நீங்க பன்ற ஒரு ஷேர் ,லைக் ஒருத்தரோட உயிரை பறிக்குமா ? பறிக்கும் – எப்போது நாம் திருந்தப்போகிறோம்?
சமூக வலைத்தளங்களை உபயோகிப்பவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது
சம்பவம் : 01
திருவண்ணாமலையில் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அத்திமூர் கிராமம், தண்ணீர்குளம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் ஒரு குடும்பம் வருகிறது.
பல்லாவரத்தை சேர்ந்த ருக்குமணி (65) மற்றும் வெங்கடேசன் (54). இவர்களது உறவினர்கள் மோகன்குமார் (43), சந்திரசேகரன் (55) ஆகிய இருவரும் மலேசியாவில் வசிக்கின்றனர். இவர்களது பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள சாத்தனூர் பகுதியாகும்.
கோவிலுக்கு வழி தெரியாமல் குழம்பி நிற்கும் இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த சிவா என்பவரிடம் வழி கேட்கின்றனர். அவரும் வழி சொல்கிறார். கார் சிறிது தூரம் செல்கிறது. அப்போது காரை நிறுத்தி தங்களிடம் இருந்த மலேசியா சாக்லேட்டுகளை சிவாவின் குழந்தைகளுக்கு அளிக்கிறார்கள். அதனை சிவா பார்த்துவிட காரில் வந்தவர்கள் குழந்தை கடத்தல் கும்பல் என கூச்சல் போடுகிறார். இதனால் பதற்றமான ருக்மணியும் மற்றவர்களும் வேகமாகச் சென்றுவிட்டனர். கார் செல்லும் வழியில் அத்திமூர் கூட்டுச்சாலை பகுதியில் இருப்பவர்களுக்கு சிவா, செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்
சிறிது நேரத்தில் அங்கு திரண்ட பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ருக்மணி வந்த காரை மடக்கி அடித்து நொறுக்கினர். மேலும், காரில் இருந்தவர்களை வெளியேற்றி சரமாரியாக தாக்கினர். அவர்கள் சொல்லும் எதையும் காதில் வாங்கும் மன நிலையில் இல்லாத அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த கொடூர தாக்குதலில் 65 வயது ருக்மணி இறந்து போகிறார்.
சம்பவம் 02 :
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியின் குறுக்கே பழவேற்காட்டையும், கலங்கரை விளக்கத்தையும் இணைக்கக் கூடிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் ஒருவர் தூக்கிடப்பட்ட நிலையில் கிடந்தார். பழவேற்காட்டில் குழந்தை கடத்தல்காரர் என்ற வதந்தி காரணமாக, பொதுமக்களில் சிலர், மனநோயாளியை அடித்துக் கொலை செய்து, பாலத்தில் தூக்கில் சடலமாக தொங்கவிட்டுள்ளது போலீஸாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது
குழந்தை கடத்தல் வதந்தி வீடியோ :
இந்த கொடூர கொலைகள், தாக்குதல்கள் ஏனோ திடீரென்று நடந்தது அல்ல. திருவண்ணாமலை பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என பொய்யான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் திருவண்ணாமலை பகுதியில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டு இருப்பதாகவும் பெற்றோர் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள் என பேசியிருந்தார். அதனை உண்மை என நம்பி பல ஆயிரம் நபர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இதுபோன்ற வதந்திகள் பொதுமக்களிடத்தில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாகத்தான் சாக்லேட் கொடுத்தவர்களையும் மனநிலை பாதிக்கப்பட்டவரையும் சந்தேகப்பட வைத்து கொலை செய்யும் அளவிற்கு சாதாரண பொதுமக்களை இட்டு சென்றுள்ளது.
நிதானமாக நடந்துகொள்ளுங்கள் நீங்கள் மனிதர்கள் :
சமூக வலைத்தளங்கள் தகுதி பாராமல் எவரின் ஆதரவையும் பெறாமல் உண்மைகளை, திறமைகளை வெளிக்கொண்டுவர உதவி வருகிறது. அதே நேரத்தில் பொறுப்பில்லாமல் வெறும் லைக் மோகத்தில் சமூக வலைத்தளங்களைபயன்படுத்தும் சிலரால் பல நேரங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் சமூகத்தில் தேவையில்லாத குழப்பமும் பதற்றமும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்டவர்களை நம்மால் அவ்வளவு எளிதாக கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இதுபோன்ற உண்மை இல்லாத தகவல்களை உறுதிப்படுத்தாமல் ஷேர் செய்வதை சாதாரண மக்கள் நிறுத்தினாலே இவர்கள் தானாக அடங்கி விடுவார்கள்.
பொதுமக்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் :
வருகிற செய்திகளுக்கு உடனடியாக ஷேர் லைக் செய்துவிடாமல் கொஞ்சம் நிதானமாக அந்த செய்தியை கவனியுங்கள். அந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து ஆராயுங்கள். உண்மை என்றால் பகிருங்கள். பொய்யென்றால் அனுப்பிய நபருக்கு சொல்லிடுங்கள்.
எந்த பிரச்சனைக்கும் வன்முறை ஒரு தீர்வாகாது. தற்போது பொதுமக்களிடத்தில் தவறான புரிதல் ஏற்பட்டு இருக்கிறது, அது என்னவென்றால் “குழந்தை கடத்தல், கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களை வீதியிலே வைத்து அடித்து கொள்ளவேண்டும்”. இது முற்றிலும் தவறானது, பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்த்தால் சரியானது போல தோன்றினாலும் சட்டத்தை பொது மக்கள் கையில் எடுக்க துவங்கினால் பல சமயங்களில் தேவையில்லாத குற்றம் கொலை நடைபெறவே அது வழி செய்யும்.
ஆகையால் சற்று பொறுமையாக சட்டத்தை மதிக்கும் மனிதனாக நடந்துகொள்வோம். மனிதம் காப்போம்!
நன்றி
பாமரன் கருத்து
Pingback:சமூகவலைத்தளத்தை பயன்படுத்தும் பெரியோரே இதைப் படிங்க – பாமரன் கருத்து