‘வேண்டாம்’ என நிராகரிப்பதும் வீரமே
இரண்டோடு மூன்றாக அடையலாமற்று தனித்துவமாக தெரிந்துவிடாமல் வாழ்ந்து மறைந்துபோகவே இங்கே கற்பிக்கப்படுகிறது. சிலர் சுய அறிவினால் மாறலாம் என நினைக்கும் தருணத்தில் கடமைகள் வந்து அறிவை மழுங்கடித்துவிடுகிறது.
மனிதன் போதும் என சொல்லும் ஒரே விசயம் ‘சாப்பாடு’ மட்டும் தான். நல்லவேளையாக இதற்கு மேல் சாப்பிட முடியாது என்று நிராகரிக்கக்கூடிய ஒரு உணர்வு மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சாப்பாட்டை தவிர்த்து மனிதர்கள் வேறு எதற்காவது போதும் என நினைக்கிறார்களா என சிந்தித்துப்பார்த்தால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. யோசித்துப்பாருங்கள், எதுவுமே தேவையில்லை என துறவறம் பூண்ட சாமியார்கள் இங்கே சொத்துக்களை வாங்கிக்குவிக்கிறார்கள், தொழில் செய்கிறார்கள், தங்களைக்காணவும் தங்களது பேச்சுக்களை கேட்கவும் விரும்புகிறவர்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள்.
இறையின் முன்னோடியாக, பற்றுதல் வாழ்வன்று என மனிதர்களுக்கு பாடம் சொல்ல வேண்டியவர்களே இப்படியென்றால் வருவதையெல்லாம் வளைத்துப்போடவே தாங்கள் பிறந்திருக்கிறோம் என எண்ணிக்கொள்ளும் மற்ற மனிதர்களை என்ன சொல்வது. அனைத்தையும் ஆட்கொள்ளவே நினைக்கிறார்கள். ஒரு வேலை கிடைத்துவிட்டால் தனக்கு வழங்கப்பட்ட வேலையில் எப்படி தவறு செய்து பணம் ஈட்ட முடியும் என்பதை யோசித்துவிட்டுத்தான் வேலைக்கே சேருகிறார்கள்.
லஞ்சம் என்பது அழிவின் ஊற்றுக்கண். இன்று நாம் வாங்கினால் நாளை நம் இடத்தில் பணிக்கு சேரும் இன்னொரு நபரிடம் தன் மகனோ மகளோ பேரனோ பெயர்த்தியோ இன்று வாங்குவதைக்காட்டிலும் பல மடங்கு அதிகமாக லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எவரும் நினைப்பது இல்லை. இன்னொரு சுவாரஸ்யமான விசயம் இருக்கிறது. ஒரு அரசு ஊழியர் இன்னொரு அலுவலகத்திற்கு செல்கிறார் என வைத்துக்கொள்வோம். அங்கே குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு தானாகவே முன்வந்து லஞ்சப்பணத்தை வழங்குகிறார். நாம் வாங்குவது போன்று தானே அவர்களும் வாங்குவார்கள் என்ற அசிங்கமான நேர்மை பல இடங்களில் இருக்கிறது.
அழிவின் ஊற்றுக்கண் ஊழல் மற்றும் லஞ்சம். படிக்காதவன், விவரம் இல்லாதவன் ஒரு தவறை செய்தால் கூட திருத்திவிட முடியும். ஆனால் தான் செய்வது தவறு என்பதை தெரிந்தே செய்கிற படித்தவனை படைத்தவனால் கூட திருத்த முடியாது. படித்தவர்கள் தான் இங்கே கொழுத்தவர்களாக இருக்கிறார்கள்.
சரி, ஏன் இவர்கள் இந்தத்தவரை செய்கிறார்கள் என்ற கேள்வி எழும் போது அதற்கு ஒன்றே ஒன்று தான் பதிலாக இருக்கிறது. எனக்கு இது வேண்டாம், போதும் என நிராகரிக்கும் மனநிலை இங்கே பலருக்கு இல்லை என்பது தான் காரணமாக இருக்கிறது. சம்பளத்தை தாண்டியும் வாழ்க்கையை சுகபோகமாக நடத்திச்செல்ல இவர்களின் மனம் ‘வேண்டாம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை போடுகிறது. அப்படியே ஒருவர் திருந்தினாலும் கூட, குடும்பம் அவரை அதற்குள் தள்ளிவிடுகிறது.
அத்தனையையும் தாண்டி ஒருவர் ‘வேண்டாம்’ என சொன்னால் இந்த சமூகம் அவருக்கு அளிக்கின்ற பெயர் ‘கோழை’ ‘விவரம் அறியாதவன்’ ‘பிழைக்கத்தெரியாதவன்’ என ஏளனம் பேசுகிறது. ஊர் இப்படி சொன்னாலும் பரவாயில்லை, அவர் குடும்பத்தில் இருக்கும் நபர்களே இப்படி எண்ணுவது கொடுமையிலும் கொடுமை. ஆனாலும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு சிலர் நேர்மையெனும் பையை தனது தோளில் சுமந்துகொண்டு தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களாலேயே இங்கே ஏழைகள் வாழ முடிகிறது.
‘வேண்டாம்’ என நிராகரிப்பதும் வீரமே. இதனை உறுதியாக நம்புவோம்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!