“ஆன்லைன் வகுப்பு” – தேவையா இப்போது?

LKG முதற்கொண்டு கல்லூரி வரைக்கும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் எடுக்கப்படுகின்றன, எடுக்கப்பட இருக்கின்றன. தினக்கூலிகள் வயிற்றுப்பிழைப்புக்கு கஷ்டப்படும் போது ஆன்லைன் வகுப்பு பெற்றோர்களை வதைக்கும் செயலே!
online class in tamilnadu

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போதைய முடக்கத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையறை இன்றி மூடப்பட்டு இருக்கின்றன. கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் அக்கறை செலுத்த துவங்கி விட்டன. எனக்குத்தெரிந்த சில குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஏப்ரல் மாதமே ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்து விட்டார்கள் [உண்மையான கல்வி ஆண்டு ஜூன் மாதத்தில் தான் துவங்கும்]. தற்போது அரசுப்பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழக அரசு தொலைக்காட்சிகளின் வாயிலாக பாடங்களை ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிகிறது.

ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. அதைத்தான் இங்கே விவாதிக்க இருக்கிறோம். உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள். 

பசியா? பாடமா?

online class in tamilnadu

சென்னையை எடுத்துக்கொள்வோம். அங்கே ஏராளமானவர்கள் தனியார் நிறுவனங்களிலும் தினசரி தொழில் செய்தும் தான் பிழைத்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் பெரும்பாலும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வந்தார்கள். இவர்கள் போலவே தான் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருப்பவர்களும். தற்போது அரசு விதித்திருக்கும் ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன.

சிறிய தொழில் செய்து பிழைத்து வந்தவர்கள் முற்றிலுமாக தங்களது தொழிலை விட்டுவிட்டு சொந்த ஊர்களுக்கு திருப்பிவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது வீடுகளுக்கு வாடகை பணம் கொடுக்கவும் அன்றாடம் உணவு உள்ளிட்ட குடும்பத்தேவையையுமே பூர்த்தி செய்திட பெரும்பாடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் ஆன்லைன் வகுப்பு மூலமாக தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் பாடம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தனியார் பள்ளிகள் ஏற்கனவே ஆன்லைன் மூலமாக பாடங்களை எடுக்கத்துவங்கிவிட்டன.

அரசு ஒரு புறம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவு போடுகிறது. மறுபுறம் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக பாடமும் எடுக்க அனுமதி அளிக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு வருமானம் குழந்தைகளிடம் இருந்து பெறப்படும் கட்டணம் மூலமாகத்தான் கிடைக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்பு எடுக்கப்பட்டால் ஆசிரியர்களுக்கு சம்பளம் எங்கிருந்து கொடுப்பார்கள்? மாணவர்களிடம் வசூலித்து தானே கொடுப்பார்கள்.

ஒரு சராசரி குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை பள்ளிக்கட்டணமாக செலுத்தி குழந்தைகளை படிக்க வைத்து வந்தார்கள். ஆனால் இன்று அவர்களின் ஒட்டுமொத்த வருமானமும் தடைபட்டு போயிருக்கிறது. அவர்கள் தங்களது வீடுகளுக்கு வாடகை கொடுக்கவும் உணவு தேவையை பூர்த்தி செய்திடவுமே கடந்த கால சேமிப்புகளையும் கடனை வாங்கியுமே சமாளித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் ஆன்லைன் வகுப்பு மூலமாக மேலும் பெற்றோர்களை புண்படுத்தும் போக்கு அதிகரித்து இருக்கிறது.

ஆன்லைன் வகுப்பில் இருக்கும் சவால்கள்?

பெற்றோருடன் இருக்கும் பள்ளிக்குழந்தை

இங்கு ஆன்லைன் வகுப்பு பற்றி பேசுகிறவர்கள் பல டிகிரி படித்து பல ஆயிரங்களில் சம்பாதிக்கும் பெற்றோர்களை நினைவில் வைத்துக்கொண்டு தான் பேசுகிறார்கள். ஸ்மார்ட் போன் இல்லாத அல்லது ஸ்மார்ட் போன் இயக்கத்தெரியாத, இன்டர்நெட் கார்டு போட்டு பிள்ளைகளை படிக்க வைக்கத்தெரியாத பெற்றோர்களை பற்றி எவரும் சிந்திப்பதே இல்லை. உண்மையில் இப்படிப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் தான் அதிகமாக தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களின் நிலையோ இன்னும் மோசம்.

ஒரு பிள்ளை ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு ஸ்மார்ட் போன் கண்டிப்பாக அவசியம், அதற்கு இன்டர்நெட் கார்டு போடப்பட்டிருப்பது அவசியம், கூடவே பெற்றோர்கள் பிள்ளைகளுடன் போன் முன்பாக அமர்ந்திருப்பபதும் அவசியம். கூடவே பள்ளிக்கு கட்டணம் கட்டுவதும் அவசியம்.

ஆன்லைன் வகுப்பே தவறா?

online class in tamilnadu

கொரோனா பரவல் மிகவும் கடுமையாக இருக்கிறது. நாளை நாம் உயிருடன் இருப்போமா என்றே தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் வறுமையிலும் சோகத்திலும் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆன்லைன் மூலமாக அவ்வளவு அவசரமாக கல்வி கற்பித்தே தீரவேண்டும் என்கிற அவசியம் எங்கிருந்து வந்தது?

சரி, அப்படியே ஆன்லைன் வகுப்பு எடுக்க வேண்டும் என்றாலும் கூட பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு உள்ளிட்ட முக்கிய வகுப்புகளுக்கு மட்டும் எடுக்காமல் LKG முதற்கொண்டு எடுப்பதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது?

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றால் ஆன்லைன் வகுப்பை எப்படி நடத்துவது,அவர்களுக்கு எங்கிருந்து சம்பளம் கொடுப்பது என்ற கேள்வி எழுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களின் கட்டணத்தை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ அரசு ஏன் செலுத்திட கூடாது?

குழந்தைகள் சற்று மெல்ல கல்வி கற்றுக்கொண்டால் பெரிய ஆபத்து ஒன்றும் நடந்துவிடப்போவது இல்லை. பெற்றோர்கள் மிகவும் பரிதாபமானவர்கள். ஆகவே பெற்றோர்களை வதைக்காதீர்கள்.



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *