அகதிகளின் தேசம் தான் எது? விண்வெளியில் இருந்து குதித்தார்களா?

 

போர்ப்பதற்றம், பாதுகாப்பின்மை, மத மொழி இன துன்புறுத்தல்கள், வறுமை போன்ற பல காரணங்களால் தங்களது சொந்த மண்ணை விட்டு இன்னொரு தேசத்திற்குள் அடைக்கலம் புகுகின்றனர் மக்கள். அப்படி இடம் மாறுகிறவர்களை இந்த உலகம் அகதிகள் என அழைக்கின்றன. அவர்கள் ஒரு நாட்டிற்குள் நுழையும் போது சிகப்பு கம்பள வரவேற்பை பெறுவதில்லை. மாறாக, உயிரை பணயம் வைத்துதான் அவர்கள் ஒரு தேசத்திற்குள் நுழைய முற்படுகிறார்கள். ஒரு அகதி இன்னொரு தேசத்திற்குள் நுழைய மேற்கொள்ளும் முயற்சிகளை புரிந்துகொள்ள வேண்டுமெனில் மெக்சிகோ நாட்டில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் நுழைய முற்படுவோரின் நிலையை பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். 

 

அப்படியே நுழைந்துவிட்டாலும் கூட அவர்கள் எதிர்பார்த்துவந்த வாழ்வு கிடைத்துவிடும் என சொல்லிவிட முடியாது. காரணம், அவர்கள் தொடர்ந்து அகதி என்ற முத்திரையோடு தான் காலத்தை கழிக்கவேண்டி இருக்கும். அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம், அண்மையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டம். இந்து முஸ்லீம் அந்த பிரச்சனைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அந்த திருத்தச்சட்டம் லட்சக்கணக்கான மக்களை வெளியேற்ற உதவப்போகிறது அதைத்தான் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு மனிதனை தங்களது எல்லைக்குள் வரவிடாமல் ஒரு தேசம் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக்கூறி தடுக்கலாம். ஆனால் வந்து பல ஆண்டுகள் இங்கேயே தங்கிவிட்டவர்களை போ என்றால் எங்கே போவார்கள். நம்மை போ என்று சொன்னால் எங்கு போவோம்? 

 

 

அகதிகளை ஏற்றுக்கொள்வதில் பல்வேறு நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.  பாதுகாப்பு, செலவினம் உள்ளிட்ட காரணங்களைக்காட்டி அவர்களை பெருவாரியான தேசங்களும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அந்த தேசங்களை பொறுத்தவரைக்கும் அது சரியானதாகவே இருக்கலாம். காரணம், அந்த தேசங்கள் அந்த மக்களது வரிப்பணத்தால் கட்டமைக்கப்பட்ட தேசம். ஆகவே அது அந்த நாட்டின் குடிமக்களுக்கு ஏற்ப தான் செயல்படும் என்பது எதார்த்தமான உண்மை. திடீரென லட்சக்கணக்கில் அகதிகள் வந்துவிட்டால் அவர்களை சமாளிப்பது என்பதும் சிரமமான காரியம் தான். ஆனால் நாம் விலங்குகள் இல்லையே, மனிதர்களாக அல்லவா பிறந்துவிட்டோம். நமக்கு கரிசனம் என்ற ஒன்று இருக்கவேண்டும் அல்லவா!

மக்கள் மனநிலை மாறவேண்டும்

கடற்கரை  மணலில் இறந்து கிடக்கும் அயலான் குர்தி

2015 செப்டம்பர் மாதம் துருக்கிக்கு சிரிய அகதிகள் கடல்மார்க்கமாக பயணம் செய்தனர் . அந்த காலகட்டத்தில் துருக்கி மட்டுமல்லாது பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு , செலவினம் உள்ளிட்ட காரணங்களை கூறி அகதிகளுக்கு புகலிடம் கொடுக்க மறுத்துவந்தன . இதனால் கடலிலேயே காத்துக்கிடக்கும் நிகழ்வுகளும் திரும்பி போர் நடக்கும் தங்களது இடங்களுக்கே வந்துவிடும் நிகழ்வுகளும் நடந்துவந்தன. பல சமயங்களில் கடலிலேயே அகதிகள் மாய்ந்துபோன நிகழ்வுகளும் நடந்துவந்தன .

 

 

மக்களின் மத்தியிலும் அகதிகள் குறித்த கவனம் அவ்வளவாக இல்லை . இதனால் அகதிகளுக்கு உதவி செய்திடும் தொண்டு நிறுவனங்களும் பணமின்றி தவித்து வந்தன .இந்த சூழலில் தான் அகதிகளாக வந்த சிறுவன் கடற்கரை மணலில் முகம் புதைந்து கிடக்கின்ற புகைப்படத்தினை எடுத்தார் நிலுபர் டேமிர் எனும் புகைப்படக்காரர். முன்னனி பத்திரிக்கைகளிலும் செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் வெளியான இந்த புகைப்படத்தினை கண்டு அதுவரை அகதிகளுக்கு அனுமதி மறுத்த நாடுகளை அனுமதி கொடுக்கச்செய்தது , அரசு அகதிகளுக்கு அனுமதி கொடுக்காத பட்சத்தில் அனுமதி கொடு என அந்நாட்டு மக்களையே போராட தூண்டியது .

 

 

இந்த புகைப்படம் வெளியான பிறகு ஏற்பட்ட தாக்கம் குறித்த ஆய்வின் முடிவில் …..

 

 

தொண்டு நிறுவனங்களுக்கு மக்களிடம் இருந்து வந்த உதவித்தொகை 3850 அமெரிக்க டாலரிலிருந்து 214300 டாலராக அதிகரித்தது (55 மடங்கு அதிகம்). அடுத்த ஆறு வாரத்திற்கு பிறகு வந்த உதவித்தொகை 6500 டாலர் (குறைந்தது ). தற்போது நாமும் உலகமும் சிரியா போன்ற நாடுகள் குறித்து பேசுவதற்கும் அகதிகள் மீதான பார்வையை உலக நாடுகள் மாற்றிக்கொண்டதற்கும் இந்த புகைப்படம் மிகப்பெரிய காரணம் .

அகதிகளின் தேசம் தான் எது?

அகதிகள்

உதாரணத்திற்கு, இலங்கை போரின்போது அகதிகளாக வந்தவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு தமிழகத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. இங்கே படித்து பல்வேறு சான்றிதழ்களையும் வாங்கி இருக்கிறார்கள். நாளையே இவர்களை நாடுகடத்த வேண்டும் என நினைத்தோம் என்றாலோ அல்லது அவர்களாகவே இலங்கைக்கு செல்ல விரும்பினாலோ அவர்களுடைய பெற்றோர்கள் இலங்கையில் பிறந்ததற்கான சான்றிதல்களை காட்டவேண்டி இருக்கும். போர்ப்பதற்ற சூழலில் பெற்றோர்களின் சான்றிதழ்கள் இல்லையெனில் அவர்களால் இலங்கைக்கு செல்ல இயலாது. இதுவே எதார்த்தமான உண்மை. 

இதுதான் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அகதிகளின் நிலை. 

 

பாதுகாப்பு, செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஒரு சராசரி மனிதனாக சிந்தித்து பாருங்கள். எப்படியேனும் அகதிகள் என்போரும் இந்த பூமியில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதை எவராலும் மறுக்க முடியாது அல்லவா. ஏதோ ஒரு சூழலினால் அவர் பிறந்த இடத்தில் வாழ இயலவில்லை. அதற்காக இந்த பூமியில் அவர் எங்குமே வாழக்கூடாது என சொல்ல இயலுமா? சொல்வது மனிதம் ஆகுமா? 

 

பரந்த மனதுடன் மனிதர்கள் இருக்கவேண்டும். சிந்திக்கும் திறனை இயற்கை கொடுத்திருப்பதற்கான உண்மையான நோக்கம், உலகில் எந்த உயிரும் துன்புறாதவண்ணம் சிந்தித்து செயல்படுவதற்காகத்தான். அதனைவிட்டு அந்த சிந்திக்கும் ஆற்றலை பயன்படுத்தி சக மனிதர்களை பிளவுபடுத்தவோ அனைத்தையும் சுரண்டி வைத்துக்கொள்ளவோ கூடாது. 

 

நாளை நாமும் அகதிகளாக ஆகலாம். அப்போது அரவணைக்கும் கரங்களை நாம் தேடவேண்டி இருக்கும். ஆகவே இப்போதே நாம் அரவணைக்கும் கரங்களை கொண்டிருப்போம். 


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *