அனில் அம்பானியை விடவும் முகேஷ் அம்பானி வெற்றியாளராக இருப்பது ஏன்? தெரியுமா?

முகேஷ் அம்பானி தனக்கிருந்த சிறப்பு இயல்புகளாலும் தொழில்துறையை அவர் சரியான முறையில் புரிந்து வைத்திருந்தபடியாலும் தான் இன்று இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் உலகில் முன்னனி பணக்காரர்களில் ஒருவராகவும் வளர்ந்து நிற்கிறார். ஆனால் அனில் அம்பானி இவை இல்லாத காரணத்தால் தனது சொத்தை இழந்து நிற்கிறார்.

திருபாய் அம்பானி [Dhirubhai] யின் இரண்டு திறமைசாலி பிள்ளைகள் தான் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும். 2002 ஆம் ஆண்டு திருபாய் இறந்த பிறகு மெல்ல மெல்ல சகோதரர்களுக்குள் மோதல் ஆரம்பித்தது. இருவருக்கும் இடையே இருக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சொத்துக்களும் நிறுவனங்களும் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போதைய காலகட்டத்தில், அம்பானி குடும்பத்தின் முகமாக இருந்தவர் அனில் அம்பானி. அவர் தான் முதலீட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். முகேஷ் அம்பானியோ அந்த காலகட்டத்தில் நிறுவனத்தை எப்படி முன்னேற்றுவது என்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சொத்துக்கள் பிரிக்கப்பட்டபோது முகேஷ் அம்பானிக்கு எண்ணெய், எரிவாயு, பெட்ரோல் கெமிக்கல்ஸ், சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி பாகங்கள் தயாரிப்பு ஆகியவை ஒதுக்கப்பட்டன. அனில் அம்பானிக்கு மின்சாரம், தொலைத் தொடர்பு மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அப்போதைய காலகட்டத்தில் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் அனில் அம்பானிக்கு சென்றபடியால் அவர் விரைவில் பெரிய பணக்காரர் ஆவார் என ஆருடம் சொல்லப்பட்டது.

சொத்துக்கள் சரி சமமாக பிரிக்கப்பட்டபின் எழுந்த மிகப்பெரிய கேள்வி “எதிர்காலத்தில் யார் மாபெரும் பணக்காரராக வெற்றி பெறுவார்?” என்பதுதான். அதற்கான பதிலை காலம் இப்போது சொல்லியிருக்கிறது. ஆமாம், முகேஷ் அம்பானி இந்தப்போட்டியில் வெற்றி பெற்று மாபெரும் பணக்காரர் ஆகியுள்ளார். அனில் அம்பானியோ தன்னிடம் சொத்துக்களே இல்லையென கையை விரித்துக்காட்டும் நிலைக்கு சென்றுள்ளார். இப்போது அனில் அம்பானியை விடவும் முகேஷ் அம்பானி வெற்றியாளராக இருப்பது ஏன் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். அதையே இங்கே பார்க்க இருக்கிறோம்.

ஒரு நிறுவனத்தை கையாள்வதில் அனில் அம்பானிக்கும் முகேஷ் அம்பானிக்கும் வித்தியாசங்கள் உண்டு. அனில் அம்பானி எப்போதும் நிறுவனத்திற்குள் என்ன நடக்கிறது, அங்கே எந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதில் எல்லாம் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார். அது தனக்கான வேலை இல்லை என அவர் நினைத்துக்கொள்வார். அதேபோல முதலீடு போட்டவுடன் விரைவாக லாபம் வர வேண்டும் எனவும் நினைப்பார். ஆகவே பலர் அந்த காலகட்டத்தில் அனில் அம்பானியை பெரிய வித்தகர் என கொண்டாடினார்கள். ஆனால் முகேஷ் அம்பானி அப்படி அல்ல, நிறுவனத்தின் அடிமட்டத்திற்கு சென்று அங்கே என்ன நடக்கிறது என்பதை அடி முதல் மேல்வரை அறிந்துவைத்திருப்பார். அதில் என்ன மேம்பாடு செய்திட்டால் உற்பத்தியை பெருக்கலாம் என யோசிப்பார். முகேஷ் அம்பானி தொழிலை பெரிதாக்கவே முதலில் முன்னுரிமை கொடுப்பார், லாபம் சில ஆண்டுகள் கழித்து வந்தாலும் பரவாயில்லை என பொறுமை காப்பார். அதுதான் அவருக்கு பலன் அளித்தது. 

அனில் அம்பானிக்கும் முகேஷ் அம்பானிக்கும் இருக்கின்ற இன்னொரு வித்தியாசம், அனில் ஒரு நிறுவனத்தை உருவாக்கப்போகிறார் எனில் முதல் முதலீட்டை திரட்டி விடுவார். பின்னர் இரண்டு மூன்று ஆண்டுகள் குறிப்பிட்ட நிறுவனத்தை உருவாக்க எடுத்துக்கொள்வார். ஆனால் முகேஷ் அப்படி அல்ல, ஒரு நிறுவனத்தை இரண்டு மூன்று ஆண்டுகள் செலவழித்து உருவாக்கி விடுவார். பின்னர் அந்த நிறுவனத்தைக் காட்டி முதலீட்டை பெறுவார். இதற்கு நல்ல உதாரணம் ஜியோ. ஜியோ இங்கே அடியெடுத்து வைக்கும் போது முதலீடு செய்திடுங்கள் என அவர் யாரையேனும் அழைத்திருந்தால் சிலர் வந்திருப்பார்கள், ஆனால் குறைந்த அளவிலே முதலீடு செய்திருப்பார்கள். காரணம், அப்போது போட்டி நிறுவனங்கள் பல இருந்தன. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஜியோ மற்ற போட்டியாளர்களை காலி செய்த பிறகு முதலீடு செய்ய அழைத்தார். பேஸ்புக் உள்ளிட்ட பல மாபெரும் நிறுவனங்கள் முதலீடுகளை வாரி இறைத்தன.

சொத்துக்கள் பிரிக்கப்படும் போது ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வந்த ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தை அனில் அம்பானி பெற்றிருந்தார். ஆனால் அவரிடம் தொலைநோக்கு திட்டம் என்பது இல்லாதபடியால் மற்ற நிறுவனங்கள் போலவே தான் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனமும் என நினைத்துக்கொண்டு அதில் சிறப்பு அக்கறை காட்டாமல் செயல்பட்டு வந்தார். ஆனால் தொலைத்தொடர்புத்துறைக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை அப்போதே அறிந்து வைத்திருந்தார் முகேஷ் அம்பானி. ஆனால் சொத்துக்கள் பிரிக்கப்படும் போது ரிலையன்ஸ் அவருக்கு கிடைக்கவில்லை. ஆகவே அவர் காத்திருக்க ஆரம்பித்தார். சரியான தருணம் வந்தபோது ஜியோ எனும் புதிய தொலைத்தொடர்பு நிறுவனத்தை ஆர்மபித்தார். இந்திய அரசு டிஜிட்டல் உலகிற்கு பச்சைக் கொடி காட்டியிருந்த தருணத்தில் 4ஜி அதிவேக டேட்டாவை குறைந்த விலையில் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்தார். ஜியோவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் பல நிறுவனங்கள் வெளியேறிவிட்டன.

முகேஷ் அம்பானி தனக்கிருந்த சிறப்பு இயல்புகளாலும் தொழில்துறையை அவர் சரியான முறையில் புரிந்து வைத்திருந்தபடியாலும் தான் இன்று இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் உலகில் முன்னனி பணக்காரர்களில் ஒருவராகவும் வளர்ந்து நிற்கிறார். 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *