பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன?
“அவர்கள் பெரிய கார்களில் வருவார்கள். எங்களை ஆசை தீர அனுபவிப்பார்கள். அவர்களின் சந்தோசத்தை கூட்ட எங்களை கடுமையாக அடிக்கவும் செய்வார்கள். அத்தனையும் செய்துவிட்டு எங்களுக்கு கொடுப்பதாக சொன்ன பணத்தையும் கொடுக்காமல் ஓடி விடுவார்கள். இந்த சூழலில், எங்களை தாக்கியதற்கோ அல்லது பணம் கொடுக்காமல் ஏமாற்றியதற்கோ காவல் நிலையத்தில் அவர்கள் மீது எங்களால் புகார் கொடுக்க முடியாது. காரணம், பாலியல் தொழில் செய்வது ஒரு குற்றமாக நம் சமூகத்தில் கருதப்படுகிறது” – பாலியல் தொழில் செய்யும் ஓர் பெண்மணி.
இந்த சமூகம் மருத்துவர் ஒருவரை நடத்துவதற்கும் துப்புரவு பணியாளர் ஒருவரை நடத்துவதற்கும் அதிகபட்ச வேறுபாடுகள் இருக்கும். இதிலே, பாலியல் தொழிலாளிகள் வரவே மாட்டார்கள். அவர்கள் மீது தவறே இல்லாவிட்டாலும் கூட அவர்கள் மீது இந்த சமூகம் தவறான பார்வையையே கொண்டுள்ளது. இதற்கு காரணம், பாலியல் தொழில் இழிவானது அதனை செய்பவர்கள் இழிவானவர்கள் என்று தொடர்ச்சியாக சமூகம் கட்டமைத்த பாடம். மற்றொன்று, பாலியல் தொழில் சட்டபூர்வமானது என்று சட்டம் வலியுறுத்தி சொல்லாதது.
இந்த சூழலில் தான் மே 19 அன்று உச்சநீதிமன்றம் சில கருத்துக்களை முன்வைத்தது. நாகேஸ்வர ராவ், கவை, போபண்ணா அடங்கிய அமர்வு பாலியல் தொழில் குறித்து சில கருத்துக்களை முன்வைத்தது. அதன்படி, மற்ற தொழில்களை போலவே பாலியல் தொழிலும் ஒரு தொழில் தான். மற்ற குடிமக்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்படுகின்றனவோ அந்த உரிமைகள் அனைத்தும் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முக்கியமாக, பாலியல் தொழில் செய்கிறவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். காவல்துறையினர் அவர்கள் மீது தேவையற்ற வழக்குகள் பதிவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் புகார் அளித்தால் அதனை முறையாக விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
பாலியல் தொழில் செய்கிறவர்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது “பாலியல் தொழில் குற்றம் இல்லை” என்பது தான். மேலே நீதிமன்றம் சொன்ன கருத்துக்கள் இந்த கோரிக்கைக்கு வழு சேர்க்கும் என வைத்துக்கொண்டாலும் கூட அது முழுமையாக பாலியல் தொழிலை குற்றம் அற்றதாக மாற்றிவிடாது என அது சார்ந்து இயங்குகிறவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாலியல் தொழிலை வரைமுறை செய்திடுவதற்கும் குற்றம் அற்றதாக மாற்றுவதற்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. வரைமுறை (legalising) செய்வதற்கு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும், பாலியல் தொழில் எப்படி, எங்கே, யாரால் நடத்தப்பட வேண்டும் என பல விதிகளை உருவாக்க வேண்டி வரும். இதற்கு நெடிய காலம் ஆகலாம்.
ஆனால், பாலியல் தொழில் என்பது குற்றம் அற்றது என்பதே அந்த தொழிலில் ஈடுபடுகிறவர்கள் எழுப்புகிற முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. காரணம், இதுவொரு குற்றம் அல்ல என்கிற தெளிவு ஏற்பட்டால் தான் அவர்களுக்கான உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கும். குறிப்பாக, அவர்கள் தாக்கபட்டாலோ அல்லது அவர்கள் ஏமாற்றபட்டாலோ சட்டபூர்வமாக நடவெடிக்கை மேற்கொள்ள முடியும். தற்போதைய சூழலில் இவர்களே குற்றம் செய்தவர்களாக கருதப்படுவதால் இவர்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் இவர்கள் நீதி கேட்க முடிவது இல்லை. அதற்காகவே இவர்கள் “பாலியல் தொழில் குற்றமற்ற தொழில்” என்பதை வலியுறுத்தி போராடுகிறார்கள்.
பாமரன் கருத்து
பல வெளிநாடுகளில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அவர்கள் மீது தாக்குதல் நடந்தாலோ அல்லது அவர்கள் எமாற்றபட்டாலோ அவர்களது புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துகிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற அனைவரும் குற்றவாளிகள்/மோசமானவர்கள் என்ற கண்ணோட்டம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால், அவர்களது குடும்ப சூழல், சமூக தாக்கம் ஆகியவையே பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கிறது என்றும் அவர்கள் அதனை தொழிலாக கருதியே அதில் ஈடுபடுகிறார்கள் என்றும் நாம் புரிந்துகொள்வது இல்லை.
பாலியல் வன்புணர்வு செய்திடும் கொடும் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை கூட பாலியல் தொழில் செய்கிறவர்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை என்பது வேதனையான விசயமாக உள்ளது. பாலியல் தொழில் செய்கிறவர்கள் கேட்கும் கோரிக்கை என்பது அவர்களுக்கு பிறர் குற்றம் இழைக்கும் போது தங்களை சக மனிதராக நினைத்து குரல் கொடுப்பதற்காக பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் என்பது தான்.