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறப்போகிற சூழலில் தேர்தல் ஆணையம் கூகுள், Facebook உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய சாராம்சம் “பொய்யான செய்திகள்” பரப்புவதை தடுப்பது மற்றும் சமூகவலைத்தள பிரச்சாரத்திற்கு செலவு செய்கின்ற தொகையினை வேட்பாளரின் தேர்தல் செலவு பட்டியலில் சேர்ப்பது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள நிறுவனங்கள் பொய்யான செய்திகளை பரப்புவது உள்ளிட்டவற்றிற்கு உதவுவதாக தெரிவித்துள்ளன.

ஒருநாளைக்கு சராசரியாக ஒரு இந்தியர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சமூகவலைத்தளத்தில் இருக்கிறார் என ஆய்வு கூறுகிறது. புதிய வாக்காளர்கள் மற்றும் இளையோர்களின் சராசரி நிச்சயமாக இதனை விட அதிகமாகவே இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் சமூகவலைத்தளங்கள் எப்படி தேர்தலில் மாற்றத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதனை பார்ப்போம்.

 

நல்ல பதிவு என கருதினால் பிறருக்கும் பகிருங்கள்

 

சமூகவலைத்தளத்தை நம்பிடும் மக்களின் மனநிலை

 

சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வரும்போது “அட இது அவங்களோட டிவி” அப்படித்தான் சொல்லுவாங்க, என மக்கள் அந்த செய்தியை பெரிய தாக்கத்தோடு அணுக மாட்டார்கள். ஆனால் அதே நபர்கள் WhatsApp அல்லது Facebook இல் காய்ச்சலுக்கு முருங்கை சாறு உடனே தீர்வு தரும் என எவரேனும் பகிர்ந்து இருந்தால் அதனை செய்து பார்ப்பார்கள், பிறரோடு பகிர்வார்கள், நம்புவார்கள்.

Read this post : உங்கள் முடிவுகளை facebook டேட்டாவை பயன்படுத்தி “கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா” நிறுவனம் மாற்றுவது எப்படி ?

நம்மை போன்ற ஒருவர் தான் இந்த செய்தியை பகிர்ந்து இருப்பார் என்கிற மனநிலை தான் சமூகவலைத்தளங்களில் வருகின்ற செய்திகளை மக்களை எளிமையாக நம்ப வைக்கிறது. பல சமயங்களில் நமக்கு தெரிந்தவர்களே அந்த செய்திகளை பகிரும்போது நம்பிக்கை கூடுகிறது.

ஆனால் நமக்கு வரும் அல்லது நமக்கு காட்டப்படும் செய்திகளில் பல கட்டமைக்கப்பட்டவை என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


கட்டமைக்கப்படும் அரசியல் பிரச்சாரம்

 

இப்போதெல்லாம் தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சியும் “தொழில்நுட்ப பிரிவு” என்ற ஒரு பிரச்சார பிரிவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இவர்களின் முக்கியப்பணி சமூகவலைத்தளங்களில் தாங்கள் வேலை செய்யக்கூடிய அரசியல் கட்சிக்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பது. இதற்காக மீம்ஸ் கிரியேட் செய்வது, புள்ளிவிவரங்களை பரப்புவது, எதிராளியின் கடந்த கால வீடியோக்களை திரட்டி வெளியிடுவது என பல வேலைகளை செய்வார்கள்.

 

தற்போது இருக்கக்கூடிய சமூக வலைத்தளங்களில் “பணம் செலுத்தி” விளம்பரங்களை காட்டச் செய்திட இயலும். இதனை இந்த தொழில்நுட்ப பிரிவினர் நன்றாக பயன்படுத்திக்கொண்டு குறிப்பிட்ட நபர்களுக்கு விளம்பரங்களை காட்டசெய்வதன் (Targeting) மூலமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.


எளிமையாக குழுக்களை உருவாக்கிட முடியும்

 

முந்தைய காலகட்டத்தில் பிரச்சாரம் செய்வதற்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி செல்ல வேண்டும், அவர்களும் தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு கட்சிகாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் சமூகவலைத்தளங்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைத்து இருக்கின்றன. ஆமாம், இப்போது ஒத்த கருத்து உடையவர்களை ஒரு நொடியில் உங்களது WhatsApp குழுவிலோ ட்விட்டர் ,facebook போன்றவற்றிலோ இணைத்துக்கொள்ள முடியும், அவரும் எளிமையாக Share செய்வதன் மூலமாக பிரச்சார குழுவில் இணைந்து விடுகிறார்.


 

செலவில்லாமல் நடத்தப்படும் பிரச்சாரம்

 

 

இன்று மோடியோ அல்லது ராகுல் காந்தியோ அல்லது ஸ்டாலினோ அல்லது பழனிச்சாமியோ தங்களது முகநூல் அல்லது ட்விட்டர் இல் ஏதேனும் கருத்துக்களை பதிவிட்டால் போதும் அவை செய்தி தொலைக்காட்சிகளில் பிரதான செய்தியாகி தீயாக பரவ ஆரம்பித்து விடுகிறது. சமூக வலைத்தளங்களில் பலரால் பரப்பப்படுகிறது. இதற்காக செய்யப்பட்ட செலவு என்ன? ஒன்றுமில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் அதிக நேரத்தை செலவிடுவார் , அங்கு தனது கருத்துக்களை பதிவிடுவார். அவை தானாக பல மீடியாக்களால், சமூகவலைத்தளவாசிகளால் பரப்பப்படும்.

 


நேரடியாக மக்களை சந்திக்கும் தலைவர்கள்

 

வீதியில் தலைவர்களை கண்டு உற்சாகம் அடைந்த காலங்கள் போய்விட்டன, இன்று சமூகவலைத்தளங்கள் மூலமாக உங்களது வீட்டிற்கு உள்ளேயே தலைவர்கள் வந்துவிடுகிறார்கள். உதாரணத்திற்கு மோடி அவர்கள் தனது ட்விட்டர் மூலமாக பேசுகிறார் எனில் கிட்டத்தட்ட பாதி இந்தியர்களை அவர் நேரடியாக சந்தித்து விடுகிறார். இதற்காக அவர் செலவு செய்தது என்னவோ இரண்டு மூன்று நிமிடங்கள் தான். இந்த வாய்ப்பினை சமூகவலைத்தளங்கள் தான் வழங்குகின்றன.


 

சமூகவலைதளங்களில் பொய் செய்திகள்

 

ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரச்சாரம் செய்வது தவறல்ல, ஆனால் பொய்யான செய்திகளை கட்டமைத்து அதனை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவது தான் கவனிக்கப்படவேண்டிய விசயம். இதனை அரசியல்கட்சிகள் , தனி நபர்கள் என பலர் செய்துவருகின்றனர். பொய்யான செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரப்பி விடப்பட்டால் அதனை தடுப்பது என்பது மிகக்கடினம். பல ஆண்டுகள் கழித்த பின்னரும் எவரோ ஒருவர் நமக்கு அந்த பொய்யான செய்தியை பகிர்வதை இன்றும் பார்க்க முடிகிறது.

 

நீங்கள் அப்படியான பொய் செய்தியை பார்த்து இருக்கிறீர்களா?

 

இப்படியான பொய் செய்திகள் பாமர மக்களும் நம்புகிற விதத்தில் இருக்கின்ற படியால் தொடர்ச்சியாக பரப்பப்படுவதோடு அவை தேர்தல் உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


உங்களின் வாக்கை தீர்மானிக்கும்

நீங்கள் எந்த கட்சிக்கு ஆதரவாக இருக்கிறீர்கள், நீங்கள் யாருக்கு இந்த தேர்தலில் வாக்களிக்க போகிறீர்கள் என்பது முதற்கொண்டு பல முடிவுகளை உங்களுடைய சமூகவலைத்தள செயல்பாடுகளை ஆராய்ந்து கண்டறிய முடியும். இதனை செய்வதற்கு ஏற்கனவே பல நிறுவனங்கள் வந்துவிட்டன. அமெரிக்க தேர்தலில் இந்த வகையான நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

 

 

உங்களுக்கு தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்த நல்ல விசயங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டால் அந்த கட்சியை பற்றிய உங்களின் பார்வை மாறும், உங்களுடைய வாக்கு அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

வரவிருக்கும் தேர்தலில் சமூகவலைத்தளங்கள் மிக முக்கிய பங்காற்றப்போகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பணமிருக்கும் ஒருவரால் சமூகவலைத்தளத்தில் சிறப்பாக பிரச்சாரத்தை செய்ய முடியும் என்பதனால் தான் பிரச்சனையே வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.



பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *