டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் திருநங்கை வெற்றி பெற்று அசத்தல் | ஸ்வப்னா
ஒருகாலத்தில் பெண்கள் எப்படி தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெற வேண்டிய சூழல் நிலவியதோ அதைப்போலவே திருநங்கைகள் தற்போது தடைகளை உடைத்தெறியவேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. அதனை பல திருநங்கைகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஸ்வப்னாவை போல!
திருநங்கைகள் அல்லது மூன்றாம் பாலினத்தவர்கள் என்போரும் சக மனிதர்களே, மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அது அவர்களுக்கும் இருக்கிறது. இந்த வாக்கியங்கள் சட்ட புத்தகங்களில் இருந்தாலும் எதார்த்தத்தில் என்னவோ அவர்கள் மதிக்கப்படுவதும் இல்லை, அவர்களுக்கான உரிமைகள் கொடுக்கப்படுவதும் இல்லை. ஆனாலும் அவர்களில் பலர் தடைகளை உடைத்தெறிந்து சாதனைகளை படைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் திருநங்கை ஒருவர் காவல்துறை துணை ஆய்வாளராக பதவியேற்று “பிரித்திகா யாஷினி” சாதனை படைத்தார். தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று திருநங்கை ஸ்வப்னா சாதனை படைத்திருக்கிறார்.
இரண்டு திருநங்கைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தடைகளையும் சட்டப்போராட்டங்களையும் நடத்தியே வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல தடைகளை தாண்டி இவர்களால் சாதனை படைக்க முடிந்த போது உங்களால் ஏன் முடியாது? இவர்களை முன்னுதாரணமாகக்கொண்டு முயற்சி செய்திடுங்கள், வெற்றி பெற்றிடுங்கள்.
ஸ்வப்னா அவர்களின் சாதனைப்பயணம்
தமிழில் இளங்கலை பட்டம் பெற்ற மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா 2013 ஆம் ஆண்டு TNPSC நடத்திய தேர்வில் பங்கேற்க முயன்றார். ஆனால் அவருக்கு பாலின அடையாளம் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அறவழி போராட்டம் மற்றும் நீதிபோராட்டம் என தனக்காக நீதி கேட்டு போராடினார். வழக்கம் போல நீதிமன்றம் தலையிட்டு தான் அவருக்கான அனுமதியை வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் அவரை தேர்வில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அவருக்கு மட்டுமல்ல, மூன்றாம் பாலினத்தவர்கள் எவரும் தேர்வில் பங்குகொள்ள அனுமதிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னர் இட ஒதுக்கீடு பிரச்னைக்காகவும் அவர் நீதிமன்ற கதவுகளை தட்ட வேண்டி இருந்தது. அப்போது மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் MBC பிரிவின் கீழ்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்படி கொடுக்காமல் அவரவர் எந்த பிரிவுகளின் கீழ் வருகிறார்களோ அவர்களுக்கு அத பிரிவுகளுக்குள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். பின்னர் TNPSC விதிமுறைகளில் மாற்றமும் செய்யப்பட்டது.
மார்ச் 2018 ஆம் ஆண்டு, Group II A தேர்வில் வெற்றி பெற்றார் ஸ்வப்னா. இவர்தான் இந்தியாவின் முதல் திருநங்கை non gazetted officer. ஆரம்ப காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பதிவுத்துறையில் பணி பெற்ற இவர் பின்னர் மதுரைக்கு வணிக வரி துறைக்கு பணி மாறுதலானார். இடையே இவர் குரூப் 1 தேர்வையும் எழுதியிருந்தார்.
இதில் அவர் 850 மதிப்பெண்களுக்கு 489.75 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்தார். இந்த வெற்றிக்கு பிறகு அவர் விரும்பினால் காவல்துறையில் DSP பணியினை பெறலாம் அல்லது தற்போது பணி செய்கிற துறையிலேயே பதவி உயர்வு பெறலாம். அது அவரது விருப்பம் சார்ந்தது.
தனது வெற்றிக்கான முழு காரணமாக தனது அம்மாவை குறிப்பிடுகிறார் ஸ்வப்னா. அவரது அம்மா பிச்சையம்மாள் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றுகிறார். மேலும் தனது பயணம் குறித்து பேசும் ஸ்வப்னா, சிறிய சிறிய சாதனைகளை எல்லைகளாகக்கொண்டு ஒவ்வொன்றையும் செய்து முடிக்கிறேன், நான் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. எனது முதல் அரசுப்பணி சம்பளத்தை பெறுவதற்காகத்தான் எனக்கான வாங்கிக்கணக்கையே துவங்கினேன். ஒவ்வொருவரும் அடுத்தவர்களை சார்ந்துதான் இருக்கவேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும் போது நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது சரியான முறை அல்ல என்றும் போராடி வெற்றி பெறுவது தான் தீர்வு என ஸ்வப்னா தெரிவிக்கிறார்.
இந்தக் கட்டுரையை படிக்கும் உங்களுக்கு ஒரு உத்வேகம் பிறந்திருக்கும் என நம்புகிறேன். உங்களது வாழ்த்துக்களையும் கருத்துகளையும் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!