தந்தை பெரியார் வரலாறு சுருக்கமாக | Thoughts Of Periyar EVR | PDF

மற்றவர்களிடம் பழகும் விதத்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான் – பெரியார்

பெரியார்

 

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் Thoughts Of Periyar EVR [ பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்] புத்தகம் இங்கே pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளது நீங்கள் தரவிறக்கம் செய்து படிக்கலாம். அந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெரியார் அவர்களைப்பற்றிய ஒரு நீண்ட அறிமுகக்கட்டுரையைத்தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

இன்று பெரியாரின் சிலைகள் எளிதில் உடைக்கப்படுகின்றன, அவரின் சிலை மீது சாயங்கள் பூசப்படுகின்றன, அவரின் திருமண வாழ்க்கை கொச்சைப்படுத்தி பேசப்படுகின்றன. ஆனாலும் அந்த கறுப்பு மனிதரின் புகழ் மேலும் மேலும் எழுச்சி அடைந்துகொண்டே தான் இருக்கின்றன. இக்கால இளைய தலைமுறைக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான், நீங்கள் எத்தகைய கொள்கையுடைய அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் எதிரெதிர் கொள்கையுடையவர்களை மதித்து நடக்க கற்றுக்கொள்ளுங்கள். செப்டம்பர் 17, 1879 ஆண்டு பிறந்தார் பெரியார்.

பெரியார் பற்றி இன்றைய தலைமுறைகள் அறிந்துகொள்வதற்காக ஓர் அறிமுகக்கட்டுரையை பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற புத்தகத்தில் இருந்து பார்க்கலாம். தமிழக்தில் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவரின் கதையை கேட்கப்போகிறீர்கள். நிச்சயம் நீண்ட பதிவாகவே அது இருக்கும்.

 

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 1

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 2

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 3

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி….

 

தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் 1925 முதல் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழக மக்களாலும் பிறராலும் கேட்கப்பட்டும் பாதிக்கப்பட்டும் பின்பற்றப்பட்டும் ஆராய்ச்சிக்கு உரியவையாகக் கொள்ளப்பட்டும் வருபவை. இங்கு தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், இயக்கங்கள், கிளர்ச்சிகள், சாதனைகள் முதலானவற்றை சுருக்கமாக காணுவது இன்றியமையாதது.

பெரியாரின் பள்ளிப்படிப்பு மூன்றாண்டு காலத் திண்ணைப் பள்ளிக்கல்வியோடும் இரண்டாண்டு கால பிரைமரி பள்ளிக் கல்வியோடும் 11 வயதில் முடிவுற்றது. அக்காலத்தில் நம் சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரும் கடவுள், மத, சாஸ்திர, புராண நம்பிக்கைகளுக்கு பெரிதும் அடிமைப்பட்டு இருந்தனர். [இன்றும் அது தொடர்கிறது] இந்து வைதீகக் கொள்கைகளைப் போற்றுவதும் பின்பற்றுவதும் தங்களை உயர்ந்த மனிதர்களாக்கிக் கொள்வதற்குச் சரியான வழியென்று ‘பெரிய மனிதர்கள்’ என்பவர்களும் ‘படிப்பாளிகள்’ எனப்பட்டோரும் ‘மேல் சாதி மக்கள்’ எனக் கூறிக்கொன்றோம் அக்காலத்தில் கருதினர். மதம் என்பதன் பேராலும் சமுதாயப் பழக்க வழக்கம் என்பதன் பேராலும் பார்ப்பனர் – திராவிடர் மத குருவாகவும், மதத் தலைவராகவும் ஆதிக்கம் கொண்டு விளங்கினர்.

நம் சமுதாயத்திற்குள் பெரும்பாலோர் கல்வியறிவு அற்றவராயிருந்தனர். நூற்றுக்கு ஏழு பேரே படிப்பறிவு பெற்று இருந்தனர். எனின் அவர்களுள் பார்ப்பனர் மூவர். கிறிஸ்தவர் ஒருவர், சாதி இந்துக்கள் இருவர், பிறர் ஒருவர் என்ற அளவில் இருந்தது.

