Lockdown : புதுக்கோட்டை டூ திருச்சி பயண அனுபவம்
இந்தியா முழுமைக்கும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மருந்து வாங்குவதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்தேன். அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
மாதந்தோறும் எனது அப்பாவிற்கு திருச்சியில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை வாங்குவது வழக்கம். இந்த மாதத்திற்கான நாள் வந்தது. பேருந்து எதுவும் செல்லமுடியாது என்பதாலும் மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் வராத காரணத்தினாலும் கடந்த மாதம் கொடுத்த மாத்திரையையே இந்த மாதமும் தொடருமாறு மருத்துவமனையில் இருந்து சொல்லிவிட்டார்கள். அதற்காக மருந்தகம் மட்டும் அங்கே செயல்பட்டு வந்தது.
நான் தான் சென்று மருந்து வாங்கிவர வேண்டிய கட்டாயம். ஆனால் எப்படிப்போவது? ஏற்கனவே காவல்துறையினரின் கெடுபிடிகள் ஏராளமாக இருக்கின்றன. நாம் உண்மையாகவே மருந்து வாங்கத்தான் செல்கிறோம் என்றாலும் கூட நம்மை எப்படி நம்புவார்கள். அவர்கள் மேல் தவறில்லை, எத்தனை பேர் இதே காரணத்தை சொல்லி ஏமாற்றவும் செய்திருப்பார்கள். அப்போதுதான் அரசின் அறிவிப்பு ஒன்றினை பார்த்தேன். அவரச காலத்தில் வெளியே செல்வதற்கு Vehicle e-Pass ஆன்லைனில் வாங்க முடியும் என்ற அறிவிப்பு தான் அது. நீங்களும் வாங்க நினைத்தால் அதற்கான வழிமுறைகளை இங்கே படியுங்கள்.
ஏற்கனவே நம்மிடம் மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் இருந்தபடியால் எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்று சாதாரணமாக முதலில் பதிவு செய்தேன். நான் “supporting documents” அதாவது நான் சொல்லும் காரணத்தின் உண்மைத்தன்மையை விளக்குவதற்கான சான்றிதழ் பகுதியில் வெறுமனே மருத்துவமனையில் கொடுத்த முகப்பு அட்டையை பதிவிட்டன். அவர்கள் எனது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார்கள். காரணம், போதுமான சான்றிதழ் இல்லை என்பதனால் தான்.
இரண்டாவது முறை மீண்டும் முயற்சி செய்தேன். இந்தமுறை சரியான சான்றிதழ்களை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து கடந்த மாதம் சிகிச்சை பெற்ற ரசீது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அனுப்பினேன். நாம் நம்பியதைப்போலவே அவர்கள் எனக்கு அனுமதி கடிதம் வழங்கினார்கள். வெறும் 2 முதல் 3 மணி நேரங்களிலேயே அனுமதிக்கடிதம் வழங்குகிறார்கள். அவர்கள் எந்த அடிப்படையில் யாரிடம் தகவலை உறுதிப்படுத்திக்கொண்டு அனுமதிக்கடிதம் வழங்குகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஏதோ ஒரு முறையை பின்பற்றுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
நேற்று [ஏப்ரல் 10,2020] மாலை 4.30 மணி அளவில் எனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். அப்போது எனது நண்பர் ஒருவர் என்னை மறித்தார், Lockdown நேரம் அதனால் விளையாடக்கூட வராத நீ எங்கேயப்பா புறப்பட்டுவிட்டாய் என்றார். நான் திருச்சிக்கு செல்கிறேன் என்றேன். போலீசார் கேட்பதற்கு காண்பிக்க சரியான ஆவணங்கள் வைத்திருக்கிறாயா என்றார், நான் பர்மிட் வாங்கியிருக்கிறேன் என சொல்லி கிளம்பினேன்.
எனது ஊரில் இருந்து திருச்சியில் நான் போகவேண்டிய இடத்திற்கு 60 கிலோமீட்டர். நான் செல்வதற்கு அரசின் அனுமதிக்கடிதம் வைத்திருந்தாலும் கூட எத்தனை இடத்தில் நம்மை நிறுத்துவார்கள், அவர்கள் நாம் அனுமதிக்கடிதம் காண்பிக்கும் வரை பொறுமை காப்பார்களா என்றே எண்ணிக்கொண்டு சென்றுகொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர்கள் வரை எந்த காவலர்களையும் நான் பார்க்கவில்லை. திருச்சி மாவட்ட எல்லை ஆரம்பிக்கும் தருவாயில் தான் முதல் முறையாக போலீசார் வாகனங்களை நிறுத்திக்கொண்டு இருந்தார்கள்.
நான் வெளியில் சென்றுவிட்டு திருச்சி திரும்புவதாக நினைத்துக்கொண்ட அவர்கள் “எங்க போயிட்டு வறீங்க?” என்று தான் முதல் கேள்வி கேட்டார்கள். “இப்போதான் சார் திருச்சிக்கு மருந்து வாங்க ஹாஸ்பிடலுக்கு போறேன். பர்மிட் வாங்கியிருக்கிறேன்” என ஒரே வாக்கியத்தில் அனைத்தையும் சொல்லிவிட்டேன். அப்படியா காட்டுங்கள் என்றார்கள். மொபைலில் நான் வைத்திருந்த பர்மிட்டை காட்டினேன். “சரி போங்க, ஆனால் நீங்கள் திருச்சி போவதற்குள் இன்னும் மூன்று செக்போஸ்ட்களை தாண்ட வேண்டும்” என சொல்லி அனுப்பினார்கள்.
அவர்கள் சொன்னது போலவே அடுத்தடுத்து மூன்று செக்போஸ்ட்களை பார்க்க முடிந்தது. அதில் இரண்டு செக்போஸ்ட்களில் என்னை நிறுத்தவில்லை, பெரிய வாகனங்களை நிறுத்திதான் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். மூன்றாவது செக்போஸ்டில் நிறுத்தினார்கள். அதே கேள்வி அதே பதில் தான். சரி, எப்படியோ திருச்சிக்குள் வந்துவிட்டோம் இனி இருக்காது என நினைத்துக்கொண்டு டிவிஎஸ் டோல்கேட்டில் நுழைந்தால் பாலத்திற்கு அடியிலேயே காவலர்கள் நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்கள் திருச்சியில் இருந்து வருபவர்களை சோதித்துக்கொண்டு இருந்தார்கள். ஆகவே நான் சென்றுவிட்டேன்.
அடுத்தது, போஸ்ட் ஆபீஸ் சிக்னல். அங்கு எனது வண்டி போல இன்னொருவரும் நின்றுகொண்டு இருந்தார். அவர் மொபைலை காட்டி எதையோ காவல்துறை அதிகாரியிடம் காட்டிக்கொண்டு இருந்தார். “எல்லாரும் இப்புடி மொபைல் போனையே காட்டிட்டு போனா நாங்க என்னதான் பன்றது” என சொல்லி அவரை அனுப்பினார். நானும் எனது போனை எடுக்க அருகில் இருந்த இன்னொரு காவலர் “சார் இந்த தம்பியும் மொபைல் காட்டுறாரு சார்” என்றார். “சார் நான் மருந்து வாங்க போறேன், பர்மிட் வாங்கி வச்சுருக்கிறேன் சார்” என்றேன். எங்கே காட்டுங்கள் என்று என்னுடைய மொபைலை வாங்கி பார்த்துக்கொண்டு இருந்தார். எனது அடையாள அட்டை, வாகனத்தின் எண் உள்ளிட்ட பலவற்றையும் அவர் பார்த்துவிட்டு செல்ல அனுமதித்தார்.
