படங்கள் வருது, கட்சி வரலையே ரஜினி சார்?
திரு ரஜினிகாந் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்து இன்றுடன் 1 வருடம் முடிவடைகிறது. ஆனால் இன்றுவரை தனது கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை.
கட்டுரை : வினோத்குமார்
சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் என்ற பெயர் சொன்னதும் எத்தனை உற்சாகம். எம்ஜியாருக்கு பிறகு திரையுலகத்தை கட்டி ஆண்ட மன்னன் ரஜினி என்றே கூறலாம். ஆம். அவரின் ஸ்டைல் , நடிப்பு, மாஸ் மற்றும் திறமைக்கு யாவரும் அடிமைதான். “நான் ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி , பன்னிங்கதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் ” போன்ற வசனங்களை சினிமாவில் உச்சரித்து எதிரிகளை அடித்து துவைக்கும்போது அவரின் ரசிகர்களோ அரசியல் வருகையைதான் அவ்வாறு குறிப்பிடுகிறார் என்றெண்ணி அரங்கையே அதிர வைத்தனர். ஆனால், அரசியலில் அவரின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் அப்படியே தலைகீழ்.
அரசியலில் ரஜினி
1996 ஆம் ஆண்டுகளில் ரஜினியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. அவ்வாண்டு தேர்தல் சமயத்தில் விழாவொன்றில் திரு. ரஜினி அவர்கள் அதிமுக அரசையும் அன்றய முதல்வர் ஜே. ஜெயலலிதா பற்றியும் விமர்சித்து பேசினார். இவரது விமர்சனம் பொதுத்தேர்தலில் எதிரொலித்தது. ரஜினியின் பேச்சால்தான் ஜெயலலிதா தோற்றார் என்று நாடெங்கும் செய்தி வந்தது. அதிலிருந்தே அவரது ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார் என்று ஏங்கிக்கொண்டிருந்தனர்.
அரசியலுக்கு வருவது உறுதி
1996 -க்கு பிறகு அரசியல்பற்றி வாய்திறக்கவில்லை. ஆனால் அவரது ரசிகர்களோ எப்போது அரசியல் அறிவிப்பு வரும் என்று ஏங்கிக்கொண்டிருந்தனர். 20 வருடங்கள் கடந்தது. முன்னால் முதல்வர்கள் திரு. கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டார், செல்வி. ஜெயலலிதாவும் காலமானார். ஒருவருட அமைதிக்குப்பிறகு, ரஜினி அவர்கள் அவரது ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்பொழுது , ” நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என உரையாற்றினர். அவரின் ரசிகர்களுக்கோ அளவில்லா மகிழ்ச்சி. ஊடகங்களுக்கோ இணையில்லா விருந்து.
களத்தில் ரஜினி
ஊடகங்களின் பெரும் ஆதரவு , கட்டுக்கடங்கா ரசிகர்கள் வெள்ளம் , மத்திய மற்றும் மாநில அரசியலில் நல்ல செல்வாக்கு. இதையெல்லாம் மனதிற்கொண்டால் ரஜினிதான் அடுத்த முதல்வர். ஆனால் களத்தில்?
விழாவில் , ஆன்மீக அரசியல் என்ற ஒருவார்த்தையில் இவர் பாஜகவின் கைக்கூலி, பாஜக இவரை பின்னிருந்து இயக்குகிறது என எதிர்ப்புகள் கிளம்பின. வெற்றிடம் இருந்ததால்தான் அரசியலுக்கு வந்தேன் எனக்கூறி ஆளுங்கட்சியினரையும் எதிர்கட்சியினரையும் பகைத்துக்கொண்டார். அரசியலுக்கு வந்துவிட்டார் இனி படம் நடிக்கமாட்டார் என நினைத்திருக்க 2 படங்களில் ஒப்பந்தமாகி அதிர்ச்சியளித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் ” மக்கள் எல்லாத்துக்கும் போராட்டம் செய்தால் தமிழ்நாடு சுடுகாடாயிடும்” எனக்கூறி சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். ஏற்கெனவே “ரஜினியின் மூலம் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வியூகம் வகுக்கிறது” என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில் , ரஜினியோ மோடிக்கு ஆதரவாக “10 பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்தால் யார் பலசாலி” என்றுகூறி தன்னை மோடி ஆதரவாளர் என காட்டிக்கொண்டார். சில நேரங்களில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு “தான் இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. வந்ததுக்கு அப்புறம் சொல்கிறேன் ” என்கிறார்.
ரஜினி மக்கள் மன்றம்
களத்தில் ரஜினி அவர்கள் சரியாக செயல்படாவிட்டாலும் , தன்னுடய மக்கள் மன்றத்தின் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்கிறார். சமீபத்தில் மக்கள் மன்றத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல்,
அவ்வப்போது ரஜினி அவர்கள் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிப்பதாகவும் கூறப்படுகின்றது. சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் , ரஜினி அவர்கள் 50 இலட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். ஆனால் அரசியல் கட்சியின் பெயரை இன்னும் அறிவிக்காதது அவரது ரசிகர்களுக்கு மன உளைச்சலாகவே உள்ளது.
இந்த புதிய வருடத்திலாவது ரஜினி அவர்கள் தனது கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறா ர்கள். ரஜினி அரசியலுக்கு வருவதும் வராமல் போவதும் அவரது சுயவிருப்பம். ஆனால் வருவேன் வருவேன் என சொல்லிக்கொண்டு பிற வேலைகளில் ஈடுபடுவது என்பது ரஜினியை சார்ந்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அரசியலை கவனித்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
ரஜினி அவர்கள் நிலையான ஒரு முடிவினை அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் !
கட்டுரை எழுதியவர் : வினோத் குமார்
நீங்களும் இதுபோன்ற கட்டுரைகளை எழுதிடும் திறமை பெற்றவராக இருந்தால் எழுதி அனுப்பலாம்.
மின்னஞ்சல் : admin@pamarankaruthu.com / pamarankaruthu@gmail.com