சூத்திரனுக்கு அறிவு கொடுக்கப்படக்கூடாது என்பதே ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாகத் தென்னாட்டில் ஆட்சி புரிந்தவர்களின் கல்விக்கொள்கையாக இருந்தது. வெள்ளையர் ஆட்சியிலும் கிபி 1800 க்குப் பின்னர் படித்தவர்கள் என்றால் பார்ப்பனர் என்ற நிலைமை மட்டுமே இருந்தபடியால் அரசு அலுவல் துறைகள் அனைத்திலும் பார்ப்பனர் மட்டுமே ஆதிக்கம் பெற்றிருந்தனர். படிப்புத் தகுதி ஒன்றே கருதி அலுவலர்கள் அமர்த்தப்பட நேர்ந்தவுடன் படிப்புத்தகுதி பெற வாய்ப்பில்லாதவர்களாக ஆக்கப்பட்டிருந்த அனைத்துச் சமுதாயத்தினரும் ஒதுக்கப்பட்டனர்.

சமுதாயத்தில் பெரும்பான்மையினராக இருந்த சூத்திரர் எனப்படுவோர் பார்ப்பனர்களால் தீண்ட தகாதவர் என கருதப்பட்டனர். பார்பபனர் புழங்கும் பொது இடங்களில் – உணவு விடுதிகள், குளிக்கும் துறைகள், கோவில்கள் போன்ற அனைத்திலும் சூத்திரர் புழங்கக் கூடாதவர்களாக கருதப்பட்டனர். பார்ப்பனர் அனுபவித்த உரிமைகள் எதனையும் எந்த துறையிலும் சூத்திரர் அனுபவிக்க இயலாது என ஆக்கப்பட்டிருந்தது.

கோவில்களை கட்டி முடிப்பவர் – சூத்திரர், ஆனால் கோவில் குடமுழுக்கு நீர் ஊற்றுபவர் , கோவிலில் அர்ச்சனை செய்பவர், ரதத்தில் சிலையோடு அமர்ந்து ஊர்வலம் வருபவர் – பார்ப்பனர் என்ற நிலைமை நிலவியது.

எந்த நிலையுடைய அல்லது சாதிக்கு உரிய திராவிடரையும் வா போ என்றும் வாடா போடா என்றும் பார்ப்பனர் ஏகமாக அழைக்கும் நிலைக்கு நம் மக்கள் இழி நிலையில் துன்புற்றனர். தமிழர் வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் பார்ப்பனர் குரு – தலைவர் என்பது நிலவியது.

தீண்டப்படாதவர் எனப்படும் பள்ளர், பறையர் முதலானோர் வேறு எந்த வகுப்பராலும் தீண்டப்படாதகாதவராவே நடத்தப்பட்டனர். பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத மேல் சாதி மக்களும் புழங்கும் எந்த பொது இடத்திலும் பள்ளரும் பறையரும் புழங்கக்கூடாது. சில தெருக்களில் நடக்கக்கூடாது. மாட்டு வண்டியில் உட்கார்ந்து செல்வதோ செருப்புகள் அணிந்து போவதோ குடை பிடித்துச் செல்வதோ பொது கிணற்றிலும் குளத்திலும் குளிப்பதோ நீர் அருந்துவது கூடாது. எங்கோ அரிதாகக் காணப்படும் தண்ணீர்ப் பந்தல்கள், காப்பிக் கடைகளில் கூட மூங்கில் குழாயில் ஊற்றப்படும் காபி, மோர், நீர் இவற்றைக் கொட்டங்களில் வாங்கிக் குடித்துச் செல்ல வேண்டும் என்பதே எல்லா ஊரினரும் கொண்டிருந்த சமுதாய நெறியாக இருந்தது.

 

மனிதன் உலகில் தன் சுயமரியாதையை, சுய மானத்தை உயிருக்கு சமமாகக் கொள்ள வேண்டும்.

கருஞ்சட்டைப்பேரணி

பறையரும் பள்ளரும் – பார்ப்பனர்களால் காணத் தகாதவர்களாக, அண்டத் தகாதவர்களாக தீண்டத் தகாதவர்களாக கருதப்பட்டனர். ஒற்றையடிப் பாதைகள், வண்டிப் பாட்டைகளில் பார்ப்பனரை எதிர்ப்படும் பறையர் முதலானோர் கூப்பிடு தூரம் ஒதுங்கியோடி மறைந்து நடத்தல் வேண்டும். பறையர் எனப்படுவோர் முழங்காலுக்குக் கீழ் தொங்கும்படி துணி அணியக் கூடாது, தோளில் துண்டு போடாக் கூடாது. உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. தங்க நகைகளை விரும்பி பெறுதல் கூடாது, மண் சுவரும் ஓலைக் குடிசையும் தவிர வேறு வகையான வீடு பெற விரும்பக் கூடாது. மொத்தத்தில் எந்தச் சுதந்திரமும் உரிமையும் பெறக்கூடாதவராய் அடிமை வேலை செய்தே வாழ வேண்டும் என்ற இழிவுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.

சில சூத்திர சாதிப் பெண்டிரும் ஆதித் திராவிட பெண்டிரும் மாராப்புத் துணி போடுவதும் சட்டை போடுவதும் மேல் சாதியினர் என்பவர்களை அவமரியாதை செய்வதாகக் கருதப்பட்டு, அனுமதிக்கப்டாமல் இருந்தது. மனிதப் பிறவியில் பெண்கள் இழி பிறவிகள் எனவும், ஆண்களோடு சம உரிமை பெற அறுகதையற்றவர்கள் எனவும் அனைவரும் கருதினர்.

கேட்கவும் படிக்கவும் நெஞ்சு பொறுக்காத இந்த இழிநிலை சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், நாயக்கர், நவாபுகள் ஆகிய அனைவரின் ஆட்சிக்காலங்களிலும் இருந்தது. இந்தக் கோரா நிலைக்குப் பரிகாரம் தேட முயன்ற வெள்ளையரை, பார்ப்பனர் எதிர்த்தனர். பணக்காரர் எதிர்த்தனர். இத்தகைய அமைப்பு எதையும் மாற்றக்கூடாது. இத் துறைகளில் பிரிட்டிஷார் தலையிடக்கூடாது என்ற உறுதிமொழியினை கிபி 1773,1857 ஆண்டுகளில் அதிகாரபூர்வமாக பெற்றனர் – பார்ப்பனர்.

இத்தன்மையில் இருண்டு கிடந்த, அறியாமை ஆட்சி புரிந்த, சமூக இழிவுக்காப்பதே வாழ்க்கை நியதியாக இருந்த தென்னாட்டில் அறியாமை இருளையும் சமூக இழிவு இருட்டினையும் சுட்டெரிக்கும் தன்மையினராகக் தோன்றிய பெரியார், தமிழகத்தில் ஈரோடு பெருநகரில் 1879 செப்டம்பர் 17 – இல் உதித்தவராவார். இவருடன் பிறந்தவர் மூவர். தமையனார் திரு இ வெ கிருஷ்ணசாமி.

மேலே குறிப்பிட்ட இழி நிலைகள் மனிதாபிமான உணர்வுக்கும் பிரத்யட்ச அனுபவத்திற்கும் தன்மான உணர்வுக்கும் நேர்மாறான நிலையாகும் எனப் பெரியார் அவர்கள் 1891 முதலே உணரத் தலைப்பட்டார்.

மிக இளம் பருவத்தில் தனது சிறிய பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்து வந்த அவர் கட்டுக்கடங்காத முரட்டுப் பிள்ளையாகத் திரிந்தார். சமுதாய மக்கள் பலரும் அனுசரித்து வந்த சாதி அனுஷ்டானங்களை நாள்தோறும் மீறிவந்தார். சமுதாயத்தில் தாழ்ந்தவர்கள் என கருதப்பட்ட வாணியர், பணிக்கர்ம் குறவர் முதலானோர் வீடுகளிலும் முஸ்லீம்கள் வீடுகளிலும் நீர் பருகுவதும் பண்டங்களை உண்பதும் அவரது பிள்ளைக் குறும்புகளாக இருந்தன.

 

தொத்தாவை சோதித்த அண்ணா

பெரியார் உண்மையை உணர்ந்த அந்த தருணம்

இந்தத் தருணத்தில் பெரியார் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த உண்மையை உணர்ந்த தருணம் என குறிப்பிட்டு நான் பாமரன் கருத்து இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரையை மீண்டும் இங்கே தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு நிகழ்வு, அதில் எழும் கேள்வி, கிடைக்கும் பதில் இவை தான் வரலாற்றை மாற்றுகிற நட்சத்திரங்கள் உருவாக காரணமாகின்றன. பெரியார் சாதிய கட்டமைப்பை எதிர்த்து வலிமையோடு போராடிட அவருக்கு நடந்த இரண்டு சம்பவங்கள் போதுமானவையாக இருந்தது எனலாம்.

மூட நம்பிக்கையை பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும் சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை ஏற்பட்டது. முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக்கூடாதே என நினைப்பவர்கள் கோழைகளேயாவார்கள் , முன்னோர்களை விட நாம் அதிக புத்திசாலிகளே. நம்மைவிட நமக்குப்பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே – பெரியார்

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை அந்நிலையிலிருந்து மீட்க பகுத்தறிவு என்னும் பேராயுதத்தை ஏந்தி வந்த இராமசாமி எனும் பெரியார் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர். பெரியார் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது ஒரு உயர்ந்த சாதியில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரு பிள்ளையால் எப்படி ஏழை எளிய மக்களின் வலியை உணர முடிந்தது? தான் சார்ந்த மேல்தட்டு மக்களையே எதிர்க்க துணிந்தது எப்படி? சாதியின் கொடுமையை எந்த தருணத்தில் பெரியார் உணர்ந்திருப்பார்? என்ற கேள்விகள் எழுந்ததுண்டு. அதற்கான பதிலை அமரர் கே பி நீலமணி என்பவர் எழுதிய “தந்தை பெரியார்” என்ற புத்தகத்தில் படித்தேன். அதைத்தான் இந்தப்பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

இராமசாமியின் பெற்றோர்கள் மிகவும் நல்லவர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்திடும் பேருள்ளம் கொண்டவர்கள் ஆனாலும் பிறரைப்போலவே அவர்களிடத்திலும் அந்த எண்ணம் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது. அவர்கள் இராமசாமி தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளோடு பழக்கூடாது, அவர்கள் கொடுப்பதை உண்ணக்கூடாது என்றே வலியுறுத்தி வந்தனர். ஆனால் இராமசாமிக்கு அதில் உடன்பாடில்லை. பெற்றோர் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் அவர் தலையில் ஏறவே இல்லை, அங்கு தான் பகுத்தறிவு பிறக்க தயாராகிக்கொண்டு இருக்கிறதே பிறகெப்படி ஏறும்.

இனி அமரர் கே பி நீலமணியின் கட்டுரைக்குள் போகலாம்..

தான் சலீமின் வீட்டில் பிரியாணி சாப்பிட்டதையும் தனது அம்மாவிற்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதனால் அவர்களின் அருகே சென்றுவிடக்கூடாது என்று எண்ணிக்கொண்டும் நடந்துவந்தார். அவர் ஒதுக்குபுறமாக இருந்த குடிசைகளின் நடுவே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுவனின் பயங்கரமான அழுகுரல் கேட்டது.

“என்னை அடிக்காதேம்மா என்னை அடிக்காதேம்மா நான் இனிமே அந்த அய்யா கூட பேசல, விளையாடப்போகல” என அந்த சிறுவன் அலறிக்கொண்டு இருந்தான்.

உள்ளே போகலாமா வேண்டாமா என எண்ணிய இராமசாமி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அடிவாங்கிக்கொண்டு இருந்தது தன்னோடு சேர்ந்து விளையாடும் தனது நண்பன் காளி.

அந்த அம்மையாரின் கைகளில் இருந்த சுள்ளியை பிடுங்கிக்கொண்டு காளியை மீட்டார் இராமசாமி. பார்ப்பதற்கு பெரிய இடத்து பிள்ளையைப்போல இருக்கவும் காளியின் அம்மாவும் வாயடைத்துப்போனார்.

யார் இந்த பெரிய இடத்து பையன் என கண்களாலேயே தனது மகன் காளியை நோக்கினாள் தாய். காளி இப்போது மிகவும் சந்தோசமாக ” இவருதாம்மா என்னோட சிநேகிதரு நம்ம அப்பா கூட இவங்க பண்ணைலதாம்மா வேலை பாக்குறாரு, சின்ன எசமான் ரொம்ப நல்லவரும்மா” என சொல்லி முடித்தான் காளி.

பதறிப்போன காளியின் தாய் “பெரியநாயக்கர் அய்யா வீட்டு புள்ளையா நீங்க? ” என்று அலறினாள்.

இராமசாமிக்கு சூழல் நன்றாக புரிந்துவிட்டது. தன்னோடு சேர்ந்து விளையாடுவதனால் தான் காளி அடி வாங்குகிறான் என்பதும் நன்றாகவே விளங்கியது.

“சின்ன எசமான் நீங்க எங்க தெருவுக்குள்ள எங்க வீட்டுக்குள்ள வரலாங்களா…எங்க புள்ளைய கூட சேர்ந்து விளையாடலாங்களா” என்றாள் பயந்தபடி

“இதுல என்னம்மா தப்பு இருக்கு, காளி என்னோடு சிநேகிதன், நான் அவன்கூட பழகினத்துக்கு அவன் கூட சினேகமாக இருந்ததுக்கு ஏன் அவன இப்படி அடிக்கிறீங்க?” என இராமசாமி கேட்டார்.

“எசமான் நீங்க சின்னப்புள்ள, உங்களுக்கு இதெல்லாம் புரியாது. நாங்க கீழ்சாதிக்காரங்க, நீங்க எங்க எடத்துக்கெல்லாம் வரக்கூடாது. பெரிய எசமானுக்கு தெரிஞ்சா எங்கள கொன்னே போட்டுருவாரு”

“நீங்க கீழ்ச்சாதினு யாரு சொன்னா, அதெல்லாம் நம்பாதீங்க” என்றார் இராமசாமி

“எசமான் நாங்க கீழ்ச்சாதினு இந்த ஊர் சொல்லுது, உலகம் சொல்லுது, எல்லாத்துக்கும் மேல காலம்காலமா தீண்டப்படாதவங்கனு வாழுற எங்க பொறப்ப பத்தி எங்களுக்கு தெரியாதா” என்றார் காளியின் அம்மா

“எசமான் இங்க இருந்து சீக்கிரமா போயிருங்க, இனிமே என் மவன் கூட சேராதீங்க யாராவது இவன உங்ககூட பாத்தா இவன் அப்பாவுக்குத்தான் கஷ்டம் வரும்” என காளியை கட்டிக்கொண்டே அழுதாள்.

