RTE : 1 கிமீ விதியால் வாய்ப்பை இழக்கும் ஏழை மாணவர்கள் அரசு கவனிக்குமா?


தனியார் பள்ளிக்கு அருகே 1 கிமீ தொலைவிற்கு உள்ளாக இருந்தால் தான் RTE வாயிலாக இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியால் ஏழை மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது


கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்பது இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை இலவசமாக வழங்குவதை கட்டாயமாக்குகிறது. இதன் மூலமாக 6 வயது முதல் 14 வயது வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு கல்வியை கட்டாய உரிமையாக இந்திய அரசு வழங்கி உள்ளது. 

இதற்கு தனியார் பள்ளிகளும் பங்களிப்பு செய்திடும் விதத்தில் ஒவ்வொரு தனியார் பள்ளியும் தங்களது பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 25% இடத்தை RTE க்கு ஒதுக்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் பிள்ளைகள், குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களின் பிள்ளைகள், பெற்றோர் இல்லாத குழந்தைகள் என அரசு நிர்ணயித்த தகுதி உடையோர் பிள்ளைகளுக்கு பயில இலவசமாக வழங்க வேண்டும். 

அந்த குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து குறிப்பிட்ட பள்ளிகளுக்கு செலுத்தும். 


1கிமீ விதி

அரசின் விதிகளில் முக்கியமான விதியாக இருப்பது “இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் குழந்தை கண்டிப்பாக பள்ளியில் இருந்து 1 கிமீ தொலைவிற்கு உள்ளே வசிக்க வேண்டும்” என்பது தான். 2019 களில் 2-3 கிமீ என்ற அளவில் இருந்ததை அண்மைய ஆண்டுகளாக 1 கிமீ என சுருக்கி உள்ளனர் ஆட்சியாளர்கள்.

ஒரு சாதாரண மனிதராக சிந்தித்துப் பாருங்கள்? தனியார் பள்ளிகள் பொதுவாக நகர்புறங்களில் தான் இருக்கும். கிராமப் புறங்களில் இருந்தாலும் ஒதுக்குப்புறமாகவே இருக்கும். நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றலவுக்கு உள்ளே இருக்க வேண்டும் எனில் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் ஒருவரால் அது சாத்தியமா?
கிராமப்புறங்களில் பள்ளிக்கு அருகே ஊரை விட்டுவிட்டு இதற்காக வீடு கட்ட முடியுமா?

இந்த விதி எவ்வளவு முட்டாள்தனமானது என பாருங்கள். முற்றிலும் இது தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக RTE மூலமாக மாணவர்கள் சேருவதை தடுப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட விதி என்பது தெளிவாகிறது.


வீணாகும் இடங்கள் பறிபோகும் வாய்ப்புகள்

தமிழகத்தில் மட்டும் சுமார் 9000 தனியார் பள்ளிகளில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் RTE க்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த 1 கிமீ விதியின் காரணமாகவே பல மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளிகள் நிராகரித்து விடுகின்றன. இதனால் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான இடங்கள் வீணாகி விடுகின்றன. 

எளியவர்களுக்கு உதவும் விதத்தில் கொண்டுவரப்பட்ட RTE சட்டத்தின் பலனை மக்கள் அனுபவிக்க முடியாத விதத்தில் இருக்கும் இந்த விதியை உடனடியாக அரசு மாற்ற வேண்டும். கிராமப்புற மாணவராக இருந்தால் 10 கிமீ தொலைவில் இருந்தாலும் இடம் வழங்க வேண்டும் என சட்டத்தை மாற்ற வேண்டும். 

ஒவ்வொருவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். எனது கடமையை நான் செய்துவிட்டேன். உங்களுக்கு இதை தெரியப்படுத்தி விட்டேன். உங்களது பணி இந்த அவலத்தை பிறருக்கு தெரியப்படுதுவதே. 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *