வர்த்தகமாகிப்போன கடவுள் வழிபாடு : பக்தர்களுக்கு சில கேள்விகள்
எங்கே வருகின்றது பிரச்சனை :
கடவுளை பற்றிய இவ்வளவு தெளிவு இருந்தும் மனிதன் அதற்கு எதிர்மாறாகவே நடந்துகொள்கிறான் . ஆம் மக்களே ….
கடவுள் எங்கிருந்தாலும் அருள்புரிவார் என நம்பிவிட்டு 20 ரூபாய் டோக்கனில் அருகிலே சென்று தரிசிக்க கூட்டம் கூடுகிறதே , கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என சொல்லிவிட்டு உன் கடவுள் என் கடவுள் என ஏற்றத்தாழ்வோடு அடித்துக்கொள்கிறோமே , நல்லது செய்தால் கைவிடமாட்டார் என நம்பிவிட்டு அநியாயங்களை செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி பாவத்தை போக்க வேண்டுகிறோமே , இருக்கும் இடதிலிருந்தே கும்பிட்டாலும் அருள்வார் என நம்பிவிட்டு சில கொள்ளையடிக்கும் கும்பல்கள் நடத்திடும் பூஜைகளுக்கு பணம் கொடுத்து போகிறோமே …ஏன் ?
-
கொஞ்சம் யோசியுங்கள் மக்களே அனைத்தும் தற்போது வணிகமயமாகிவிட்டது . சிலர் பிழைப்பதற்காக உங்களது நம்பிக்கைகளையும் தாண்டிய ஒரு எண்ணத்தை உங்களிடம் தலைமுறை தலைமுறையாக விதைத்துக்கொண்டு இருக்கிறார்கள் .
உதாரணத்திற்கு திருப்பதி உண்டியலில் காணிக்கை செலுத்தினால் கிடைக்கும் புண்ணியம் மற்ற இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் கிடைக்காதாம் … சிவராத்திரி இரவு ரோட்டோரமாக இருக்கும் சிவன் கோயிலில் தரிசித்தால் புண்ணியம் கிடைக்காதாம் காட்டை அழித்து ஈசா மையம் கட்டியுள்ள மடத்தில் உள்ள சிவன் சிலையை வழிபட்டால் கிடைக்குமாம் .
இதுமட்டுமல்ல நண்பர்களே இன்னும் பல எண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்பட்டிருக்கின்றன .
கடவுள் நம்பிக்கை கொள்ளுங்கள் தவறில்லை …மூடநம்பிக்கை கொள்ளாதீர்கள் அதுதான் தவறு .
ஈசா யோகா மையத்தில் நடந்த “ஈசனுடன் ஒரு இரவு ” நிகழ்ச்சியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் . அதற்காக அவர்கள் வாங்கிய கட்டண விவரங்கள் தெரியுமா உங்களுக்கு ….
யமுனா -Rs 20,000
நர்மதா – Rs5000
கோதாவரி -Rs1000
நீங்களே கூறுங்கள் இவ்வளவு செலவழித்து சென்ற கூட்டத்திற்கு கடவுள் அருள்புரிவாரா அல்லது சாலையின் ஓரமாக அமைந்துள்ள சிவன் கோவிலில் கும்பிட்டவருக்கு அருள் புரிவாரா ?
முடிவு உங்கள் மனதில் ….
இந்த பதிவு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதல்ல ….கடவுளை வழிபடும் முறை குறித்தும் , வணிகமயமாக்கப்படுவது குறித்தும் தான் …
உங்களுக்கு இதே கேள்விகள் எழுந்தால் பகிருங்கள் .
நன்றி
இதற்கெல்லாம் காரணம் முன்னோர்கள் தோற்றுவித்த வழிபாட்டு தலங்களும் , அவர்கள் எழுதிய இதிகாசங்களும் புராணங்களும்தான் …
உதாரணமாக , காசிக்கு சென்றால் பாவம் தீரும்… கங்கையில் குளித்தால் புண்ணியம் பெருகும்… காசு இருப்பவன் காசிக்கு போறான்… இல்லாதவனின் முட்டாள் தனத்தை, மூடநம்பிக்கை கொண்டு வணிகமாக்கிவிட்டனர்…
இராமாயணத்தில் கூட , இராவணனை கொன்றதால் இராமனுக்கு தோஷம் ஏற்பட்டது.. அதனால் , இராமர் சிவனை வழிபட்டு பாவவிமோசனம் பெற்றார் … யாகத்தில் பங்குபெற்று சக்திகளை பெற்றனர் எனக்கூறுகிறார்கள்… இங்கு , கடவுளுக்கே தோசம் என்கின்றனர்.. சனிதோஷம், செவ்வாய் தோசம் , இராகு கேது என எண்ணற்ற தோஷங்களை இவர்களே தோற்றுவித்து இவர்களே அதற்கு பரிகாரம் என்கின்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள்.. பரிகாரம் செய்துவிட்டால் எல்லாம் தீர்ந்துவிடுமா??
தோசம் கழிப்பதாக கூறி , பிள்ளைகளின் பெற்றோர்களிடம் பணம் பறிக்கிறார்கள்… தோசம் முடிந்துவிட்டது எனக்கூறி பொருத்தம் பார்க்கிறார்கள் … திருமணம் செய்கிறார்கள்… சில வருடங்களில் இருவரும் பிறிந்துவிடுகின்றனர் (அ ) யாரோ ஒருவர் இறந்துவிட்டால் “எல்லாம் விதி ” என்கின்றனர்… அப்படியென்றால் பொருத்தம் பார்ப்பது தவறா (அ ) பரிகாரம் செய்தது தவறா (அ ) தோசம் என்பது இல்லவே இல்லையா???
தேவாலயங்களில் , பாவமன்னிப்பு வழங்குவதற்கென்று பாதிரியார் இருக்கிறார்…
இஃது இப்படி இருக்க, குறிசொல்வதாகக்கூறி பலரிடம் பணம் பறிக்கின்றனர் … சிலர் பேய் ஓட்டுகிறேன் எனக்கூறி பணம் பறிக்கின்றனர்…
மன அமைதிக்காக கோவிலுக்கு செல்லும் வழக்கம் மாறி பணம் , புகழ் பெறுவதற்கும் பாவம்போக்குவதற்கும் கோவிலுக்கு செல்கின்றனர்…