செண்பக வாசனை – கீர்த்தியின் புத்தகம் – அழகான நாவல்

14 மாறுபட்ட சூழல்களில் நடக்கும் கதைகளை மையமாக கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் எதிர்பாராத முடிவுகளைக் கொண்டிருக்கிறது. ஒரு மாலைப்பொழுதில் படிக்கக்கூடிய அழகான நாவல் செண்பக வாசனை.

அழகிய மாலைப்பொழுதினில் ஒரு கப் டீயுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு படிக்கவேண்டிய அழகிய 14 கதைகளை கொண்டிருக்கின்ற எழுத்தாளர் கீர்த்தி அவர்களின் செண்பக வாசனை புத்தகம் பற்றிய சிறு அறிமுகம் . கற்பனை பாத்திரங்களைக்கொண்டு மக்களுக்கான கதைகளை படைப்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என குறிப்பிடும் ஆசிரியர் நமது வீட்டிற்கு அருகே இருக்கும் நபர்களைப்போன்றே கதாபாத்திரங்களை வடிவமைத்து இருக்கிறார் .

இந்தக்கதைகளின் ஏதாவது ஒரு பகுதிகூட வாசகர்களின் மனதை தைத்தால் அது தனக்கு வெற்றியென்று கூறும் ஆசிரியர் அதனை ஒவ்வொருகதைகளிலும் அடைந்துவிட்டார் என்றே கருதுகின்றேன் .

இந்தப்புத்தகம் பின்வரும் 14 கதைகளை கொண்டிருக்கிறது,

 செண்பக வாசனை

இன்னும் மிச்சமிருக்கிறது

இதுதான் கிராமம்

புற கவனம்

குளத்து மீன்கள்

மோளிக்கம்மை

சௌபார்ணிகா

ஒரு காதலும் சில கவிதைகளும்

சில கனவுகளும் நானும்

ஆழம்

தீபாவளி

கண்ணிருந்தும்

நந்தியாவெட்டை

மூடி வைத்த பூ

செண்பக வாசனை - கீர்த்தி யின் புத்தகம்

செண்பக வாசனை என்று புத்தகத்திற்கு ஆசிரியர் முதல் கதையின் நாயகி பெயரைக்கொண்டு தான் வைத்திருப்பார் போலும். முதல் கதையான செண்பக வாசனையில் வேணு, முத்து, செண்பகம் எனும் மூன்று நபர்களை கொண்டுதான் கதை நகர்கிறது. இதில் வேணு எனும் பணக்கார வீட்டுப்பையன் எப்போதும் ஆபாசமான பேச்சுக்களையே பேசுபவனாக இருக்கிறான். முத்து உடன் படிக்கும் மாணவராக இருந்தாலும் வேணுவின் இப்பேச்சுக்கள் அவனுக்கு பிடிப்பதில்லை. அப்படி இருக்கும் போது முத்து வீட்டிற்கு அருகே இருக்கும் செண்பகம் அக்காவை [கணவனை இழந்து குழந்தையோடு வாழும் பெண்] பற்றி வேணு தவறாக பேசிவிட இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படுகிறது. காரணம், முத்து செண்பகம் அக்காவின் மீது அவ்வளவு நம்பிக்கையும் நன்மதிப்பும் வைத்திருந்தான். ஒருநாள் செண்பகம் வீட்டிற்கு அம்மா கொடுத்தனுப்பிய 200 ரூபாயை முத்து கொண்டு செல்கிறான். கதவிற்கு அருகே செல்லும் போது வீட்டிற்கு உள்ளே செண்பகம் உடன் வேணு பேசிக்கொண்டு இருக்கும் சத்தம் கேட்கிறது.

மிகவும் சுருக்கமாக சொல்லப்பட்ட இதனை படித்த உங்களுக்கே இந்த சூழலை முத்து எப்படி அணுகியிருப்பான் என்ற கேள்வி எழுகிறதல்லவா. நேரடியாக புத்தகத்தில் கதையை வாசித்தால் சிக்கலான மன நிலைக்கு நம்மை அது இட்டுச்செல்லும். அங்கே ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதா? நாம் நினைப்பதாலேயே மற்றவர்கள் அப்படிதான் இருக்கவேண்டும் என நினைக்கலாமா? என்ற பல்வேறு கேள்விகள் முத்து விற்கு ஏற்படும். கூடவே நமக்கும்.

இரண்டாவதாக இருக்கக்கூடிய இன்னும் மிச்சமிருக்கிறது என்ற கதையில், மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்து தகர்க்க செல்லும் இரண்டு போராளிகள் [காதலர்களும் கூட] கடைசி பத்து நிமிடங்களில் ஒரு குழந்தையின் அன்பான பேச்சில் மனம் மாறி போலீசாருக்கு தகவல் தெரிவித்து பெரும் உயிரிழப்பை தவிர்ப்பதனை அழகாக சொல்லியிருப்பார். கொடியவர்களுக்கு பயப்படுகிற நாம் நேர்மையாக இந்த பூமியில் மறைந்து வாழ ஒரு இடம் இல்லாமலா போகும் என கேள்வி எழுப்பிடும் போது “எந்தப்பக்கம் காணும் போதும் வானம் உண்டு…” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

எட்டாவது கதையாக இருக்கக்கூடிய ஒரு காதலும் சில கவிதைகளும் எனும் கதையின் முடிவு நீங்கள் எதிர்பார்த்து இருக்க முடியாதது. மிருணாளினி எனும் ஒரு பெண்ணை வாசுதேவன் எனும் இளைஞன் காதலிக்கிறான். அப்பாவை இழந்து ஒரு மாளிகைக்கடையில் வாழுகிற வாசுதேவனின் கவிதைகளில் மிருணாளினி மயங்கி காதலிக்கிறாள். இருந்தாலும் எதிர்காலத்தில் மளிகைக்கடையில் வேலை பார்ப்பவரை விட வங்கியில் வேலை பார்ப்பவர் தான் தனக்கு பொருத்தமானவர் என விலகி விடுகிறாள் மிருணாளினி. தற்கொலை செய்துகொள்ளப்போகும் வாசுதேவனுக்கு அவனது அம்மாவின் நினைவு வர, நாம் மிகப்பெரிய ஆளாக வர வேண்டும் என உறுதிகொண்டு குளத்திற்குள் சென்று மிருணாளினியின் நினைவுகளை மூழ்கி கரைத்துவிட போகிறான். அப்போது அவனது கால்களை குளத்திற்குள் இருக்கும் வேர்கள் பிடித்து இழுக்க உள்ளே மாய்ந்து போகிறான், அப்போது குளத்திற்கு வெளியே நாம் வீசி இருக்கும் கவிதைகளை பார்ப்போர் நான் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாகத்தானே பழி சுமத்துவார்கள் என்ற எண்ணத்தோடு அவன் மூழ்கிப்போகிறான்.

இன்னும் இதுபோன்ற நல்ல பல கதைகளை கொண்டிருக்கிறது செண்பக வாசனை. நீங்கள் படித்திருந்தால் உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *