7 மாற்றங்களை செய்திடுங்கள் | புத்தாண்டு வாழ்த்துக்கள் : 2020
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனிவரும் நாட்கள் உங்களது மகிழ்ச்சியை கூட்டுகிற நாட்களாக அமையவேண்டும் என நான் விரும்புகிறேன்.
ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டு தினத்தின்போது பல்வேறு சபதங்களை ஏற்று பின்னர் இரண்டு மூன்று நாட்களில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் பலரில் நானும் ஒருவன் தான். ஏன் நம்மால் அந்த மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை என அதற்கான காரணத்தை அறிய முற்பட்டால் பல்வேறு குழப்பங்கள் தான் மிஞ்சி நிற்கின்றன. ஆனாலும் புதிய ஆண்டில் புதிய விதிமுறைகளை நமக்கு விதித்துக்கொண்டால் தானே வாழ்க்கை செழிப்பானதாக அமையும். ஆகவே தான் இந்த கட்டுரையில் மிகவும் எளிமையாக நாம் ஒவ்வொருவரும் செய்துமுடிக்க முடிந்த சில விசயங்களை உங்களுக்காக பட்டியல் இட்டிருக்கிறேன்.
கிட்டத்தட்ட இந்த 7 விசயங்களையும் நான் பின்பற்றுகிறேன். நீங்களும் செய்யலாமே
1. உடற்பயிற்சி
குறிப்பாக இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கென தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஒதுக்கீடு செய்திட வேண்டும். நம்முடைய வாழ்வியல் முறை மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான் நாம் அன்றாடம் உண்கிறோம். பல மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு தான் பணியாற்றுகிறோம். இளமை பருவம் பல உபாதைகளை தாங்கிக்கொண்டு செல்லக்கூடியது ஆனால் இன்று நாம் உடற்பயிற்சி போன்றவற்றை செய்யாவிட்டால் எதிர்காலம் நமக்கு கசப்பாகிவிடும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
2. வாசிப்பு
உண்மையில் நாம் பள்ளியில் படித்ததை தான் புத்தகங்கள் என நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவை பெயரளவிலான புத்தகங்கள் மட்டுமே. உண்மையான புத்தகங்கள் என்பது யாரும் கட்டாயப்படுத்தாமல் உங்களுக்கு ஏற்படும் தேடலினாலும் விருப்பத்தினாலும் நீங்கள் படிக்க துவங்குகிற புத்தகம். குறிப்பிட்ட கால வரையறையை நீங்களே ஏற்படுத்திக்கொண்டு புத்தக வாசிப்பை துவங்குங்கள். அதுவே உங்களது சிந்தனையை உயர்த்தும். பிறருக்கும் படிக்க உற்சாகமூட்டுங்கள்.
3. தொழில்நுட்ப அறிவு
காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நாமும் மாறித்தான் ஆகவேண்டி இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, உங்களை சுற்றி நடக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை தொடர்ச்சியாக கவனித்துக்கொண்டே வாருங்கள். உங்களுடைய தொழிலில் அதனை எப்படி புகுத்தலாம் என்பது பற்றி சிந்தியுங்கள்.
4. சமூகவலைதளம்
இன்று சமூக வலைதளங்கள் மக்களின் விலைமதிப்பில்லாத நேரத்தை குடிக்கின்ற கொடும்பாவியாக வளர்ந்துவருகிறது. உங்களுக்கு பயனில்லாத இடங்களில் உங்களது நேரத்தை செலவழிப்பதனை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். எனக்கு தெரிந்தவரையில் இளைஞர்கள் தான் அதிக நேரங்களை சமூக வலைதளங்களில் வீணாக்குகிறார்கள். இந்தப்பருவம் நீங்கள் புதிய விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டிய பருவம், இந்தப்பருவத்தை நீங்கள் வீணாக்க கூடாது.
5. அரசியல்
என்னதான் அரசியலை விட்டு நீங்கள் ஒதுங்கி நின்றாலும் உங்களுடைய அன்றாட வாழ்வில் அரசியல் பங்கெடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆகவே அரசியலை புறம் தள்ளாதீர்கள். குறைந்தபட்சம் அரசியலை கவனியுங்கள், நாட்டில் என்ன நடக்கிறது என்பதனை கவனியுங்கள். உங்களது விலைமதிப்பில்லாத வாக்குரிமையை தவறானவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துங்கள்.
6. உறவுகள்
தொழில்நுட்ப கருவிகள் வந்துவிட்ட பிறகு மனிதர்களோடு நாம் செலவிடுகிற நேரம் குறைந்துவிட்டது. இதனை நிச்சயமாக நாம் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைக்கு தொழில்நுட்ப கருவிகள் அவசியமே அன்றி அவையே வாழ்க்கை அல்ல என்பதனை உணருங்கள்.
7. மதுப்பழக்கம்
மிகப்பெரிய தொழில் செய்பவர்கள் அரசுக்கு வரியாக செலுத்தும் தொகையை காட்டிலும் சாதாரண குடிமக்கள் மதுவிற்காக ஆண்டுதோறும் அரசுக்கு மிகப்பெரிய தொகையை கொடுக்கிறார்கள். இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், மாணவிகள் வரைக்கும் தற்போது மதுப்பழக்கம் சென்றிருக்கிறது. இது ஆபத்தான ஒன்று. மதுவிற்கு அடிமையாகாமல் உங்களது ஆரோக்கியத்தையும் உழைப்பையும் சேமிக்க துவங்குங்கள்.
நான் மேலே சொல்லியிருப்பவை மிகப்பெரிய மாற்றங்கள் அல்ல. பின்பற்றுவதற்கு மிகவும் எளிமையான விசயங்கள் தான் அவை. உங்களது வாழ்வில் இவற்றை நீங்கள் பின்பற்றினால் வாழ்வு வசந்தமாகும் என்பது மட்டும் உறுதி. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!