May 18 War Crime | மே 18 ஈழத்தமிழர் நினைவேந்தல் | சில நினைவுகளும் கேள்விகளும்
மே 18 2009 பல்லாண்டுகளாய் நடந்த ஈழத்தமிழர் இனவிடுதலை போராட்டம் முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் முடிவுக்கு வந்த தினம். கையில் ஆயுதமின்றி சரணடைய வந்த எண்ணற்ற அப்பாவி பொதுமக்களை சிறிதுகூட மனித உணர்வின்றி சுட்டுத்தள்ளியது சிங்கள ராணுவம். அந்த அப்பாவி மக்களை நினைவு கூறும் வகையிலும் ஈழத்துப்போரில் தங்கள் இன்னுயிரை இழந்த எண்ணற்ற வீரர்களையும் நினைவிலே கொள்ளத்தான் ஆண்டு தோறும் ஈழத்தமிழர் நினைவு தினம் மே 18 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
நம்மால் இந்த நினைவேந்தலை விட வேறொன்றும் செய்யவே முடியாது என்பதைத்தான் ஒவ்வொரு ஆண்டு நினைவேந்தல் கூட்டமும் நமக்கு உணர்த்துகின்றன. நினைவேந்தல் கொண்டாடும் நல்ல உள்ளங்களை நான் மதிக்கிறேன் ஆனால் இந்த கேடுகெட்ட உலகிற்கு வெட்ட வெளிச்சத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டது தெரியும். அப்பாவி இளம் பெண்கள் தந்தையின் முன்னால் சகோதரரின் முன்னால் கற்பழிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டது தெரியும். ஆனால் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறது உலகம் ? பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களின் கண்ணீரில் கதை கேட்டுக்கொண்டிருக்கிறது. போர் குற்றங்கள் நடைபெற்று பத்தாண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் அவர்கள் கதைகளை தான் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
காஷ்மீரில் ஆசிபா கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு கடைக்கோடியில் இருக்கும் நம் இதயம் நொறுங்கி போனது ஆனால் சொந்த சகோதரி தன் கண் முன்னால் கற்பழிக்கப்படுவதையும் அடித்து கொல்லப்படுவதையும் கண்ட எத்தனையோ சகோதரர்கள் ஈழத்தில் உண்டு. கண்ணெதிரே கணவன் குண்டுகளால் தாக்கி பாதி உயிரோடு ஊசலாடிக்கொண்டிருந்தாலும் வெளியே வந்தால் நம் தலையிலும் பிள்ளைகளின் தலையிலும் குண்டு விழும் என குழந்தைகளை கட்டி அணைத்து கணவன் உயிர்போவதை கண்ட மனைவிமார்கள் ஈழத்தில் ஏராளம். இப்படி அரங்கேறிய கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்…
இதில் பல குற்றங்களுக்கு ஆதாரங்கள் அப்போதே வெளியிடப்பட்டன. ஆனால் அதனை நம்மவர்களும் உலக பிரச்சனை பேசும் ஐநா வும் வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருந்தனர். காரணம் அவர்கள் என்றைக்குமே அரசாங்கத்திற்கு ஆதரவாகத்தான் நடந்துகொள்வார்கள். வெறும் கண்துடைப்பிற்க்காக விசாரணை நாடகங்களை அரங்கேற்றுவார்கள். நமது மக்களும் அங்கே சென்று கண்ணீர்துளிகளை சிந்திவிட்டு வர மட்டுமே முடியும்.
நடந்தது நடந்துவிட்டது, இனி நாம் செய்ய வேண்டியது இதுதான். இனியொருமுறை எந்த வடிவத்திலும் தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் ஒன்றுபட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வதே மே 18 இல் இன்னுயிர் நீத்த அனைவருக்கும் நீங்கள் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
உரிமைக்கான போர் என்றும் உயிர்ப்போடு இருக்கும்!
நன்றி
பாமரன் கருத்து