சிலைகள் இருக்கு கழிப்பறைகள் இல்லை
தேசத்தை கட்டமைத்தவர்களில் முக்கியமானவரான சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை குஜராத்தில் நிறுவப்பட்டதற்கு பின்பாக பல மாநிலங்கள் ராமர் சிலை அமைக்கப்போகிறோம் என தொடங்கி சிலை நிறுவுதலை ஒரு தொடர் செய்கையாக மாற்றிக்கொள்ள தொடங்கியிருக்கின்றனர் .
சிலைகள் அமைப்பது நமது கலாச்சார அடையாளங்களை பிரதிபலிப்பது , முற்றிலும் தவறானது என சொல்லவில்லை . ஆனால் அடிப்படை தேவைகளே இன்னும் பூர்த்தி அடையாமல் இருக்கும்போது இதுபோன்ற காரியங்களில் மிகப்பெரிய அளவிலான மக்கள் பணத்தை சிலைகளாக்குவதென்பது நியாயமா என்பதுதான் எனது கேள்வி .
கழிப்பறைகள் எங்கே ?
உணவு , உடை , உறைவிடம் எப்படி ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக கிடைக்கவேண்டியதோ அதனைப்போலவே சுகாதாரமான கழிப்பறைகளும் அவசியம் . ஆனால் இந்தியாவில் எங்கேயாவது நிம்மதியாக சென்றுவரக்கூடிய கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளனவா என்றால் ஓரிடத்தைக்கூட காட்ட முடியாது .
இலவச கழிப்பறைகள் அமைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன . ஆனால் அமைக்கப்பட்டவுடன் அவ்வளவுதான் , அதனை கண்டுகொள்வதில்லை .
சிலை கலாச்சாரத்தைவிட கழிப்பறை கலாச்சாரம் அவசியம்
ஒரு சிலை அமைக்கப்பட்டவுடன் அடுத்தடுத்த சிலைகளை அமைக்க பல மாநில அரசுகள் முன்வருகின்றன . ஆனால் கழிப்பறைகள் அமைப்பதை எந்தவொரு அரசும் விருப்பதோடு செய்வதில்லை , ஏதோ ஆண்டுக்கு இவ்வளவு கட்டியாகவேண்டும் என்பதினால் மட்டுமே கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . அதிலும் பல கட்டண கழிப்பறைகளாக மாறிக்கொண்டு இருக்கின்றன .
ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணம் செய்தால் கழிப்பறைக்காகவே 10 முதல் 20 ரூபாய் ஒதுக்க வேண்டும்
பயண நேரங்களில் கண்ட இடங்களில் பேருந்தை நிறுத்தி ஆண்களால் உபாதைகளை கழிக்க இயலும் . பெண்களால் முடியாது .
பணம் இருந்தால் மட்டுமே இயற்கை உபாதைகளை கழிக்க இயலும் என்பது மிக மோசமானது .
ஆகவே அனைத்து அரசாங்கங்களும் சிலைகளை அமைப்பதில் காட்டுகின்ற அக்கறையை பொது கழிப்பிடங்களை அமைப்பதிலும் காட்டிட வேண்டும் .