வாழ்க்கையை அதன் போக்கில் வாழ 10 ஆலோசனைகள் | Life Hacks in Tamil
வாழ்வென்பது இவ்வளவு தான் என்பதையும் நடந்து முடிந்தவற்றை நாம் கவலைப்பட்டாலும் மாற்றிட முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டோமேயானால் நிச்சயமாக நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை நம்மால் பெற முடியும்.
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கின்ற வித்தியாசம் ஏதென்று கேட்டால் ‘விலங்குகள் சிந்திப்பதில்லை மனிதன் சிந்திப்பான்’ என்பார்கள். உண்மையே, ஒருவேளை நாளைய பொழுதுக்காக மனிதன் சிந்திக்காமல் இருந்திருந்தால் மனித இனம் தோன்றிய இடத்திலே தான் இன்றும் இருந்திருக்கும். சிந்தித்து இத்தனை முன்னேற்றத்தை அடைந்த பின்பும் பெரும்பாலான மனிதர்கள் நிம்மதியைத் தேடி அலைகிறார்களே எதற்காக? ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது கிடையாது? இந்தக்கேள்வி இரண்டிற்குள்ளும் நாமும் இருக்கவே செய்வோம். இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் இருக்கிறது. அது ‘வாழ்க்கையை அதன் போக்கில் வாழத் தெரியாதவர்கள் தான் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறார்கள்’ என்பது தான்.
ஒருவர் தனக்கு நடந்தவற்றை எண்ணி எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டு நில்லாமல் அதை ஏற்றுக்கொண்டு பயணிக்கத் துவங்கினால் பின்வருவனவற்றை எளிமையாக செய்திட இயலும்.
>> நடந்தவற்றை புறந்தள்ளி புதியன கற்றுக்கொள்ளலாம்
>> நம்முடைய தவறுகளில் இருந்து மற்றும் பிறருடைய தவறுகளில் இருந்து திருத்திக்கொள்ளலாம்
>> நிம்மதியான மனதோடு எதிர்காலத்தை எதிர்கொள்ளலாம்
>> இறந்தகாலம் என்பது எவர் நினைத்தாலும் மாற்ற முடியாதது. அப்படி இருக்கும் போது அதனையே நினைத்துக்கொண்டு நிகழ்காலத்தை கழித்தால் அதுவும் வீணாகவே போய்விடும்.
சில விசயங்கள் சொல்வதற்கு மிக எளிமையாக இருக்கலாம். ஆனால் அதை நம் வாழ்வில் பின்பற்றும் போது தான் அது எவ்வளவு கடினமானது என்பது புரியும். உதாரணத்திற்கு, நாம் அதிகம் விரும்பியவர்கள் நம்மை விட்டு பிரியும் போது, ஒரு மிகப்பெரிய தவறை செய்துவிட்ட பிறகு – இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்ற பிறகு சர்வ சாதாரணமாக அனைத்தையும் எளிதில் மறந்துவிட்டு வாழ பழகிக்கொள்வது எளிதான காரியம் இல்லை தான். ஆனால் நடந்துவிட்டதையே எண்ணிக்கொண்டு வாழாமல் இருப்பதும் சரியான விசயம் அல்லவே. ஆகவே தான் நம் ஒவ்வொருவருக்கும் உதவிகரமாக இருக்கப்போகும் 10 ஆலோசனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
1. ஏற்றுக்கொள்ளுதல் : நான் உட்பட பலரும் நம்மைவிட உயர்ந்தவர்களாக நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டு நம்மால் அப்படி இருக்க முடியவில்லையே என வருத்திக்கொண்டு இருக்கிறோம். உதாரணத்திற்கு, ஒருவர் கார் பங்களா என இருக்கிறார் ஆனால் நாம் இன்னமும் ஒரு சிறிய வீட்டில் தானே இருக்கிறோம் என பலர் வருந்துகிறார்கள். இந்த சூழ்நிலையில் நாம் எப்படி சிந்தித்தால் நல்லது : எத்தனையோ பேர் மழையிலும் வெயிலிலும் வீடு இல்லாமல் வாழ்க்கையை நடத்துகிறார்கள். நமக்கு இப்படியொரு நிம்மதியான வாழ்க்கை கிடைத்ததற்கு நான் மகிழ்கிறேன். இத்தகு வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு நன்றி. என இருக்க வேண்டும். இப்படி நினைத்தால் எவ்வளவு மன நிம்மதி நமக்கு கிடைக்கும் என சிந்தித்துப்பாருங்கள். [அதற்காக தற்போதைய நிலையிலேயே இருந்துவிட வேண்டும் என சொல்லவில்லை, நிலையை உயர்த்திட நிம்மதியோடு போராடுங்கள்]
2. பயத்தை புறந்தள்ளுதல் : இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருக்கக்கூடிய மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று ‘எதிர்காலத்தை பற்றிய பயம்’. ஒன்றுமே இல்லாதவர்கள் கூட போராடி வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கையோடு போராடுகிறார்கள். ஆனால் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி அடைந்த பிள்ளைகள் சில தோல்விகளில் துவண்டு வாழ்க்கையே முடிந்துபோனதாகக் கருதி வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். ஆகவே எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடும் மனநிலையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
3. கற்றுக்கொள்ளுதல் : கடந்த கால வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளுதல் என்பது ‘மறந்து விடுதல்’ என்பதல்ல. மாறாக, பயமின்றி அதனை நினைவில் வைத்துக்கொள்ளுதல் என்பது தான். தோல்வியை மறந்தவன் எளிதில் வெற்றிபெற முடியாது. தோல்விக்காக வருந்தாமல் தோல்வியில் இருந்து கற்றவன் மட்டுமே வெற்றி பெறுகிறான். ஆகவே கடந்த கால வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
4. மன்னித்துக்கொள்ளுங்கள் : நாம் செய்த தவறுகள் பிறருக்கு தெரியாவிட்டாலும் கூட நமக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். தாங்கள் செய்த தவறுகளுக்காக தங்களுக்குள்ளாகவே வருந்துகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். இது நல்ல பழக்கம் தான். அதற்காக ஏனைய வாழ்நாள் முழுமைக்கும் வருந்திக்கொண்டே இருக்க முடியுமா என்ன? முடியாதல்லவா, ஆகவே உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்துவிடாதீர்கள். இதனால் உங்களது மனக்கவலைகள் குறையும்.
5. முடிந்ததை செய்திடுங்கள் : பெரிய அளவில் எல்லைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது சாதிப்பதற்கு நல்ல யோசனை தான். ஆனால் அதுவே உங்களுக்கு பிரச்சனை ஆகிவிடுதல் கூடாது. ஒருவேலையை எடுத்துக்கொண்டால் அதை உங்களால் முடிக்க முடியுமா என்பதை யோசியுங்கள். உங்களால் முடியாது என்றால் அதற்கேற்றவாறு திட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். முடியாது எனத்தெரிந்தும் அதை துவங்கிவிட்டு பின்னர் முடிக்க முடியவில்லையே என வருந்தாதீர்கள்.
6. முடிவு என்பது முடிவல்ல : நாம் ஒரு ஊருக்கு செல்கிறோம் என்றால் அந்த ஊரில் சென்று இறங்கிய பிறகு அந்தப்பயணம் முடிவடைகிறது. ஆனால் அந்த ஊரில் நாம் ஒரு புதுப்பயணத்தை துவங்க இருக்கிறோம். எப்போது ஒரு விசயம் முடிவடைகிறதோ அப்போதே இன்னொரு விசயம் துவங்கிவிடுகிறது. ஆகவே முடிவுக்காக பெரிதும் வருத்தப்படாதீர்கள். அது வேறொரு விசயத்திற்க்கான துவக்கம் என ஏற்றுக்கொள்ளுங்கள்.
7. மாற்ற முடியாதெனில் ஏற்றுக்கொள்ளுங்கள் : ஒரு விசயம் நடைபெறுகிறது எனில் அதனை உங்களால் மாற்ற முடியும் என்றால் அதற்காக நீங்கள் முயற்சி செய்திடலாம். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு நிகழ்வு நடந்ததற்காக நீங்கள் வருந்தி வாழ்க்கையை முடக்குவது என்பது முற்றிலும் தவறான செயல்.
8. கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் : வெற்றி என்பதை அவ்வளவு எளிமையாக யாரும் பெற்றுவிட முடியாது. இது அனைவருக்கும் தெரிந்த இயல்பான விசயம். ஆகவே உங்களுக்கு கஷ்டமான சூழல் வருகிறதென்றால் உங்களுக்கு காலம் கற்றுக்கொடுக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது என தேற்றிக்கொள்ளுங்கள். அப்படி நினைத்துவிட்டால் வெகு இயல்பாக உங்களால் முன்னேறிச்செல்ல முடியும்.
9. போராடுங்கள் : போராட்டம் நிறைந்ததுதான் வாழ்க்கை. பணம் இருந்தால் நிம்மதி இருந்துவிடும் என்பதல்ல. பணம் இல்லாதவன் பணம் சேர்த்திட போராடுகிறான். பணம் இருக்கிறவன் சேர்த்த பணத்தை பாதுகாக்க போராடுகிறான். ஆகவே போராட்டம் என்பது அனைவருக்குமானது தான். இங்கே நிம்மதியாக வாழ வேண்டுமெனில் உங்களை நீங்களே சமாதப்படுத்திக்கொண்டால் மட்டுமே சாத்தியம்.
10. பாதையை மாற்றிக்கொள்ள தயங்காதீர்கள் : விடாப்பிடியாய் வாழ்வதென்பது சரியானது தான். அதேசமயம் நீங்கள் செல்கிற பாதை சரியானது அல்ல அல்லது நீங்கள் நினைக்கும் உயரத்தை அடைந்திட அது உகந்த பாதை அல்ல என்பதனை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டால் அக்கணமே பாதையை மாற்றிக்கொள்ள தயங்காதீர்கள்.
நாம் எதையுமே கொண்டு வராதவர்கள். அதேபோல நாம் எதையும் கொண்டு செல்லவும் முடியாதவர்கள். இதற்கிடையில் இருக்கும் காலத்தில் கிடைப்பனவற்றை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வதே மிகப்பெரிய சாதனை தான். அதையும் மகிழ்ச்சியோடு வாழ்வதென்பது உலக சாதனை என்றே வைத்துக்கொள்ள முடியும். ஆகவே உலக சாதனை படைத்திடுங்கள்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
அருமையான சுய முன்னேற்றக் கட்டுரைகள் இங்கே
முடிந்துபோன வாழ்க்கையை துவங்குவது எப்படி?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!