அடுத்து MGR சிலை, அனைத்தையும் காட்டிவிட்டு 2 கிலோமீட்டர் கூட வந்திருக்க மாட்டேன். இன்னொரு காவல் துறை அதிகாரி நிறுத்தினார். “நான் ஹாஸ்ப்பிடலுக்கு மருந்து வாங்க போகிறேன்” என்றேன். அவர் எனது அடையாள அட்டையை காட்ட சொன்னார். நானும் எனது ஓட்டுநர் உரிமத்தை காட்டினேன். உடனே அருகில் இருந்த இன்னொரு காவல்துறை அதிகாரியிடம் இந்த வாகனத்தை ஓரங்கட்டுங்கள் என்றார். அவர் என்னை தவறாக புரிந்துகொண்டார் என தெரிந்துகொண்டு “சார், நான் மருத்துவமனைக்கு செல்கிறேன். பர்மிட் வச்சுருக்கேன்” என்றேன். பார்த்துவிட்டு என்னை அனுப்பினார். [அவர் என்னை முதலில் மெடிக்களில் வேலை பார்ப்பவர் என நினைத்திருக்கலாம்]
அடுத்த வெறும் 500 மீட்டரில் இன்னொரு சோதனை சாவடி வந்தது. அங்குள்ள அதிகாரி மிகவும் பொறுமையாக நான் சொல்ல சொல்ல ஒவ்வொரு ஆவணமும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொண்டு வந்தார். பர்மிட், ஓட்டுநர் உரிமம் துவங்கி எனது அப்பாவின் மருத்துவ குறிப்புகள் வரை அனைத்தையும் பார்த்துவிட்டு தான் தில்லை நகருக்குள் அனுமதித்தார். அதற்கடுத்த 20 அடி தூரத்தில் இன்னொரு போலீஸ் அதிகாரி எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டார். நான் இப்போது தான் அனைத்தையும் அங்கே காட்டினேன் என்றவுடன் உள்ளே செல்ல அனுமதித்தார்.
இறுதியாக மருத்துவமனையை அடைந்து மருந்துகளை வாங்கிக்கொண்டு புறப்பட்டேன். மீண்டும் அதே சோதனைசாவடிகளை நடந்துவர வேண்டிய தேவை இருந்தது. ஆனால் ஏற்கனவே என்னை சோதித்திருந்தபடியால் இப்போது சில இடங்களில் செல்ல அனுமதித்தனர். புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையும் போது சோதனை செய்தார்கள். அவர்கள் என்னுடைய பர்மிட் மற்றும் மருந்துகளை பார்த்துவிட்டு எப்போது உள்ளே போனீர்கள் என்றார்கள். நான் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக என்றவுடன் புதுக்கோட்டைக்குள் நுழைய அனுமதி தந்தார்கள். வரும் போது ஒரு VAO அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு அம்மாவை குளத்தூரில் இறக்கி விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்களையும் ஏற்றிக்கொண்டு வந்து சேர்ந்தேன்.
இதில் இரண்டு விசயங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
முதலாவது, காவல்துறை அதிகாரிகள் செய்திகளில் காட்டுவது போல கடுமையாக நடந்துகொள்ளவில்லை [என் அனுபவத்தில்]. மிகவும் பொறுமையாக அனைத்தையும் பார்க்கிறார்கள். சரியாக இருக்கிற பட்சத்தில் பயணம் செய்ய அனுமதிக்கிறார்கள்.
இரண்டாவது, அத்தனை சோதனைகளையும் கடந்து சென்றுவர மிகவும் முக்கியமானது நான் வாங்கியிருந்த பர்மிட். அது மட்டும் இல்லையெனில் நிச்சயமாக என்னை திருப்பி அனுப்பி இருப்பார்கள். நான் படித்திருக்கிறேன். என்னிடம் கணினி மற்றும் இணைய வசதி உள்ளிட்டவை இருக்கிறது. ஆனால் ஏழை எளிய படிப்பறிவற்ற மக்கள் எப்படி ஆன்லைனில் அப்ளிகேஷன் போட்டு பர்மிட் வாங்க முடியும்? இதனால் உண்மையாலுமே அவசர உதவிக்கு போக வேண்டியவர்கள் கூட வெளியே செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதற்குஅரசு ஒரு எளிமையான வழிமுறையை கொண்டுவரலாம். அதேபோல பொதுமக்களும் அரசு எளிமையான ஒரு வழிமுறையை ஏற்படுத்தி தந்தால் அதனை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இப்போதைக்கு பர்மிட் வாங்க நினைப்பவர்கள் இங்கே கிளிக் செய்து அந்த வழிமுறையை பின்பற்றுங்கள். அந்தப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் இதற்கு உதவலாம். அதையும் தாண்டி உதவி தேவைப்பட்டால் இந்த வாட்ஸ்ஆப் லிங்கை கிளிக் செய்து அதில் கேள்விகளை கேளுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!