பிரிவினைவாதம் இந்தியாவிற்கு அழகல்ல! நமக்கான இந்தியாவை உருவாக்க நாம் விழித்துக்கொள்வோம்
நபிகள் பற்றிய நிபுர் சர்மாவின் அவதூறு கருத்துக்கு அரபு நாடுகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவர் சார்ந்த பாஜக, இதனை அவரது சொந்தக்கருத்து என சொல்லி அவரது கருத்துக்காக அவரை இடைநீக்கம் செய்தாலும் கூட எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் எதிராகவே வந்துள்ளது என்பதை இந்திய மக்கள் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டும். இந்தியா என்றால் வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு என்கிற மேன்மைத்தன்மை கொண்டது நம் நாடு. ஆனால் இன்று அந்த நிலமை மெல்ல மெல்ல மாறி வருகிறது. இந்தியாவை சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வு கொண்ட நாடாக பார்க்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. இது மாற வேண்டாமா?
பிரதமர் மோடி அவர்கள் தீவிரமான கருத்துக்களை தெரிவிக்காமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வலியுறுத்தும் விதத்தில் பேசினாலும் கூட பாஜகவின் அடுத்தகட்ட முக்கிய தலைவர்கள் தெரிவித்துவரும் கடுமையான கருத்துக்கள் நாட்டில் பிரச்சனைகளை தூண்டி விடுகின்றன.
இப்போதும் கூட, அரபு நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்த நபிகள் பற்றிய அவதூறு கருத்துக்களை கூறியவர் பாஜகவின் கடைநிலை உறுப்பினர் இல்லை. நிபுர் சர்மா, டெல்லி பாஜகவில் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்த மிக முக்கியமான நபர். நன்கு படித்தவர், அரசியல் தெரிந்தவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போட்டி போட்டவர் என பிரபலமான அரசியல்வாதி. அவர் தான் இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நமக்கான இந்தியாவை உருவாக்குவோம்
பிரதமர் மோடி அவர்கள் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அரபு நாடுகள் பலவற்றுக்கு பயணித்து நல்லுறவை மேம்படுத்தினார். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவரது கட்சியின் முக்கியஸ்தர் பேசிய கருத்தால் நிலமை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இது அவருக்கும் பெரும் சிக்கல் தான் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படி பிரிவினையை உருவாக்கும் கருத்துக்களை பாஜகவினர் பேசுவது முதல் முறையல்ல என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவ்வப்போது இப்படி பிரிவினைவாத கருத்துக்களை அவர்கள் பேசிக்கொண்டே வந்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பதிலாக அவர்கள் பல நேரங்களில் பொறுப்புகள் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளார்கள். இந்தபோக்கு தான் பிறரையும் அதே வழியில் பயணிக்க தூண்டுகிறது.
முன்னேற்றத்தை பற்றி பேசும் பிரதமர் அவர்கள் “ஒற்றுமையில்லாத தேசத்தால் முன்னேற்றம் அடைய முடியாது” என்பதை உணர வேண்டும். ஆகவே, தனது அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் கருத்து தெரிவிப்பதை, செயல்படுவதை அவர் தடுக்க வேண்டும். முன்னேற்றத்தை தருவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு அதை நிறைவேற்றும் வகையில் பிரதமர் அவர்கள் செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியாவின் அடிப்படை சக்தியே அதன் பன்முகத்தன்மை தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கு எந்தவித ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொண்டாலே இந்தியா வளர்ச்சி அடையும் என்பதை இப்போதாவது நம் பிரதமர் உணர்வார் என நினைக்கிறேன்.
மக்களால் உருவானது தான் இந்த நாடு. மக்கள் வாக்களித்து தான் ஆள்பவரை தெரிவு செய்கிறோம். அப்படி இருக்க யார் ஒற்றுமையை வளர்க்க நினைக்கிறார்களோ அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. வருங்கால தலைமுறைக்கு நல்லதொரு இந்தியாவை உருவாக்கி கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாம் மறக்க கூடாது.
விழித்துக்கொள் இந்தியனே! நமது வாக்கு எப்போது ஒற்றுமையான இந்தியாவை உருவாக்கும் ஒருவருக்காக இருக்க வேண்டும் என உறுதி ஏற்போம்
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்