அஜித் சொன்னதை அறிவில் ஏற்றிக்கொள்ளுங்கள், அனைவருமே

 


 

நடிகர் அஜித் அமைதியாக இருந்தாலும் அவ்வப்போது தமிழக அரசியல் செய்திகளில் வந்து போவார். முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமருவார் என ஆருடம் கூட சொல்லப்பட்டது. யார் என்ன சொன்னாலும், எது நடந்தாலும்  தன் பணி உண்டு என இருந்த நடிகர் அஜித் தற்போது அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் சினிமா மட்டுமே எனது தொழில், அரசியல் சாயம் பூசப்படுவதை நான் விரும்பவில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார். இப்படி அதிரடியாக அறிக்கை விட காரணம் என்ன? அஜித்தை தமிழக அரசியல் தொடர்ந்து துரத்துவதன் நோக்கம் என்ன? இந்த பதிவில் பார்க்கலாம்.

 


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

தமிழிசை அவர்களின் புகழ்ச்சி

 

 

அண்மையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் முன்னிலையில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர். இதனை தொடர்ந்து பேசிய தமிழிசை அவர்கள் “திரைப்படத்துறையில் அஜித் தான் நேர்மையானவர், அவரை போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். பிரதமர் மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் பிறகு செய்திகளிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி பரவியது. அஜித்தை வளைக்கிறதா பாஜக என ஆருடங்கள் அள்ளிவீசப்பட்டன. விளைவாக தான் அஜித் பின்வரும் அறிக்கையை வெளியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.

 


அஜித்தை துரத்தும் தமிழக அரசியல்

 

மிக வலுவான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்களில் ஒருவர் அஜித் அவர்கள் . படங்களில் கூட அரசியல் கருத்துக்களை முன்வைத்து நடிக்காவிட்டாலும் அவரை தமிழக அரசியல் துரத்துவதற்கு காரணம் இதுதான் .

 


அஜித் அறிக்கை | தெளிவான உண்மை

 

 

நான்‌ தனிப்பட்ட முறையிலோ அல்லது நான்‌ சார்ந்த திரைப்படங்களில்‌ கூட அரசியல்‌ சாயம்‌ வந்து விடக்‌கூடாது என்பதில்‌ மிகவும்‌ தீர்மானமாக உள்ளவன்‌ என்பது அனைவரும்‌ அறித்ததே. என்னுடைய தொழில்‌ சினிமாவில்‌ நடிப்பது மட்டுமே என்பதை நான்‌ தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்குக் காரணம்‌.

சில வருடங்களுக்கு முன்னர்‌ என்‌ ரசிகர்‌ இயக்கங்களை நான்‌ கலைத்ததும்‌ இந்த பின்னணியில்‌ தான்‌, என்‌ மீதோ, என்‌ ரசிகர்கள்‌ மீதோ , என்‌ ரசிகர்‌ இயக்கங்களின்‌ மீதோ எந்த விதமான அரசியல்‌ சாயம்‌ வந்து விடக்கூடாது என்று நான்‌ சிந்தித்ததின்‌ சீரிய முடிவு அது.

என்னுடைய இந்த முடிவுக்குப் பிறகு கூட சில அரசியல்‌ திகழ்வுகளுடன்‌ என்‌ பெயரையோ, என்‌ ரசிகர்கள்‌ பெயரையோ சம்பந்தபடுத்தி ஒரு சில செய்திகள்‌ வந்து கொண்டு இருக்கின்றன. தேர்தல்‌ வரும்‌ இந்த நேரத்தில்‌ இத்தகைய செய்திகள்‌ எனக்கு அரசியல்‌ ஆசை வந்து விட்டதோ என்ற ஐயப்பாட்டை பொது மக்களிடையே விதைக்கும்‌.

இந்த தருணத்தில்‌ நான்‌ அனைவருக்கும்‌ தெரிவிக்க விழைவது என்னவென்றால்‌ எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்‌ ஈடுபாட்டில்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில்‌ நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்ச‌கட்ட அரசியல்‌ தொடர்பு. நான்‌ என்‌ ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்‌ என்றோ வாக்களியுங்கள்‌ என்றோ எப்பொழுதும்‌ நிர்பந்தித்தது இல்லை, நிர்பந்திக்கவும்‌ மாட்டேன்‌.

நான்‌ சினிமாவில்‌ தொழில்‌ முறையாக வந்தவன்‌. நான்‌ அரசியல் ‌செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை. என்‌ ரசிகர்களுக்கும்‌ அதையேதான்‌ நான்‌ வலியுறுத்திகிறேன்‌. அரசியல்‌ சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான்‌ தெரிவிப்பதில்லை. என்‌ ரசிகர்களும்‌ அவ்வாறே இருக்க வேண்டும்‌ என விரும்புகிறேன்‌. சமூக வலைதளங்களில்‌ தரமற்ற முறையில்‌ மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான்‌ என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்றுப் பார்க்கும்‌ இந்த உலகம்‌ இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.

அரசியலில்‌ எனக்கும்‌ தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை தான்‌ யார்‌ மீதும்‌ திணிப்பது இல்லை. மற்றவர்கள்‌ கருத்தை என்‌ மேல்‌ திணிக்க விட்டதும்‌ இல்லை. என்‌ ரசிகர்களிடம்‌ இதையேதான்‌ நான்‌ எதிர்பார்க்கிறேன்‌. உங்கள்‌ அரசியல்‌ கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும்‌. என்‌ பெயரோ, என்‌ புகைப்படமோ எத்த ஒரு அரசியல்‌ திகழ்விலும்‌ இடம்‌ பெறுவதை நான்‌ சற்றும்‌ விரும்புவதில்லை.

எனது ரசிகர்களிடம்‌ எனது வேண்டுகோன்‌ என்னவென்றால்‌ நான்‌ உங்களிடம்‌ எதிர்பார்ப்பது எல்லாம்‌, மாணவர்கள்‌ தங்களது கல்வியில்‌ கவனம்‌ செலுத்துவதும்‌, தொழில்‌ மற்றும்‌ பணியில்‌ உள்ளோர்‌ தங்களது கடமையைச் செவ்வனே செய்வதும்‌, சட்டம்‌ ஒழுங்கை மதித்து நடந்து‌ கொள்வதும்‌, ஆரோக்கியத்தின்‌ மீது கவனம்‌ வைப்பதும்‌,வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன்‌ இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதைசெலுத்துவதும்‌, ஆகியவை தான்‌. அதுவே நீங்கள்‌ எனக்கு செய்யும்‌ அன்பு. வாழு வாழ விடு.

 


அஜித் சொன்னதை அறிவில் ஏற்றிக்கொள்ளுங்கள், அனைவருமே

 

 

 

தொழில்முறை நடிகராகிய எனக்கு அரசியலில் துளி கூட விருப்பமில்லை என தெளிவு படுத்தி இருக்கிறார் அஜித் குமார். நாம் கண்ட பல நடிகர்கள் அரசியலை ஏதோ ஒரு காரணத்திற்க்காக பகடையாக பயன்படுத்திவருகிற சூழலில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லுவதே பெரிய விசயம்.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. நானும் திணிப்பதில்லை, திணிக்கவும் அனுமதிப்பதில்லை. அதைப்போலவே ரசிகர்களும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அறிந்துகொள்ள வேண்டும். நடிகர்களை உங்களது ஆசான்களாக கருதிட கூடாது, அவர்களுக்கு நடிக்க தெரிந்திருக்கலாம் ஆனால் அவர்கள் அனைவருமே நல்லவர்களோ அறிவிற் சிறந்தவர்களோ அல்லர். ஆகவே அரசியலில் உங்களது முடிவினை சுய விருப்பத்தின் அடிப்படையில் செய்திட வேண்டும்.

 

சில முக்கிய விசயங்களில் கூட மிகப்பெரிய ரசிகர்கள் பலத்தை கொண்டிருக்க கூடிய அஜித் பேச மறுக்கிறாரே என்கிற வருத்தம் எங்களுக்கும் உண்டு. ஆனால் அது சுய விருப்பம் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. வேண்டாமென்று ஒதுங்கி இருப்பவரை மீண்டும் மீண்டும் நடுத்தெருவுக்கு இழுப்பது தேவை இல்லாத ஒன்று.

 

நடிகர்களை நடிகர்களாக பார்க்கும் வரை பிரச்சனையில்லை,மாற்றம் தரும் மந்திரவாதிகளாக பார்க்கும் போதுதான் பிரச்சனை வருகிறது.

 

இதனை அரசியல்கட்சிகளும் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் உணரவேண்டும்.

 


 

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *