டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : தேர்வுகளை ரத்து செய்வது சரியா?
எப்படியேனும் ஒரு அரசு சென்றுவிட வேண்டும் என்கிற கனவு இருக்கும் இளைஞர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள். இந்தத்தேர்வில் மட்டும் தான் முறைகேடு நடந்ததா அல்லது இதற்கு முன்பாகவும் நடந்திருக்கிறதா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
அரசுப்பணி ஒரு மாபெரும் கனவு
10,000 ஆயிரம் காலியிடங்கள் இருக்கக்கூடிய பணிக்கு தேர்வு வரப்போகிறது என்றால் அதற்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான விண்ணப்பங்கள் வருகின்றன. சாதாரண குடும்ப பின்னனியில் இருந்து வருகிற இளைஞர்கள் பல ஆயிரங்கள் செலவு செய்து, பல்வேறு சிறப்பு வகுப்புகளுக்கு சென்று, பல மணிநேரம் கடுமையாக படித்து எப்படியேனும் வேலைக்கு தேர்வாகிவிட வேண்டும் என முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். காரணம், அரசுப்பணி அவர்களுக்கு ஒரு மாபெரும் கனவு.
சினிமாவை மிஞ்சிய முறைகேடு
டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் ஊழியர்களினால் மிகப்பெரிய முறைகேடு நடத்தப்பட்டு இருக்கிறது. அவர்கள் அதனை எப்படி செய்தார்கள் என்பது சினிமாவை மிஞ்சிடும் விதமாக இருக்கிறது.
பணம் கொடுத்த தேர்வர்களை குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்கும் தேர்வு மையத்தில் தேர்வு எழுதுமாறு விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தி இருக்கிறார்கள். பின்னர் தேர்வுக்கு முந்தைய நாள், சில மணி நேரத்தில் அழியக்கூடிய மையினை கொடுத்து இருக்கிறார்கள். அங்கிருந்து தேர்வுத்தாளை எடுத்துக்கொண்டு வரும் ஊழியர் இந்த முறைகேட்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். தேர்வுத்தாள்கள் எடுத்துக்கொண்டு வரும் வாகனத்தில் வரக்கூடிய அரசு ஊழியர் கதவின் சாவியை வைத்திருக்கிறார். அந்த வாகனத்தை பின் தொடர்ந்து காரில் இன்னொருவர் வந்துகொண்டே இருக்கிறார். இரவு ஒரு இடத்தில் சாப்பிடப்போகலாம் என கூறி வாகனத்தை நிறுத்த சொல்லும் அரசு ஊழியர், ஓட்டுநர் மற்றும் காவலர் இருவரையும் ஹோட்டலில் அமர வைத்துவிட்டு காரில் வந்த நபரிடம் சாவியை கொடுத்து விடுவார். அந்த நபர் கதவை திறந்து குறிப்பிட்ட தேர்வுத்தாளை மட்டும் எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிடுவார். பிறகு பின்னால் வந்த காரில் அமர்ந்துகொண்டு சரியான பதிலை புதிய பேனாவினால் திருத்திக்கொண்டு அந்த வேனை நோக்கி வந்துகொண்டே இருப்பார். அதிகாலை மீண்டும் ஒரு நாடகம் நடக்கும். அப்போது வாங்க டீ குடிக்க போகலாம் என வாகனத்தை நிறுத்தச்சொல்லிவிட்டு போவார் ஊழியர். அப்போது சாவி மீண்டும் காரில் வந்தவரிடம் கொடுக்கப்படும். அவர் தேர்வுத்தாளை வைத்துவிடுவார்.
இது படத்தில் நிகழ்ந்தது அல்ல நிஜத்தில் நிகழ்ந்தது.
இதற்கு முன்னரும் நடந்த முறைகேடு
போலீஸாரின் விசாரணையில் புதிய தகவலாகக் காவல்துறையில் பணியாற்றி வரும் போலீஸ் எஸ்.ஐ ஒருவரின் குடும்பத்தினர் டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகளில் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்தது தெரியவந்துள்ளது. அந்தக் காவலரின் மனைவி, குரூப் 2 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். காவலரின் தம்பி குரூப் 2 தேர்வில் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே தேர்வில் காவலரின் தம்பி மனைவி தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது எவ்வளவு பெரிய அபத்தம்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் குரூப் 4 தேர்வில் மட்டும் முறைகேடு நடைபெறவில்லை. அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெற்று இருக்கின்றன என்பதைத்தான்.
டிஎன்பிஎஸ்சி செய்யவேண்டியது என்ன?
தமிழக அரசின் அரசுப்பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி எனும் தன்னாட்சி அமைப்புதான் தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்து வருகிறது. இதுவரைக்கும் டிஎன்பிஎஸ்சி அமைப்பு மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் வைக்கப்படவில்லை என்பது பெரிய ஆறுதலான விசயம். அந்த அமைப்பின் மீது இன்றும் இளைஞர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனை அந்த அமைப்பு காப்பாற்ற வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்.
தேர்வுகளை ரத்து செய்வது சரியா?
சில குற்றவாளிகள் தவறு செய்துவிட்டார்கள் என்பதற்காக மிகக்கடுமையாக படித்து தேர்வானவர்களின் தேர்ச்சியை நீக்குவது சரியான முடிவு அல்ல. குற்றவாளிகள் களையெடுக்கப்பட்ட வேண்டும். அதேசமயம் நேர்மையாக படித்து வெற்றிபெற்றவர்களின் வெற்றி பாதுகாக்கப்படவேண்டும். ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளை செலவழித்து மிகக்கடுமையாக படித்துதான் இந்த வெற்றியை பெற்று இருப்பார்கள். மீண்டும் வரக்கூடிய தேர்வில் அவர்கள் தேர்ச்சி அடைவார்கள் என சொல்லிவிட முடியாது. ஆகவே அவர்களுக்கான வாய்ப்பை எந்தவிதத்திலும் பறிக்க கூடாது. இதனை அரசும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமைச்சர் திரு ஜெயக்குமார் அவர்கள் பேசும் போதும் தேர்வை ரத்து செய்வது நேர்மையாக தேர்வு எழுதியவர்களை பாதிக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!
What you think??
Cancel panna kudathu.