ஹெல்மெட், சீட்பெல்ட் போடுவதில் தயக்கமென்ன ? | People should wear helmet and seat belt in Tamilnadu
ஏற்கனவே இருக்கின்ற மோட்டார் வாகன 1988 பிரிவு 177 இன் படி இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என வலியுறுத்துகின்றது . ஆனால் அன்றாடம் நாம் காண்கின்ற காட்சியோ வேறுவிதமாக , பெரும்பாலனவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர் . பலமுறை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டும் தமிழக காவல்துறை, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதை உறுதிப்படுத்தவில்லை .
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது . இருவரும் ஹெல்மெட் அணிந்துசெல்லவேண்டும் என்கிற உத்தரவினை காவல்துறை முறையாக செயல்படுத்தவில்லை என கடிந்துகொண்ட நீதிபதிகள் மீண்டும் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டனர் .
அதிரவைக்கும் சாலைவிபத்துக்களின் எண்ணிக்கை ?
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை மட்டும் 38491 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன . இருசக்கரவாகனங்கள் ஏற்படுத்திய விபத்து 15601 . மொத்த விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7526 . இருசக்கர வாகன விபத்தில் மட்டும் 2476 பேர் இறந்துள்ளனர் .
ஹெல்மெட் , சீட்பெல்ட் போடுவதில் தயக்கமென்ன ?
ஒவ்வொரு ஆண்டும் வாகனப்பெருக்கம் கடுமையாக அதிகரித்துவருகிறது . அதனைப்போலவே வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் அதில் இறக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவது கவனிக்கவேண்டிய விசயம் . இதில் பல மரணங்களை ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள் .
விதிப்படி ஹெல்மெட் , சீட்பெல்ட் அணிவது கட்டாயம் என இருந்தாலும் இன்றும் பொதுமக்களில் பலர் அணிவது கிடையாது .
ஏதோ போலிசாருக்காருக்காக அணிவது போன்று சிலர் வெறுப்பாக அணிகின்றனர்
சிலர் வாகனத்தின் முன்பக்கத்திலோ அல்லது ஓரத்திலோ தொங்கவிட்டுக்கொண்டு செல்கின்றனர் .
பலர் வீட்டில் வேண்டுமென்றே ஹெல்மெட்டை வைத்துவிட்டு வருகின்றனர் . அவ்வளவு அலட்சியம் .
ஹெல்மெட் போடுவது நமது உயிரினை காப்பதற்குத்தான் என்பதனை அறியாதவர்கள் இல்லை நம் மக்கள் , அலட்சியம் அவ்வளவுதான் . ஆனால் ஒரு குடும்பமோ , பெற்றோர்களோ நம் மரணத்திற்கு பிறகு தனித்துவிடப்படுகிறார்கள் என்பதனை உணராத அலட்சியவாதிகள் இவர்கள் .
இனியாவது அலட்சியமில்லாமல் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்துகொண்டு வாகனத்தை ஓட்டுங்கள் .
முறையாக செயல்படாத காவல்துறை
நீதிமன்றம் கடிந்துகொண்டபிறகும் கூட சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலேயே இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வதை பார்க்க முடிகின்றது . காவல்துறையினர் இருக்கும்போதே இவை நடக்கின்றன .
இனியாவது ஒட்டுமொத்த காவல்துறையும் கண்டிப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்திலும் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்திருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும் .
பொதுமக்களே நீங்களாக திருந்தாவிட்டால் திருத்திட முடியாது .
விதிகளை கடைப்பிடித்து
விபத்துகளை குறைப்போம்
பாமரன் கருத்து