ஏன் அனைவரும் எழுத வேண்டும்? எழுத்தின் வல்லமை தெரியுமா உங்களுக்கு?
எழுதுவதற்கு நான் என்ன அவரா இவரா என பேச வேண்டாம். பெரிய எழுத்தாளர் அளவுக்கு நீங்கள் எழுதவும் வேண்டாம். நீங்கள் நல்லனவற்றை சாதாரணமாக எழுதினால் இக்கட்டான சூழலில் அது உங்களை கட்டுப்படுத்தும், உதவி புரியும்.
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் நல்லவராக வாழத்தான் ஆசை. ஆனால் சிலரால் அது முடிகிறது பலரால் அது முடிவதில்லை. அதற்கு அவர்களுடைய சூழ்நிலை, அவர்களை சார்ந்திருக்கும் மனிதர்கள், அவர்களுக்கு நிகழும் விசயங்கள் போன்றவை பெரும் காரணங்களாக விளங்குகின்றன. இங்கு யாரும் 100 சதவிகிதம் நல்லவர்கள் இல்லை. சரியாக சொல்லவேண்டும் என்றால் நல்லவர்கள் ஆக முயற்சிக்கும் நபர்கள் அதற்கு முயற்சிக்காத நபர்கள் என்று பிரிப்பதுதான் சரியானதாக இருக்கும்.
ஆனால் ஒருவருக்கு எத்தகைய சூழல் நிலவினாலும் கூட “கட்டுப்பாடு” என்ற ஒன்று அசாதாரணமாக இருக்கிறபட்சத்தில் அவர்கள் எந்நாளும் தவறான நபராக மாறவே முடியாது. அத்தகைய கட்டுப்பாட்டை ஒருவருக்கு தரக்கூடிய வல்லமை “எழுத்து” என்கிற ஒரு விசயத்திற்கு உண்டு. பலரால் கவனிக்கப்படுகிற ஒருவரின் எழுத்து என்பது படிக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்துமோ அது தெரியாது. ஆனால் எழுதுகிறவரின் மனதில் அந்த எழுத்துக்கள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
உதாரணத்திற்கு, நான் இப்படி பல்வேறு விசயங்கள் பற்றி எழுதி இருக்கிறேன். நான் எழுதிய விசயங்களை நான் சந்திக்கும் போது நான் எழுதிய விசயங்கள் என்னை கட்டுப்படுத்தி இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொருவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என நான் எழுதி இருக்கிறேன். நான் எழுதியதை படித்தவர்கள் மதித்தார்களா என எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை சிக்னலில் நிற்கும் போதும் வாய்ப்புகள் கிடைத்தாலும் என்னால் விதிகளை மீறி செல்ல முடிவதில்லை. “நீயே எழுதிவிட்டு நீயே மீறலாமா?” என நான் எழுதிய வார்த்தைகள் என்னை கட்டுப்படுத்தும்.
உங்களுக்கும் கூட இந்த உணர்வு ஏற்பட்டிருக்கலாம். எழுத்து அத்தகைய வல்லமை வாய்ந்தது என்பதை உங்களுக்கு புரிய வைக்கவே இந்தப்பதிவை நான் எழுதுகிறேன். இந்தக்கட்டுரையை நீங்கள் படித்து முடித்த பின்பு உங்களுடைய நல்ல எண்ணங்களை நீங்கள் வெளிப்படையாக எழுதுங்கள். புத்தகம் தான் எழுதவேண்டும் என்பதில்லை. நீங்கள் சமூக வலைதளத்தில் எழுதலாம், உங்களைத்தவிர யாருமே படிக்காத ஒரு டைரியில் கூட எழுதலாம். ஒரு இக்கட்டான சூழலில் உங்களுடைய வார்த்தைகள் உங்களை கட்டுப்படுத்தும். அது உங்களுக்கு உதவியாக இருக்கும். இதன் உண்மைத்தன்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனில் நீங்கள் மாமேதைகளில் ஒருவரான டால்ஸ்டாய் அவர்களின் வாழ்க்கையில் அவரின் எழுத்து ஏற்படுத்திய மாற்றத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
எழுத்து டால்ஸ்டாய் வாழ்வில் நிகழ்த்திய மாற்றம்
மனித வாழ்வுக்கு மது, கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் மிகுந்த கேடுகளை விளைவிக்கக்கூடியவை என வலிமையாக எடுத்துக்கூறியவர்களில் ஒருவர் மேதை டால்ஸ்டாய். ஆனால் அவரும் ஒருகாலத்தில் இத்தகைய போதை வஸ்துக்களில் திளைத்தவர் தான். ஆனால் என்று இவற்றின் தீமை உணர்ந்து என்று அவர் “மனிதர்களுக்கு இத்தகைய போதை பொருள்கள் பெரும் கேடு விளைவிக்கக்கூடியவை” என எழுத ஆரம்பித்தாரோ அன்றே தனது தீய பழக்கவழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டார். ஒருவேளை ஒருபக்கம் நல்லவிதமாக எழுதிவிட்டு மறுபக்கம் போதைப்பொருள்களை அவர் பயன்படுத்தி இருக்கலாம். அப்படி நடந்துகொண்டிருந்தால் அவரால் எப்படி பாரதத்தின் தந்தை என போற்றப்படுகின்ற காந்தி எப்படி டால்ஸ்டாயை “தனது குருநாதர்” என கூறியிருப்பார்.
ஆமாம், மகாத்மா காந்தி அவர்கள் தனக்கு குரு என்ற ஸ்தானத்தில் இருவரை வைத்திருந்தார். அவர்களில் ஒருவர் கோபால கிருஷ்ண கோகலே. மற்றொருவர் லியோ டால்ஸ்டாய். மனித இனத்திற்கு எது நல்லது என டால்ஸ்டாய் எழுதினாரோ வாழ்வின் இறுதி எல்லை வரை அதனை பின்பற்றி நடந்தவர் டால்ஸ்டாய்.
டால்ஸ்டாய்க்கு மது போன்ற பழக்கவழக்கங்கள் மீண்டும் தொற்றிக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் அதை ஒருபோதும் செய்யவே இல்லை. அதற்கு மிக முக்கியக்காரணம் அவருடைய எழுத்து. ஆம் நண்பர்களே அதுதான் அவரை கட்டுப்படுத்தி இருக்கவேண்டும். அவருடைய மனதிற்கு அத்தகைய வலிமையை அதுதான் கொடுத்திருக்க வேண்டும்.
அதற்காகத்தான் சொல்கிறேன், நல்லனவற்றை எழுதுங்கள். உங்களுடைய எழுத்து உங்களை நிச்சயமாக நல்வழிப்படுத்தும். நீங்கள் எதில் எழுதப்போகிறீர்கள் என்பதோ உங்களுடைய எழுத்தை யார் படிக்கப்போகிறார்கள் என்பதோ முக்கியமில்லை. அது உங்களை நல்லவராக வளர்த்தெடுக்கப்போகிறது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளை படிக்க விரும்பினால் இந்த வாட்ஸ்ஆப் பட்டனை கிளிக் செய்து இணைந்திடுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!