இனிமேலும் இங்கிருப்பது அவர்களுக்கு மேலும் சங்கடத்தைத்தான் தரும் என்று எண்ணிய இராமசாமி “எனக்கு ரொம்ப தாகமா இருக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி இருக்குமா?” என்றார்

“ஐயோ தண்ணியா கேக்குறீங்க?” என்று தயங்கியபடி தாய் கேட்க

“ஏன் தண்ணி இல்லையா” என்றார் இராமசாமி

“பானை நெறைய தண்ணி இருக்கு ஆனா உங்களைப்போல பெரிய மனுசங்களுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க முடியாத பாவி நாங்க” என்றார் தாய்

“நீங்க இங்க என் கையால தண்ணி வாங்கி குடிச்சது தெரிஞ்சா இந்த தெருவையே கொளுத்திருவாங்க” என அஞ்சிக்கொண்டே கூறினார் காளியின் தாய்

அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தார் இராமசாமி. பின்னர் ஒரு மூலையில் இருந்த பானையில் அலுமினிய டம்ளரால் தண்ணீரை அருந்திவிட்டு வெளியே வந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து கக்கத்தில் வைத்துக்கொண்டனர். காலில் இருந்த செருப்பை கழட்டிவிட்டு வணக்கம் வைத்தனர்.

இவர்களின் இந்த செய்கைகள் தனது குடும்பத்தின் மீதான அன்பினாலோ அல்லது மரியாதையாலோ அல்ல, அப்படி இருந்தால் கூட பரவாயில்லை. இவர்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மட்டும் தீண்டத்தகாதவர்கள் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கும் மேல் சாதிக்காரர்களிடம் இருக்கின்ற பயமே காரணம் என புரிந்துகொண்டார் இராமசாமி.

கீழ்சாதிக்காரர்களுக்காக பேசுகிறவர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சாதியால் வன்கொடுமைக்கு ஆளாகிறவர்களின் மன துயரத்தை அவர்களை தவிர வேறொருவரால் உணரவே முடியாது. பிறகெப்படி இராமசாமி க்கு அவர்களின் வலி துல்லியமாக புரிந்தது. இதற்கான காரணத்தை அடுத்த நிகழ்வில் நாம் புரிந்துகொள்ள முடியும்.

இராமசாமி ஒருமுறை தனக்கு பாடம் நடத்திடும் வாத்தியார் வீட்டு வழியாக நடந்து செல்கிறார். அப்போது மிகவும் தாகமாக இருந்ததனால் வாத்தியாரின் வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்கிறார். அப்போது அங்கு வந்த வாத்தியாரின் மகள் செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்தாள்.

அதை வாங்க கை நீட்டியபோது கைகளில் கொடுக்காமல் தரையில் வைத்தாள். தண்ணீரை குடிக்க துவங்கும் போது ” எச்சில் படமா தூக்கி குடியுங்கள்” என்றாள். குடித்து முடித்த பிறகு அந்த டம்ளரில் மூன்று முறை தண்ணீரை ஊற்றி சுத்தமாகிவிட்டது என்றெண்ணிய பிறகே உள்ளே கொண்டு சென்றாள். அதை வாத்தியாரின் மனைவியும் அருகே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது இராமசாமி “கூனிக்குறுகி போனார்“.

இப்படித்தான் ஒவ்வொருவரும் சாதியால் தங்களை உயர்ந்தவராகவும் மற்றவரை தாழ்ந்தவராகவும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என சிந்தித்தார் இராமசாமி. நம் வீட்டில் நம்மை விட கீழ்சாதிக்காரர்கள் என ஒரு சமூகத்தை ஒதுக்குகிறார்கள், இன்னொரு வீட்டில் நம்மையே கீழ்சாதிக்காரன் என ஒதுக்குகிறார்கள் என சாதியின் அடிப்படையை புரிந்துகொண்டார்.

இந்த நிகழ்வுகளில் தான் பெரியார் உண்மையை உணர்ந்திருப்பார் என நான் நம்புகிறேன்.

இதே போன்றதொரு அனுபவம் நிச்சயமாக அப்போதிருந்த பெரிய மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கத்தான் செய்யும். அவர்களில் பலர் அதில் லயித்திருக்க பலர் அதை அப்படியே விட்டுவிட இராமசாமி என்ற ஒரு சிறுவன் மட்டும் தான் தன்னுடைய வாழ்வின் லட்சியமாகவே சாதியத்தை எதிர்ப்பதை மாற்றிக்கொண்டான்.

தொடரும்…

 


Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *