ஔவை – முருகன் சந்திப்பு நடைபெற்றதா உண்மையாகவே?

அறிவிலே சிறந்ததொரு பெண்களை வரிசைப்படுத்தினால் ஔவையார் அதில் முதலிடம் பிடிப்பார். பாலின பாகுபாடின்றி புலவர் பெருமக்களை வென்று தன் அறிவை மெய்ப்பித்த மூத்த தமிழ்க் கிழவி ஔவை.

முருகன் பெருமை பேசுகின்ற திரைப்படங்கள் பார்க்கும் போது ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என சிறுவன் வடிவில் இருக்கும் முருகன் ஔவையாரிடம் கேட்கும் காட்சியில் ஔவையை அறிவால் வென்றிருப்பார் முருகன். இப்படித்தான் காட்சி அமைப்பு இருக்கும். ஆனால் இலங்கை ஜெயராஜ் இது சம்பந்தமாக அற்புதமான கருத்தை எடுத்துரைத்து இருப்பார் ஒரு பட்டிமன்ற நிகழ்வில். அதையே இங்கே உங்களிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். முழுவதுமாக படித்து முடிக்கும் போது ஏன் ஔவையார் அறிவில் உயர்ந்தவர் என்பதை உங்களால் புரிந்துகொள்ள இயலும்.

ஔவை பாட்டி அதிக பசியுடன் நடந்து வருகிறார். அப்போது வழியில் ஒரு நாவல் மரம் இருக்கிறது. அதன் அடியில் சற்று இளைப்பாறலாம் என அமர்கிறார். அந்த நாவல் மரத்தின் மேலே எருமை மாடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவன் இருக்கிறான். ஒரு வயதான பாட்டி வாட்டமாக மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதைக் கண்ட அவன் பாட்டியிடம் நாவல் பழம் வேண்டுமா எனக் கேட்கிறான். அப்போது தான் ஔவை பாட்டி மேலே பார்க்கிறார்.

பசி வாட்டுகிற இவ்வேளையில் நாவல் பழம் வேண்டாமென்று சொல்லுவார்களா? ஔவையும் தம்பி நாவல் பழம் போடு என்றார். அப்போது மரத்தில் இருந்த சிறுவன் ஔவையிடம் ‘பாட்டி சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக் கேட்டான். சான்றோர் அறிவில் சிறந்தோர் வீற்றிருந்த அவைகள் பலவற்றில் சொல்லால் அறிவால் பலரை வென்றவள் ஔவை பாட்டி. அப்படிப்பட்ட பாட்டிக்கு சிறுவன் சொன்னதில் சந்தேகம் எழுந்தது. யாமறிந்த வரையிலே ‘நாவல் பழத்தை சுட்டு சாப்பிட்டதாக எங்கும் இல்லையே, இவன் என்ன இப்படிக் கேட்கிறான்’ என யோசித்தார் ஔவை பாட்டி.

சிறுவனிடம் இரண்டு பழத்திற்கும் என்ன வித்தியாசம் என்று ஔவை பாட்டி நினைத்திருந்தால் கேட்டிருக்கலாம். ஆனால் தன்னைப்போன்ற அறிவில் உயர்ந்த ஒருவர் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவனிடம் சந்தேகம் கேட்கலாமா என்றெண்ணி ஒரு முடிவை எடுத்தார். நாவல் பழத்தை யாரும் சுட்டு சாப்பிட்டது இல்லை, ஆகவே சுட்ட பழத்தை கேட்டால் விடையை அறிந்துகொள்ள முடியும் என்ற நோக்கில் ‘சிறுவனே எனக்கு சுட்ட பழம் போடு’ என்றார். சிறுவன் உடனே மரக்கிளைகளை உலுக்க, நாவல் பழங்கள் கொட்டின மண் தரையில்.

பசியால் ஏற்கனவே வாடியிருந்த ஔவை பாட்டி மண்ணில் விழுந்த பழத்தை எடுத்து சாப்பிட விரைந்து சென்று எடுத்தார். அப்போது மண்ணில் விழுந்தபடியால் மண் பழத்தில் ஒட்டியிருந்தது. உடனே ஔவை ‘உஉஉஉஉப்’ என ஊதினார். அப்போது தான் ஔவை பாட்டிக்கு நினைவுக்கு வந்தது, சூடான பொருளை சாப்பிடும் போது தானே ”உஉஉஉஉப்’ என ஊதுவோம். எத்தனை அறிவோடு இந்த சிறுவன் இருந்திருக்கிறான் என மெச்சி தன்னை ஒரு எருமை மாடு மேய்க்கின்ற சிறுவன் வென்றுவிட்டானே என எண்ணி மகிழ்ந்தார்.

ஔவை பாட்டிக்கு நேர்ந்த இந்த அனுபவம் அவர் எழுதிய பின்வரும் பாடல் மூலமாகவே தெரிய வருகிறது. ஔவை பாட்டி நினைத்திருந்தால் இந்தத் தோல்வியை மறைத்திருக்கலாம் ஆனால் அவர் செய்திடவில்லை, ஆகவே தான் அவர் பெரும் அறிவாளி எனக் கூறுகிறோம்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி

இருங்கதலித் தண்டுக்கு நானும் – பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிரவு துஞ்சாதென் கண்

அப்படியென்றால் திரைப்படங்களில் முருகன் சொன்னதாக வருகிற காட்சி பொய்யா எனக் கேட்கலாம். நிச்சயமாக பொய்யே, ஒருவேளை ஔவை முருகனை சந்தித்து இருந்தால் நிச்சயமாக இந்தப்பாடலில் முருகன் என குறிப்பிட்டு இருப்பார். ஆனால் மிகத்தெளிவாக கரிய எருமைகளை மேய்கின்ற சிறுவன் எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளபடியால் அங்கே முருகனுக்கு இடமில்லை. பிறகு ஏன் முருகனை அங்கே காட்சிப்படுத்துகிறார்கள் என்றால் ஔவை என்ற அறிவிற் சிறந்த பெண் புலவர் ஒருவர் மாடுமேய்க்கும் சிறுவனிடம் தோற்றதாக சொன்னால் நன்றாக இருக்காதே என்றெண்ணிய தமிழ் நெஞ்சங்கள் தான் மாடு மேய்க்கும் சிறுவனை முருகனாக உருவகப்படுத்திவிட்டார்கள். இதனை இலங்கை ஜெயராஜ் விளக்கிக் கூறினார்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

இன்னும் பல வரலாற்று நிகழ்வுகள் இங்கே
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *