தனியாக வாழ விரும்பும் பெண்கள், ஏன்? | Tamil | Why women prefer being single?
வளரும் இளம் பெண்களிடம் அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி “அதிகமான பெண்கள் ஆண்களின் துணையின்றி வாழவே விரும்புவதாக தெரியவந்துள்ளது”. கல்வியறிவு அதிகமுள்ள பெண்களிடம் இந்த மாதிரியான விருப்பம் அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் சுயமாக வாழுவதற்கு வேறு வேறு காரணங்களை கொண்டிருக்கின்றனர். சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பான குடும்ப வாழ்க்கையை பெண்கள் எதற்கு வெறுக்கிறார்கள் என்பது குறித்துதான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஆண்கள் மீதான வெறுப்பு அல்லது நம்பிக்கையின்மை
ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு குடும்ப அமைப்பில் இருந்துதான் வந்திருக்க முடியும். வளரும் பருவத்தில் அம்மா அப்பா உறவுகளில் ஏற்படும் சண்டை சச்சரவுகளை தொடர்ந்து பார்ப்பது, பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்து வெறுப்படைதல், பெண்ணியத்தின் மீதான ஈடுபாடு, ஆண்களால் பெண்களின் வளர்ச்சி தடைபடும் என்கிற நம்பிக்கை போன்ற பல காரணங்களால் ஆண்களின் மீதான வெறுப்பு அதிகரித்து தனியாக வாழ்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு பெண்கள் வந்துவிடுகின்றனர்.
சுதந்திரமான வாழ்க்கை
வாழ்க்கை ஒருமுறை தான்
அதிக படிப்பறிவு, வாழ்க்கை குறித்த பெண்களின் சிந்தனையை அதிகரித்துள்ளது. இப்போது பெண்களில் பலர் சுதந்திரமான வாழ்க்கையை அதிகம் விரும்புகின்றனர். அதற்காக எதையும் தியாகம் செய்யத் துணியும் பெண்களும் இங்கு இருக்கவே செய்கின்றனர். திருமணத்திற்கு பிறகு கணவர் சுதந்திரத்தை பறித்துவிட்டால் அப்போது எதற்கு பிரச்னை என எண்ணிடும் பெண்களில் பலர் திருமணமே வேண்டாம் என முடிவெடுக்கின்றனர்.
சாதிப்பதற்கு ஆண்கள் தடையென நினைக்கும் பெண்கள்
ஒரு தலைமுறைக்கு முன்பாக திருமண முடிவுகள் என்பதனை பெண் பிள்ளைகள் எடுப்பது கிடையாது, அவர்களுக்கு அந்த உரிமை இல்லை. பல பெண்களுக்கு திருமணம் குறித்த புரிதல் ஏற்படுவதற்கு முன்னதாகவே திருமணம் நடத்திவைக்கப்படும். அப்போது குடும்பத்துக்காக பல பெண்கள் தங்களின் திறமைகளை மறைத்துக்கொண்டு (விருப்பமில்லாமல்) குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டனர்.
நன்றாக படித்த பல பெண்கள் இன்றும் சமையல், குழந்தை வளர்ப்பில் மட்டுமே ஈடுபடுகின்றனர்
தற்போது பெண்களில் பலர் திருமணம், குடும்ப வாழ்க்கை ஆகியவை சாதனைக்கு தடையாக இருக்கிறதென்று கருதுகின்றனர். ஆகையால் சாதிக்க துடிக்கும் பெண்களில் பலர் திருமண வாழ்க்கையை விரும்பாமல் தனிமையில் வாழ்ந்தால் சாதிக்க முடியும் என நம்புகின்றனர்.
சரியான துணைக்காக காத்திருக்கும் பெண்கள்
மேற்குறிய காரணங்களுக்காக பெண்கள் ஆண் துணையை வெறுத்தாலும் சரியான ஆணை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களின் முடிவினை மாற்றிக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதற்காக பல பெண்கள் தங்களின் திருமணத்தை தள்ளிபோடுவதாகவும் சுதந்திரத்தை வழங்கி தன்னுடைய சாதனை பயணத்திற்கு துணையாக விளங்கிடக்கூடிய ஆணின் சந்திப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அப்படி கிடைக்காமல் போகும் பட்சத்தில் தனியாகவே வாழுவதே நல்லது எனவும் கூறுகின்றனர்.
பெண்கள் இப்படி தனிமையை நோக்கி செல்வது சரியா?
ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு உரிமை இருக்கிறது. அதற்காக ஆணும் பெண்ணும் தனி தனியாக வாழ்வது தான் சுதந்திரம் என முடிவெடுத்துவிட்டால் அடுத்த தலைமுறையை உருவாக்குவது எப்படி? சிலர் கேட்கலாம் பிள்ளை பெற்றுக்கொள்வது தான் வாழ்க்கையா என்று? உண்மையாலுமே பிள்ளைகளை பெறுவதும் வளர்ப்பதும் தான் வாழ்க்கை, அதோடு சேர்ந்து எவ்வாறு நாம் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அவரவர் திறமைகளை வெளிப்படுத்த உதவி சுதந்திரமாக வாழுகிறோம் என்பது தான் முழுமையான வாழ்க்கை.
பெண்களை இந்நிலைக்கு மாற்றியது ஆணாதிக்கமே
பெண்களின் தனிமை வாழ்க்கைக்கு காரணம் ஆணாதிக்கத்தின் மீதான வெறுப்பே பிரதான காரணமாக விளங்குகிறது. இதற்க்கு ஆண்கள் இனம் மொத்தமும் வெட்கப்பட வேண்டும். பெண்களுக்கு சுதந்திரமும் உரிமையும் இருக்கிறதென்பதை ஆண்கள் உணர்ந்து அதனை அவர்களுக்கு கொடுக்கும் பட்சத்தில் நிச்சயமாக பெண்களின் நம்பிக்கையை பெற முடியும்.
பாமரன் கருத்து
Pingback:கற்பழிப்புக்கு மரண தண்டணை தீர்வா? | Are death penalty real solution for women Crimes (rape)? – பாமரன் கருத்து