சாவர்க்கர் – புல் புல் பறவை சர்ச்சை | கடுமையான விமர்சனங்கள் எழ காரணம் என்ன?
கடந்த சில நாட்களாகவே சாவர்க்கர் புல் புல் பறவையில் பறந்ததாக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்து குறித்து கண்டனங்கள், விமர்சனங்கள், நகைச்சுவை மீம்ஸ்கள் என இந்த விசயம் குறித்தே பேசப்பட்டு வருகின்றன. இந்த விசயத்தில் உண்மையில் நடந்தது என்ன? ஏன் இந்தக் கடுமையான விமர்சனம்? வாருங்கள் பேசுவோம்.
சாவர்க்கர் – புல் புல் பறவை சர்ச்சை என்ன?
கன்னட பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை தான் தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கன்னட பாடப்புத்தகத்தில் “களவன்னு கெடவரு” என்ற தலைப்பில் சாவர்க்கர் குறித்து எழுதப்பட்டுள்ளது. இதன் தமிழ் அர்த்தம் “நீரோட்டத்திற்கு எதிராக செல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்” என்பது தான். எழுத்தாளர் கே.டி கட்டி சாவர்க்கர் இருந்த சிறையை நேரடியாக பார்த்த பிறகு அவர் எழுதிய பயணக்குறிப்பு அடிப்படையில் பின்வரும் கருத்துக்கள் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதிலே, சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அந்தமான் சிறையில் மிக மிக சிறிய துளை இருந்தது. அந்தத் துளை இருப்பதை எவராலும் கண்டுணர முடியாத அளவிற்கு சிறிய துளை. ஆனால், அந்தத் துளையின் வழியே புல் புல் பறவைகள் தினந்தோறும் வந்து செல்லும். அந்தப் பறவையில் பறந்து சாவர்க்கர் தினந்தோறும் தனது தாய்நாட்டிற்கு வந்து செல்லுவார் என இடம்பெற்றுள்ளது. இதுதான் சர்ச்சைக்கு மிக முக்கியக்காரணம். பாஜக ஆளும் கர்நாடகாவில் பாடப்புத்தகத்தில் இப்படியொரு உரை இடம்பெற்றுள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
சாவர்க்கர் குறித்த மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை சரியா?
சாவர்க்கர்க்கு ஆதரவான நிலைப்பாட்டை மத்தியில் ஆளும் பாஜக கட்சி கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆகவே, அவர்களிடத்தில் இருந்து சாவர்க்கருக்கு ஆதரவான கருத்துக்கள் எழுவது இயற்கையான ஒன்று தான். ஆனால் இப்போது எழுந்துள்ள சர்ச்சையை பாஜகவே கூட முழு மனதோடு ஆதரிக்காது. சாவர்க்கர் குறித்த மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை சரியா என கேட்டால் “தவறு” என அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடலாம்.
காரணம் மிக எளிது. சார்வர்க்கர் குறித்த மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை ஏதோ ஒரு சமூகவலைதள பக்கத்திலோ நாளிதழிலோ வெளிவரவில்லை. அது மாணவர்கள் படிக்கும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அது தான் தவறு. சாவர்க்கர் குறித்த கட்டுரை பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என நினைத்தால் அதனை இடம்பெற செய்துகொள்ளலாம். ஆனால், அது வரலாற்று உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால், சாவர்க்கர் குறித்த இந்தக்கட்டுரை எள்ளளவும் உண்மை இல்லாத மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை.
கண்ணுக்கே புலப்படாத ஒரு துளையின் வழியே ஒரு பறவை வந்து செல்லும் என்பது ஒரு பொய் என்றால் அதிலே அமர்ந்து சாவர்க்கர் பறந்து சொந்த நாட்டிற்கு சென்று வருவார் என்பது இன்னொரு பொய். அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் இப்படிப்பட்ட அறிவியலுக்கு ஒவ்வாத பொய்யை மாணவர்களிடத்தில் திணிக்க முற்படுவது தவறான புரிதலை அவர்களிடத்தில் ஏற்படுத்தும். இது தவிர்க்கப்பட வேண்டும், பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
ஆசிரியரின் கற்பனை வள உரை என்கிற பெயரில் வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்வியலில் ஒரு மிகைப்படுத்தப்பட்ட புனைவை சேர்த்து வெளியிடுவது தவறானது. அது மாணவர்களிடத்தில் குழப்பத்தையே உண்டாக்கும்.
அதிகாரிகளின் விளக்கம்
இந்த சர்ச்சை குறித்த விளக்கத்தில், பாடநூல் கழக இயக்குனர் “சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள இந்தக்கருத்தானது ஆசிரியரின் கற்பனை வள உரை. இந்தக்கட்டுரை பாடப்புத்தகத்தில் இடம்பெறுவதை பாடநூல் திருத்தக்குழு எடுத்துள்ளது” என விளக்கம் தரப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
“அரசியல் பழகு”
— பாமரன் கருத்து